Saturday, September 8, 2018

குட்கா,முறைகேடு,Sasikala,சசிகலா,சூத்திரதாரி,
dinamalar 08.09.2018

தமிழகத்தை உலுக்கும், 'குட்கா' முறைகேட்டுக்கு சூத்திரதாரியாக, சசிகலா இருந்திருக்கலாம் என, சி.பி.ஐ., வட்டாரத்தில் சந்தேகிக்கப்படுகிறது. இந்த விவகாரத்தில், 'அப்ரூவர்' ஆன, குட்கா ஆலை உரிமையாளர், யார் யாருக்கு எவ்வளவு பணம் பட்டுவாடா செய்யப்பட்டது என்பதை, விசாரணையில் அம்பலப்படுத்தி உள்ளார். இதன் காரணமாக, சி.பி.ஐ., அதிகாரிகள், புதிய கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

தமிழகத்தில், 2013ல், குட்கா, பான் மசாலா உள்ளிட்ட, போதை பொருட்களை விற்க, ஜெ., அரசு தடை விதித்தது. எனினும், கடைகளில் அவை விற்பனை செய்யப்பட்டு வந்தன. வருமான வரித்துறை அதிகாரிகள், 2016ல், சென்னையில் உள்ள, குட்கா, பான் மசாலா நிறுவனங்களில், அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது, 250 கோடி ரூபாய் அளவிற்கு, தமிழகத்தில், சட்ட விரோதமாக, குட்கா வர்த்தகம் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. குட்கா தயாரிப்பாளர் மாதவ ராவுக்கு சொந்தமான, சென்னை அருகே செங்குன்றத்தில் உள்ள, குடோனில் நடத்திய சோதனையில், 'டைரி' ஒன்று சிக்கியது. அதில், குட்கா விற்பனை செய்ய, அமைச்சர்கள், மூத்த போலீஸ் அதிகாரிகள் போன்றோருக்கு, எவ்வளவு லஞ்சம் கொடுக்கப்பட்டது என்ற விபரத்தையும், மாதவ ராவ் எழுதி வைத்திருந்தார்.

இதுகுறித்து, வருமான வரித்துறை அதிகாரிகள், அப்போது,




தமிழக, டி.ஜி.பி.,யாக இருந்த அசோக்குமாருக்கு, கடிதம் அனுப்பினர். அவர் அந்தக் கடிதத்தை, முதல்வருக்கு அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தின் மீது, தமிழக அரசு, எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதன்பின், பல்வேறு நெருக்கடிகள் காரணமாக, 2017ல், குட்கா ஊழல் குறித்து, தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, வழக்கு விசாரணை, சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டது.

சி.பி.ஐ., அதிகாரிகள், சில தினங்களுக்கு முன், மாதவ ராவிடம் விசாரணை நடத்தினர். அவர் அளித்த தகவல் அடிப்படையில், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி., - டி.கே.ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனர், ஜார்ஜ், வணிக வரித்துறை முன்னாள் அமைச்சர், ரமணா மற்றும் பல்வேறு அதிகாரிகள் வீடுகளில், செப்., 5ல், அதிரடி சோதனை நடத்தினர்.

சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில், குட்கா நிறுவன உரிமையாளர்களான மாதவ ராவ், உமாசங்கர் குப்தா, சீனிவாச ராவ், மத்திய கலால் வரி அதிகாரி பாண்டியன், மாநில உணவு பாதுகாப்பு பிரிவு அதிகாரி செந்தில் முருகன் ஆகியோரை, நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்கள், சென்னை, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு மத்தியில், இடைத்தரகர்களான ராஜேந்திரன், நந்தகுமார் ஆகியோரையும் கைது செய்துள்ளனர். கைதான குடோன் உரிமையாளர், அப்ரூவராக மாறி உள்ளார். அவர், பல்வேறு திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார். அதனடிப்படையில், முன்னாள் முதல்வர், ஜெ.,வின் தோழியும், தற்போது பெங்களூரு சிறையில் இருப்பவ ருமான, சசிகலாவும் சிக்குவார் என்ற, தகவல் வெளியாகி உள்ளது.

குட்கா ஊழல் குறித்து, வருமான வரித்துறை அதிகாரிகள்,

2016ல், டி.ஜி.பி.,க்கு எழுதிய கடிதம்; அது தொடர்பாக, முதல்வருக்கு, டி.ஜி.பி., அனுப்பிய கோப்பு ஆகியவை, 2017 நவ., 17ல், போயஸ் கார்டனில் உள்ள சசிகலா அறையில் கண்டுபிடிக்கப்பட்டன.

முதல்வர் பார்வைக்கு, டி.ஜி.பி., அனுப்பிய கடிதமும், கோப்பும், சசிகலா அறையில் கண்டுபிடிக்கப்பட்டது, பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு, குட்கா ஊழலில் பங்கு உள்ளதா; வருமான வரித்துறை அனுப்பிய கடிதம் அடிப்படையில், விசாரணை நடத்த விடாமல், அவர் தடுத்தாரா; ஜெ., பார்வைக்கு கடிதம் செல்லாமல் மறைத்தாரா என்ற, கேள்விகள் எழுந்தன.

இதுகுறித்து, தற்போது, சி.பி.ஐ., விசாரணையை துவக்கி உள்ளது. இதன் காரணமாக, குட்கா ஊழல் வழக்கில், மேலும் பல தலைகள் சிக்கலாம் என்ற, தகவல் வெளியாகி உள்ளது.

காவலில் விசாரிக்க திட்டம்!

'குட்கா' முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட 'குடோன்' உரிமையாளர்கள் உள்பட ஐந்து பேரை, காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ., அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். குடோன் உரிமையாளர்கள் மாதவ ராவ், உமாசங்கர் குப்தா, சீனிவாச ராவ், உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செந்தில்முருகன் மற்றும் கலால் வரி அதிகாரி எம்.கே.பாண்டியன் ஆகியோரை சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்கள், சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப் பட்டனர். அவர்களை, ஐந்து நாள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ., அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இன்று மற்றும் நாளை விடுமுறை தினம் என்பதால் காவலில் எடுத்து விசாரிப்பதற்கான மனுவை சி.பி.ஐ., நீதிமன்றத்தில் திங்கள் கிழமை தாக்கல் செய்ய உள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024