Monday, May 6, 2019

கடுமையான கட்டுப்பாட்டுடன் நடைபெற்ற நீட் தேர்வு தமிழகத்தில் 1¼ லட்சம் பேர் எழுதினர் எளிதாக இருந்ததாக மாணவ-மாணவிகள் கருத்து



கடுமையான கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற ‘நீட்’ தேர்வை தமிழகத்தில் சுமார் 1¼ லட்சம் பேர் எழுதினார்கள். தேர்வு எளிதாக இருந்ததாக மாணவ-மாணவிகள் தெரிவித்தனர்.

பதிவு: மே 06, 2019 05:45 AM
சென்னை,

மருத்துவ படிப்புகளுக்கு ‘நீட்’ தேர்வு மூலம் மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.

இந்தியா முழுவதும் 2019-20-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளில் மாணவர் களை சேர்ப்பதற்கான தேசிய தகுதி நுழைவுத்தேர்வை (நீட்) தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) நேற்று நடத்தியது.

இதற்காக நாடு முழுவதும் மொத்தம் 154 நகரங்களில் ‘நீட்’ தேர்வு நடைபெற்றது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கரூர், தஞ்சை, நெல்லை, நாகர்கோவில், திருச்சி, சேலம், நாமக்கல், கடலூர், வேலூர் ஆகிய 14 நகரங்களில் நடந்தது. சென்னையில் மட்டும் 31 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

தமிழ், ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்பட 11 மொழிகளில் ‘நீட்’ தேர்வு எழுத அனுமதி அளிக்கப்பட்டது. இதில் தமிழ் மொழியில் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தவர்களுக்கு தமிழகத்திலேயே மையங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தன.

இதற்கு முன்பு ஒவ்வொரு ஆண்டும் ‘நீட்’ தேர்வு காலையில் தான் நடைபெற்றது. இதனால் வெளியூர்களில் இருந்து தேர்வு மையங்களுக்கு வரும் மாணவ-மாணவிகள் சிலர் காலையில் சரியான நேரத்துக்கு வரமுடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டது.

இதை கருத்தில் கொண்டு இந்த ஆண்டுக்கான ‘நீட்’ தேர்வு பிற்பகலில் நடைபெற்றது. நேற்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய நீட் தேர்வு மாலை 5 மணி வரை நடந்தது. தமிழகத்தில் 188 மையங்களில் நேற்று ‘நீட்’ தேர்வு நடைபெற்றது.

நாடு முழுவதும் சுமார் 15 லட்சத்து 19 ஆயிரம் பேர் ‘நீட்’ தேர்வுக்காக விண்ணப்பித்து இருந்தனர். தமிழகத்தில் கடந்த ஆண்டு 1 லட்சத்து 7 ஆயிரத்து 480 மாணவ-மாணவிகள் ‘நீட்’ தேர்வு எழுதினர். இந்த ஆண்டு 1 லட்சத்து 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வுக்காக விண்ணப்பித்து இருந்தனர். சென்னையில் மட்டும் 26 ஆயிரத்து 35 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன.

தேர்வு பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய போதிலும் சோதனை நடைமுறைகள் உள்ளிட்டவைகளுக்காக காலை 11.30 மணிக்கே பெரும்பாலான மாணவ-மாணவிகள் தேர்வு மையங்களுக்கு வந்துவிட்டனர். தேர்வு மையத்துக்கு 1.15 மணிக்குள் வந்துவிட வேண்டும் என்றும், பிற்பகல் 1.30 மணிக்கு பிறகு தேர்வர்கள் வந்தால் தேர்வு மையத்துக்குள் அனுமதி இல்லை என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதனால் எந்த பிரச்சினையும் ஏற்பட்டு விடக்கூடாது என்றெண்ணி முன்கூட்டியே மாணவ-மாணவிகள் தேர்வு மையங்களுக்கு வந்தனர். தேர்வு மையங்கள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

தேர்வு மையங்களுக்கு வந்த மாணவ-மாணவிகள் கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். ‘மெட்டல் டிடெக்டர்’ கருவி மூலம் சோதனையிடப்பட்ட பின்னரே தேர்வு கூடங்களுக்குள் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். மாணவ-மாணவிகள் காதுகளில் ‘டார்ச்’ அடித்தும் சோதனை நடந்தது. மாணவர்களுக்கான கட்டுப்பாடுகள் குறித்து ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்ததால் பெரும்பாலான மாணவர்கள் அதனை பின்பற்றி வந்தனர்.

