பயணிகளுக்கு காது, மூக்கில் ரத்தம் வழிந்தது: ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பதற்றம்
Published : 20 Sep 2018 11:32 IST
கோப்புப்படம்.
வியாழக்கிழமை காலை மும்பையில் இருந்து ஜெய்ப்பூர் சென்றுகொண்டிருந்த ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பயணித்த சுமார் 30 பயணிகளுக்கு காது, மூக்கில் இருந்து ரத்தம் வழிந்ததால் பதற்றம் ஏற்பட்டது.
கேபின் அழுத்தத்தை முறைப்படுத்தாததால் இந்தப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து விமானம் மீண்டும் மும்பைக்கே திருப்பி அனுப்பப்பட்டது.
இதுகுறித்துப் பேசிய விமானப் போக்குவரத்து இயக்குநரக அதிகாரி, ''மும்பையில் இருந்து ஜெய்ப்பூர் சென்றுகொண்டிருந்த ஜெட் ஏர்வேஸ் பி 737 விமானம் 9 டபிள்யூ 697, இன்று (வியாழக்கிழமை) மும்பைக்குத் திருப்பி அனுப்பப்பட்டது.
பயணத்தின்போது விமான அதிகாரிகள் குழு, கேபின் அழுத்தத்தைப் பராமரிக்கும் பொத்தானை அழுத்த மறந்துவிட்டது.
இதனால் சில பயணிகளுக்கு மூக்கில் இருந்து ரத்தம் வடிந்தது. விமானத்தில் மொத்தம் 166 பயணிகள் பயணித்தனர். அவர்களில் 30 பேருக்கு மூக்கில் ரத்தம் வெளியேறியது; சிலருக்கு காதில் ரத்தம் வடிந்தது. மற்றும் சிலர் தலைவலியால் அவதிப்பட்டனர்'' என்று தெரிவித்தார்.
பயணிகளுக்கு முதலுதவி
சம்பவத்தை ஜெட் ஏர்வேய்ஸ் உறுதி செய்துள்ளது. இதுகுறித்துப் பேசிய அதன் செய்தித் தொடர்பாளர், ''அனைத்துப் பயணிகளும் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டு விட்டனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவிப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சம்மந்தப்பட்ட விமான அதிகாரிகள் குழுவின் மீது விரைவில் விசாரணை நடத்த உள்ளோம். பயணிகளுக்கு மாற்று விமானத்தை ஏற்பாடு செய்துவருகிறோம். சிரமத்துக்கு ஜெட் ஏர்வேஸ் வருந்துகிறது'' என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment