Monday, September 10, 2018



பாலியல் சலுகை கேட்பதும் லஞ்சம் தான்ஏழு ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும்

dinamalar 10.09.2018

புதுடில்லி: பணியை முடிப்பதற்காக, பாலியல் சலுகை கேட்பதையும் லஞ்சமாகவே கருதும் வகையில், புதிய சட்டம்நடைமுறைக்கு வந்துள்ளது. இந்தக் குற்றத்துக்கு, ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.





அரசு ஊழியர்கள், லஞ்சம் பெறுவதை தடுக்கும் வகையில், லஞ்சத் தடுப்புச் சட்டம், 1988ல் அமலுக்கு வந்தது. தனியார் நிறுவனங்களையும் இந்தச் சட்டத்தின் கீழ் கொண்டு வரும் வகையில், 2013ல், திருத்தம் செய்யப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி, பணம் மற்றும் பிற சலுகைகள் பெறுவதே, லஞ்சம் என கூறப்பட்டு உள்ளது. இந்நிலையில், பணம் மற்றும் பிற சலுகைகள் என்ற வார்த்தைக்கு மாற்றாக, மட்டு மிஞ்சிய சலுகை என்று மாற்ற லாம் என, சட்டக் கமிஷன், 2015ல் பரிந்துரை செய்தது. அதாவது, சட்டப்பூர்வமான சம்பளத்தைத் தவிர, பிற வழிகளில் கிடைக்கும்

பொருட்கள், சலுகைகள் உள்ளிட்டவற்றையும் லஞ்சம் என்ற பொருளின் கீழ் கொண்டு வர வேண்டும் என, பரிந்துரை செய்யப்பட்டது. அதன்படி, பணம் மற்றும் பணத்தின் மதிப்புக்கு நிகரான பொருட்களுடன், பிற வகைகளில் கிடைக்கும் சலுகை உள்ளிட்டவற்றையும் சேர்க்க வேண்டும் என, பரிந்துரைக்கப்பட்டது. பாலியல் சலுகை கேட்பது, கிளப் உறுப்பினராக சேர்ப்பது உள்ளிட்டவையும் லஞ்சமாகக் கருதவேண்டும் என, கூறப்பட்டது. சட்டக் கமிஷன் பரிந்துரை குறித்து, பார்லிமென்ட் குழு பரிசீலனை செய்தது. சில கூடுதல் விதிகளுடன், லஞ்சத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, சமீபத்தில், இந்த சட்டத் திருத்தம் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்தத் திருத்தத்தின்படி, பாலியல் சலுகை கேட்பது, கிளப்களில் உறுப்பினராக சேர்ப்பது, தன் குடும்பத்தார் அல்லது நண்பர்களுக்கு வேலை கேட்பது, கடன்களை அடைக்கச் சொல்வது உள்ளிட்டவையும் குற்றமாக பார்க்கப்படும். இந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். இதை தவிர, இந்தச் சலுகைகளை லஞ்சமாக அளிப்பவர் மீதும் வழக்கு தொடரப்படும். அவர்களுக்கும், ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். இதற்கு முன் இருந்த சட்டத்தில், லஞ்சம் கொடுப்பவருக்கு சிறை தண்டனை விதிப்பது சேர்க்கப்படவில்லை.

கொடுத்தாலும் குற்றம்! :

இந்த சட்டத் திருத்தம் குறித்து, உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் கூறியதாவது: பணமாக பெறுவதை தவிர்த்து, அதிகாரிகள், பல்வேறு வழிகளில் லஞ்சம் வாங்கி வருகின்றனர். அதைத் தடுக்கும் வகையில், 'மட்டுமிஞ்சிய சலுகை' என்ற வார்த்தை சேர்க்கப்பட்டுள்ளது. இதன்படி, பரிசுகள், இலவசங்கள் பெறுவது, வெளிநாட்டு சுற்றுலா பயணம், விமான டிக்கெட் பெறுவது, ஓட்டலில் தங்குவது என, எந்தச் சலுகை பெற்றாலும் அதுவும் லஞ்சமாகவே கருதப்படும். கடனை அடைக்கச் சொல்வது, நிலம் அல்லது வீடு என, எதுவாக இருந்தாலும், அது லஞ்சமாகும். மிகக் குறிப்பாக, பாலியல் சலுகை கேட்பது தற்போது அதிகரித்து வருகிறது. அதனால், பாலியல் சலுகை கேட்பது என்ற வார்த்தை, இந்தச் சட்டத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. முதல் முறையாக, லஞ்சம் கொடுப்பதும் குற்றமாக பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024