Monday, September 17, 2018

ஆசிரியப் பணியெனும் புனித வேள்வி!

By வெ. இன்சுவை | Published on : 17th September 2018 02:54 AM

இப்போதெல்லாம் காலையில் செய்தித்தாளைப் பிரித்தால், கொலை, கொள்ளை போன்ற செய்திகளுக்கு இணையாக, "ஆசிரியர் மாணவியிடம் சில்மிஷம்', "பள்ளிச் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை' போன்ற செய்திகளைப் படிக்கும்போது மனம் வலிக்கிறது. இச்செய்திகள் நம் நெஞ்சைச் சுடுகின்றன. சமுதாயத்தை உருவாக்க வேண்டியவர்களே தவறான பாதையில் பயணிக்கிறார்கள் என்று எண்ணும்போது நமக்குக் கோபம் வருகிறது.

சிறந்த மருத்துவர்களையும், பொறியாளர்களையும், விஞ்ஞானிகளையும் மேலாண்மை அதிகாரிகளையும், வழக்குரைஞர்களையும் உருவாக்குவது மட்டுமே கல்வி நிறுவனங்களின் பணி அல்ல. சிறந்த மனிதர்களையும், நற்பண்புகளும் மனித நேயமும் கொண்ட நல்ல குடிமக்களையும் உருவாக்க வேண்டும். பால் வைக்கும் பாத்திரம் அழுக்காக இருந்தால் அதில் இடும் பாலும் திரிந்துபோகுமல்லவா? அதேபோல் தான் மனத்துக்கண் மாசுடையவர்களாக ஆசிரியர்கள் இருந்தால் அவர்களால் நல்ல குடிமக்களை உருவாக்க முடியாது.

புலனடக்கம் இல்லாதவர் துறவறம் மேற்கொள்ளக்கூடாது. அதேபோல சுய ஒழுக்கமும், கட்டுப்பாடும் இல்லாதவர்கள் ஆசிரியர் பணிக்கு வரக்கூடாது. தன்னிடம் பயிலும் மாணவிகளைத் தங்கள் குழந்தைகளாகப் பார்க்க வேண்டாமா? அவர்களிடம் தகாத முறையில் நடந்து கொள்வது எதில் சேர்த்தி? இப்படிப்பட்ட இழி மக்களுக்குத் தங்கள் செயலின் சாதக, பாதகங்கள் தெரியாமலா இருக்கும்? தங்கள் பணியின் புனிதம் புரியாமலா இருக்கும்?

கொலை, கொள்ளை போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை "ரௌடிகள்' என்று நாம் முத்திரை குத்தி விடுகிறோம். தவறு செய்வது அவர்களின் இயல்பு என்றும் எடுத்துக் கொள்கிறோம். ஆனால் ஆசிரியர்கள் தவறு செய்வதை நம்மால் ஜீரணிக்க முடியவில்லை. பிள்ளைகளின் அறிவுக் கண்களைத் திறந்து அவர்களுக்கு ஒழுக்கத்தையும், உயர் பண்புகளையும் போதிக்க வேண்டிய ஆசிரியர்கள் தவறு செய்யலாமா? வேலியே பயிரை மேய்ந்தால் எப்படி? தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கும், ஆன்ம வளர்ச்சிக்கும் தான் மட்டுமே பொறுப்பு என்று ஏன் அவர்கள் உணரவில்லை?

தற்போது ஆசிரியர்-மாணவர் இடையே புரிதல் இல்லை. காரணம் ஆசிரியர்கள் பாடங்களைக் கற்பிக்கும் இயந்திரங்களாக மாறிப் போயினர். தன் மாணவர்களின் பிரச்னைகள், குடும்பச் சூழல், சிலர் கற்றலில் பின்தங்கியுள்ளதற்கு காரணங்கள் என எதைப்பற்றியும் தெரிந்து கொள்வதில்லை. ஆனால், அவர்களின் ஜாதி, இனம் பற்றி முதலில் தெரிந்து கொள்கிறார்கள். அக்கால ஆசிரியர் சமுதாயம் பணத்தைவிட சுய கௌரவத்தைப் பெரிதாக நினைத்தது. ஆரம்பப்பள்ளி ஆசிரியருக்குக் கூட ஊரில் தனி மதிப்பும், மரியாதையும் இருந்தது. ஆசிரியரின் சொல்லுக்கு ஊர் கட்டுப்பட்டது.