மாணவிகள் பலர் மூக்குத்தி, கம்மல், கொலுசு, சங்கிலி என நகைகள் அணிந்து வந்தனர். தேர்வு எழுத செல்லும் முன்பு அவற்றை கழற்றி பெற்றோரிடம் கொடுத்துவிட்டு சென்றனர். அதேபோல தேர்வு மையங்களுக்கு அருகே வந்தவுடன், தலையில் மாட்டியிருந்த கிளிப், ரப்பர் பேண்ட் உள்ளிட்டவைகளையும் அகற்றினார்கள். துப்பட்டா அணிந்து வந்த மாணவிகளும், தேர்வு எழுத செல்லும் முன்பு அதை அகற்றிவிட்டனர்.
பேனா, ஜாமெட்ரி மற்றும் பென்சில் பாக்ஸ், பிளாஸ்டிக் கவர், கால்குலேட்டர், அளவுகோல், எழுத பயன்படுத்தும் அட்டை, பென்டிரைவ், ரப்பர், எலெக்ட்ரானிக் பேனா, செல்போன், புளூடூத், ஹெட்போன், மைக்ரோபோன், பேஜர், ஹெல்த் பேண்ட், மணிபர்ஸ், கண்ணாடி, கைப்பை, பெல்ட், தொப்பி, வாட்ச், கை அணிகலன், கேமரா, அணிகலன்கள், சாப்பிடும் உணவுகள், வாட்டர் பாட்டில்கள் உள்ளிட்ட எந்த பொருளும் அனுமதிக்கப்படவில்லை.

மாணவர்கள் சிலர் முழுக்கை சட்டையுடன் வந்தனர். தேர்வு எழுத செல்லும் முன்பு அவர்கள் அதை கழற்றி பெற்றோரிடம் கொடுத்துவிட்டு அரைக்கை சட்டை அணிந்து சென்றனர். சில மாணவர்கள் கழுத்தில் அணிந்திருக்கும் கயிறு, ருத்ராட்ச மாலைகள் ஆகியவை அணிந்து செல்லலாமா? என்று அங்குள்ளோரிடம் அனுமதி கேட்டனர். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை கழற்றிவிட்டு தேர்வு எழுத சென்றனர்.

தமிழகத்தில் ‘நீட்’ தேர்வுக்காக விண்ணப்பித்து இருந்த 1 லட்சத்து 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரில் சுமார் 1¼ லட்சம் பேர் தேர்வு எழுதினார்கள்.

மதுரையில் 2,641 பேரும், சேலத்தில் 1,975 பேரும், நாமக்கல்லில் 723 பேரும், வேலூரில் 1,044 பேரும், நெல்லையில் 600 பேரும், கடலூரில் 755 பேரும், திருச்சியில் 1,349 பேரும், தஞ்சையில் 899 பேரும், திருவள்ளூரில் 253 பேரும் தேர்வு எழுதவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. இதுதவிர மேலும் சில ஊர்களிலும் கணிசமான பேர் தேர்வு எழுதவில்லை.

நீட் தேர்வு எளிதாக இருந்ததாகவும், குளறுபடியான கேள்விகள் எதுவும் இல்லை என்றும் தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

கடந்த ஆண்டு நடந்த ‘நீட்’ தேர்வின் போது தமிழ் மொழியில் வழங்கப்பட்ட வினாத்தாளில் ஏராளமான குளறுபடிகளும், பல கேள்விகளில் பிழைகளும் இருந்தன.

ஆனால் இந்த ஆண்டில் அதுபோன்ற குளறுபடிகள் எதுவும் இல்லை என தெரியவந்து உள்ளது.

