Sunday, September 16, 2018

வாழ்ந்து காட்டுவோம்: அறிவுரை வேண்டாம் அன்பே போதும்

Published : 09 Sep 2018 13:04 IST


எல். ரேணுகா தேவி




உலகத் தற்கொலை தடுப்பு நாள்: செப்டம்பர் 10

நாளிதழ்களில் தற்கொலைச் செய்திகள் இல்லாத நாட்களே இல்லை என்னும் அளவுக்குத் தற்கொலை செய்துகொள்கிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்தபடி இருக்கிறது. தனிமை, புறக்கணிப்பு, பயம், கவலை, வறுமை, குடும்ப வன்முறை, பாலியல் வன்முறை, விரக்தி போன்றவையே தற்கொலை செய்துகொள்வதற்கான முக்கியக் காரணங்களாக உள்ளன.

உலகில் உள்ள உயிரினங்களில் மனிதன் மட்டும்தான் தற்கொலை செய்துகொள்ள முயல்கிறான். மற்ற உயிரினங்கள் அனைத்தும் தமக்கு ஏற்படும் இடர்பாடுகளைக் கடந்து, போராடி வெற்றிபெற முயல்கின்றன. இதனால்தான் தற்கொலை செய்துகொள்வது சட்டத்துக்குப் புறம்பான விஷயமாகக் கருதப்படுகிறது. தற்கொலையைத் தடுக்கும்விதமாக 2003 முதல் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 10-ம் தேதி உலகத் தற்கொலைத் தடுப்பு தினமாகக் கடைபிடிக்கப்பட்டுவருகிறது.

முடி உதிர்வால் உயிரிழந்த மாணவி

உலகம் முழுவதும் வருடத்துக்கு ஏழு லட்சத்துக்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. தேசியக் குற்றவியல் ஆவணக் காப்பகம் வெளியிட்ட அறிக்கையின்படி இந்தியாவில் மட்டும் 2005 முதல் 2015 வரை 1,33,623 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். ஒரு மணி நேரத்துக்கு ஒரு மாணவர் தற்கொலை செய்துகொள்வதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2015-ல் மட்டும் 8,934 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அதிலும் 14 முதல் 30 வயதுக்கு உட்பட்டோரின் எண்ணிக்கை முன்னெப்போதையும்விட அதிகரித்துள்ளது. குறிப்பாக, 18 வயதுக்குக் கீழ் உள்ள பெண்கள் தற்கொலை செய்துகொள்வது அதிகரித்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் முடி உதிர்தல் பிரச்சினையால் ஆற்றில் குதித்துத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

பெண்கள் என்றாலே அழகாகவும் நீளக் கூந்தலுடனும் இருக்க வேண்டும் என்ற சமூகத்தின் நிர்ப்பந்தம்தான் அந்த மாணவியின் தற்கொலைக்குக் காரணம். தனது கூந்தலை ஸ்ட்ரெய்ட்னிங் செய்துகொண்ட பிறகு அந்த மாணவிக்கு அதிக அளவு முடி உதிரத் தொடங்கியுள்ளது. எங்கே தனக்குத் தலை வழுக்கையாகிவிடுமோ என்ற பயத்தால் கல்லூரிக்குச் செல்லாமல் அறையிலேயே முடங்கிக் கிடந்திருக்கிறார்.

பின்னர், கடந்த சில நாட்களுக்கு முன் ஆற்றில் குதித்துத் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். இளைஞர்கள் மனத்தளவில் எந்த அளவுக்குப் பலவீனமாக இருக்கின்றனர் என்பதற்கு இந்த மாணவியின் மரணம் சாட்சியாக இருக்கிறது.

தற்கொலை தீர்வல்ல

தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்ற நொடிப்பொழுது மனநிலையைக் கடந்துவருவதில்தான் வாழ்க்கையின் எதிர்காலம் அடங்கியுள்ளது என்கிறார் மனநல ஆலோசகர் பிருந்தா ஜெயராமன்.

“இனிமேல் தன்னால் வாழவே முடியாது என நினைப்பவர்கள்தாம் தற்கொலைக்கு முயல்கிறார்கள். ஒரு சிலர் தங்களுடைய கஷ்டத்தை யாரிடமும் சொல்லாமல் மனதுக்குள்ளேயே அடக்கி வைத்துக்கொள்வார்கள். வேறு சிலர் தங்களுடைய கஷ்டத்தைக் கத்திப் பேசியோ அழுதோ வெளிப்படுத்துவார்கள்.