தங்கள் வறிய நிலை குறித்து அவர்கள் வருந்தவில்லை. சட்டையின் கிழிசலை மேலே போட்டுக் கொண்டிருந்த கோட் மறைத்தது. கறாரும், கண்டிப்பும் அவர்களின் இயல்பாக இருந்த போதிலும் பிள்ளைகள் அவர்களை நேசித்தார்கள். அதற்குக் காரணம் கற்பித்தலில் அவர்களுக்கு இருந்த ஈடுபாடே ஆகும். தங்கள் தொழில் மீது அவர்களுக்குப் பக்தி இருந்தது. தம் மாணாக்கரின் முழு திறமையையும் வெளிக் கொணர்வது தங்களது கடமை என்று நினைத்தார்கள். "இவர்கள் என் மாணவர்கள் மட்டுமல்ல என் குழந்தைகளும் கூட. இவர்கள் வாழ்வு வளம் பெற என் அறிவையும், அனுபவத்தையும் பயன்படுத்துவேன். கல்வியோடு நற்பண்புகளையும் ஊட்ட வேண்டியது என் கடமை' என்றே உறுதியேற்றார்கள்.

வாசிப்பு மட்டுமே அவர்களின் மூச்சாக இருந்தது. கண்டிக்கும்போது கண்டித்து, கனிவு காட்ட வேண்டிய நேரத்தில் கனிவு காட்டி பிள்ளைகளை அரவணைத்துச் சென்றனர். எனவேதான் ஆசிரியர்கள் மாணவர்களை தண்டித்தபோது, பெற்றோர்கள் சண்டைக்கு வரவில்லை; மாணவர்களும் தற்கொலை செய்து கொள்ளவில்லை. ஆசிரியர் கண்டித்தாலோ அடித்தாலோ நியாயமான காரணம் இருக்கும் என்று நம்பினார்கள். கீழ்த்தரமான எண்ணங்களுக்குத் தங்கள் மனதில் இடம் கொடுத்தது இல்லை.

ஆரம்பப்பள்ளி ஆசிரியராகட்டும், கல்லூரிப் பேராசிரியர்களாகட்டும் குன்றி மணி அளவு கூட ஒழுக்கம் தவறி நடந்தது இல்லை. பணத்தின் முன் மண்டியிட்டதில்லை ; பதவிக்காக குறுக்கு வழியை நாடியதில்லை. தங்களின் தன்மானத்திற்கு இழுக்கு வரும்படி யாரிடமும் யாசித்தது இல்லை. "ஏழை' என்ற சொல் தங்களுடன் ஒட்டிக் கொண்டிருப்பது பற்றி அவர்கள் அதிகம் அலட்டிக் கொண்டது இல்லை. "சரஸ்வதியும், லட்சுமியும் ஒருசேர வாசம் செய்ய மாட்டார்கள்' என்று சமாதானம் கூறிக் கொண்டார்கள்.
வயதில் சிறியவர்கள் ஆனாலும் ஆசிரியர்கள் தந்தைக்கு ஒப்பாவர். "இவர் என் ஆசான். அறியாமை என்னும் இருளைப் போக்கி என் வாழ்வில் ஒளி ஏற்றுபவர்; நான் தவறு செய்யும் போது என்னைக் கண்டித்து நல்வழிப்படுத்துபவர்; இவர் வழிகாட்டலில் நான் வெற்றி பெறுவேன்' என்று மாணவர்கள் நினைத்தார்கள்.

இன்றைக்கு ஏன் எல்லாமே மாறிப்போய் விட்டன? பெரும்பாலான ஆசிரியர்கள் நல்ல முன்னுதாரணங்களாகத் திகழ்வது இல்லையே?
தனி வகுப்பு வைக்க வேண்டும் என்று மிரட்டும் ஆசிரியரை, ஒழுங்காகப் பாடம் நடத்தாத ஆசிரியரை, மாணவர்களைத் தங்கள் சொந்த வேலைக்குப் பயன்படுத்திக் கொள்ளும் ஆசிரியரை, எதற்கெடுத்தாலும் பிரம்பு ஒடிய அடிக்கும் ஆசிரியரை, நடத்தை சரி இல்லாத ஆசிரியரை, குடித்துவிட்டுப் பள்ளிக்கு வரும் ஆசிரியரை, மாணவியரிடம் அத்துமீறும் ஆசிரியரை மாணவர்கள் எப்படி மதிப்பார்கள்?