மனதுக்குள் இருப்பதை இப்படி ஏதாவது ஒருவகையில் நெருக்கமானவர்களிடமோ நம்பிக்கைக்குரியவர்களிடமோ பகிர்ந்துகொள்ள வேண்டும். யாரிடமும் பகிர்ந்துகொள்ளாமல் உள்ளுக்குள்ளேயே அடக்கிவைத்தால் என்றாவது ஒருநாள் அது பிரஷர் குக்கர்போல் வெடித்துவிடும். இதுபோன்ற நேரத்தில்தான் தற்கொலை எண்ணம் தலைதூக்கும். நமக்குச் சாதாரணமாகத் தோன்றும் விஷயம்கூட, மனத்தளவில் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பெரிய விஷயமாக இருக்கலாம்.

அதைக் கண்டறிந்து அவர்களுக்கு இணக்கமான சூழ்நிலையை உருவாக்க வேண்டும். அதேபோல் அதிகரித்துவரும் மாணவர்களின் தற்கொலைகளைத் தடுக்க பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடத்த வேண்டும். கஷ்டங்களை உடனுக்குடன் பேசிவிட்டாலே பாதிப் பிரச்சினைகள் சரியாகிவிடும்” என்கிறார் அவர்.

காதுகொடுத்துக் கேளுங்கள்

தற்கொலை முயற்சிக்கான ஆரம்ப கட்டம் மன அழுத்தம்தான். பொதுவாக, மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமையை நாடிச் செல்வார்கள். அந்தத் தனிமையே நாளடைவில் தற்கொலை எண்ணத்துக்கான தூண்டுகோலாக அமைந்துவிடுகிறது. “மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள், நெருங்கிய வட்டத்திலிருந்து விலகிச் செல்ல நினைப்பார்கள். தூக்கமின்மை, யாரிடமும் பேசாமல் இருப்பது போன்றவை அதற்கு உதாரணம்.

ஒரு சிலர் தங்களையே காயப்படுத்திக்கொள்வார்கள். இதுபோன்ற செயல்கள் தென்பட்டால் அவர்களிடம் மனம்விட்டுப் பேசுவது நல்லது. அதேபோல் யாராவது தங்களுடைய கஷ்டத்தைப் பகிர்ந்துகொண்டால் உடனே

அறிவுரை வழங்காமல் கொஞ்சம் பொறுமையாகக் காதுகொடுத்துக் கேட்டுப் பழக வேண்டும். ‘இதெல்லாம் ஒரு பிரச்சினையா, எல்லாம் சரியாகிடும், இதுவும் கடந்துபோகும்’ என்பது போன்ற வார்த்தைகளை அறிவுரை என்ற பெயரில் மன அழுத்தத்தில் இருப்பவர்களிடம் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. அதற்குப் பதில் அவர்கள் சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்கலாம். ‘உனக்கு எப்ப கஷ்டமாக இருந்தாலும் என்னிடம் பேசு. உனக்கு நான் உறுதுணையாக இருப்பேன்’ எனப் பேசி அவர்களுக்கு நம்பிக்கை தரலாம்.

தற்கொலை எண்ணத்தில் இருப்பவர்களுக்கு எங்கள் அமைப்பின் சார்பில் கவுன்சலிங் வழங்கிவருகிறோம். எங்களுடைய அமைப்புக்கு 044-24640050, 044-24640060 ஆகிய எண்ணில் தொடர்புகொண்டு பேசலாம். பேசும் நபர் யார், எங்கிருந்து பேசுகிறார் போன்றவற்றை நாங்கள் கேட்கமாட்டோம். அவரது தற்கொலை எண்ணத்தை மாற்றுவதற்கான ஆலோசனையை மட்டுமே வழங்குவோம்” என்கிறார் ‘சிநேகா’ தற்கொலைத் தடுப்பு அமைப்பின் தன்னார்வலர்களில் ஒருவரான இளங்கோ. கேட்பதற்குக் காதும் சாய்ந்துகொள்ள தோளும் இருந்தாலே பல தற்கொலைகள் தடுக்கப்பட்டுவிடும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024