ஆசிரியர் பணியை ஒருவர் விரும்பி ஏற்றுக் கொண்டால் மட்டுமே ஈடுபாட்டுடன் செய்ய முடியும். பாடங்களைக் கற்பிக்கும் போது அது அந்தரங்க சுத்தியுடன் ஒலிக்க வேண்டும். மாணவர்களின் சிந்தனையைச் செம்மைப்படுத்தி மெருகூட்டும் ஆசிரியர்கள், மேதா விலாசமும், நேர்மையும் சுய கட்டுப்பாடும் கொண்டு திகழ வேண்டும்.
ஒழுக்கமான இளைய சமுதாயத்தை உருவாக்குவது மிக மிக முக்கியம். இன்று பிள்ளைகளின் கவனத்தை சிதறடிக்கப் பல காரணிகள் உள்ளன. தங்களைச் சுற்றியுள்ள வக்கிரங்களில் வழுக்கி விழாமல் மாணவர்கள் இருக்க வேண்டுமானால் அதற்கு ஆசிரியர்கள் அவர்களை கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். அடித்தட்டுப் பிள்ளைகளுக்குப் பிரச்னை இருந்தால் அவர்கள் யாரிடம் போய்   தங்கள் மனக்குறையைக் கொட்ட முடியும்? குடிகாரத் தந்தை, பொறுப்பில்லாத தாய், மிரட்டும் வறுமை, கூடா நட்பு, குற்றப் பின்னணி என்ன செய்வார்கள் அவர்கள்? சரியான மேய்ப்பர் இல்லாவிட்டால் தடம்மாறிப் போய் விடுகிறார்கள்.

தாங்கள்போகும்பாதையின் விபரீதம் அறியா வயது. அவர்களை நல்வழிப்படுத்துவது ஆசிரியர்களின் கடமை. வெறுமனே புரட்டிப் பார்த்து கையெழுத்துப் போட வேண்டிய கோப்புகள் அல்ல மாணவர்கள். ரத்தமும், சதையும் கொண்ட உணர்ச்சி உள்ள உயிர்கள். மோப்பக் குழையும் அனிச்சம் போன்றவர்கள். சில சமயம் நத்தையாய் கூட்டுக்குள் ஒடுங்கிப் போவார்கள். அவர்களைத் தம் குழந்தைகளாய் பாவித்து, அவர்களின் கை பிடித்து வெற்றிப் பாதையில் அவர்களைப் பயணிக்க வைப்பது ஒரு நல்லாசிரியரின் கடமை ஆகும்.

ஒழுக்கத்தின் மேன்மையை, உண்மையின் பலத்தை அவர்கள் ஒருமுறை ருசித்தால் போதும், அதற்குப் பின் தடம் மாற மாட்டார்கள். நூறு சதவீதம் தேர்ச்சி கொடுப்பவர் மட்டுமே நல்லாசிரியர் ஆகார். அதற்கான பயிற்சி அப்பிள்ளைகளுக்கு நிறைய வலியையும், மனச்கசப்பையும், உளைச்சலையும் ஏற்படுத்தி இருக்கக் கூடும்.

மதிப்பெண் மட்டுமே வாழ்கை ஆகாது. மாணவர்களை கற்றலில் ஈடுபாடு கொள்ளச் செய்து, பள்ளிக்கு வருவதை ஒரு கொண்டாட்டமாக அவர்களை நினைக்கச் செய்து எதையும் குருட்டு மனப்பாடம் செய்யாமல் புரிந்து கொண்டு படிக்கச் செய்து, அவர்களுக்குள் பொதிந்து கிடக்கும் திறமைகளை வெளிக்கொணர ஒரு தூண்டுகோலாய் இருப்பவரே நல்லாசிரியர். ஆசிரியப் பணியை அனைத்து ஆசிரியர்களும் அகம் மகிழ்ந்து புனித வேள்வியாய் எடுத்துக் கொண்டால் சிறந்த சந்ததியினரை உருவாக்க முடியும்.

ஆசிரியர்களில் சிலர் தங்களின் தார்மிகப் பொறுப்பை உணராமல் கீழ்த்தரமாக நடந்துகொள்வதைப் பார்க்கும்போது நமக்கு வருத்தம் மேலோங்குகிறது. என்ன பிறவிகள் இவர்கள் என நினைக்கத் தோன்றுகிறது. அப்படிக் கூட மிருக இச்சை தோன்றுமா? பாதிக்கப்பட்ட சிறுமிகளின் மனநிலை எப்படி இருக்கும்? அவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆன பின்பும்கூட அந்த ரணம் ஆறாமல் இருக்குமே. ஆண்கள் மேல் ஒருவித வெறுப்பும், பயமும், அருவருப்பும் தோன்றுமே.
இந்த மோசமான நிகழ்வு அந்தக் குழந்தையின் குடும்பத்தை எந்த அளவுக்கு பாதிக்கும்? இதை எல்லாம் யோசிக்க வேண்டாமா? விபரம் தெரியாத, புரியாத பிஞ்சுகளிடமா தங்கள் வக்கிரத்துக்கு வடிகால் தேடுவது? சே! வெட்கக்கேடு. ஒரு சில கரும் புள்ளிகளால் நல்லவர்களும் அவமானம் அடைகிறார்கள். இனியாவது இந்த அவலம் மாற வேண்டும்.

கட்டுரையாளர்:
பேராசிரியர் (ஓய்வு).

No comments:

Post a Comment

CMRL’s first driverless train ready.

CMRL’s first driverless train ready. The train will likely arrive at the Poonamallee depot by mid-October, say CMRL officials. It will be op...