இதுகுறித்து ‘நீட்’ தேர்வு எழுதிய நெல்லையைச் சேர்ந்த மாணவர் ஆர்.கவுசிக் என்பவர் கூறியதாவது:-

இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் என 4 பாடப்பிரிவுகளில் 180 கேள்விகள் கேட்கப்பட்டன. மொத்த மதிப்பெண்கள் 720 ஆகும். ஒவ்வொரு கேள்விக்கும் 4 மதிப்பெண் வழங்கப்படும். இயற்பியல் பாடத்தில் மட்டும் சில கேள்விகள் கடினமாக இருந்தன. அதாவது சில கேள்விகள் பொது கேள்விகளாகவே இருந்தன. மற்றபடி ‘நீட்’ தேர்வு எளிதாகவே இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

சென்னையைச் சேர்ந்த நிர்மலா என்ற மாணவி கூறுகையில், ‘சி.பி.எஸ்.இ. 11 மற்றும் 12-ம் வகுப்பு பாடங்களை நன்றாக படித்திருந்தாலே போதும் சாதரணமாக 400 முதல் 450 மதிப்பெண்கள் வரை பெறமுடியும். கேள்விகளிலும் பெரிய அளவில் குளறுபடிகள் இல்லை’, என்றார்.

தற்போது நடைபெற்று உள்ள இந்த ‘நீட்’ தேர்வு முடிவு அடுத்த மாதம் (ஜூன்) 5-ந் தேதி வெளியிடப்படும் என்று தேசிய தேர்வுகள் முகமை அறிவித்து உள்ளது.

சென்னை அண்ணாநகரில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு மையத்துக்குள் பிற்பகல் 1.30 மணிக்கு மாணவர்கள் உள்ளே சென்றுவிட்டனர். பிற்பகல் 2 மணிக்கு நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த திருமால் என்ற மாணவர் தேர்வு எழுத வந்தார். ஆனால் தாமதமாக வந்ததால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பலமுறை அவர் வலியுறுத்தியும் அனுமதி மறுக்கப்பட்டதால் சோகத்துடன் அவர் அங்கிருந்து திரும்பிச் சென்றார்.

அதேபோல நகரின் சில தேர்வு மையங்களுக்கு பிற்பகல் 1.30 மணிக்கு மேல் வந்த பல மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. இதனால் அந்த மாணவ-மாணவிகள் சோகத்துடன் திரும்பிச் சென்றனர்.

மேலும் ஆதார் அட்டை உள்பட அசல் ஆவணங்கள் இல்லை என்றும் சிலர் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. இதனால் அந்த மாணவர்களின் பெற்றோர் அங்குள்ள அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அது பலனளிக்காமல் போகவே அங்கிருந்து கோபத்துடன் அவர்கள் திரும்பிச் சென்றனர்.

சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள செட்டிநாடு வித்யாஸ்ரம் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்துக்கு நேற்று பகல் 12 மணி முதல் தேர்வு எழுத மாணவ-மாணவிகள் வந்தனர். அவர்களில் பலர் மூக்கு கண்ணாடி அணிந்து வந்திருந்தனர். இதையடுத்து அங்குள்ள அதிகாரிகள் மற்றும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, ‘மூக்கு கண்ணாடி அணிவதற்குரிய மருத்துவர் சான்றிதழ் இருக்கிறதா?’, என்று கேள்வி எழுப்பினர். மேலும் ‘முறையான மருத்துவ சான்றிதழ் இருந்தால் மட்டும் உள்ளே செல்லலாம்’, என்றும் கூறினார்கள்.

இதையடுத்து மாணவ-மாணவிகளின் பெற்றோர் அங்குள்ளவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ‘கண்ணாடி அணியாமல் எங்கள் பிள்ளைகள் எப்படி தேர்வு எழுதுவது?, இதுசம்பந்தமாக அறிவுரைகள் எதுவும் அறிவிக்கப்படவில்லையே...’, என்று முறையிட்டதை தொடர்ந்து மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து வக்கீல் ஜி.கீதாஞ்சலி என்பவர் கூறுகையில், “எனது மகள் 7-வது வகுப்பு முதல் கண்ணாடி அணிகிறாள். இங்கு கண்ணாடி அணியாமல் உள்ளே செல்லுமாறு கூறினார்கள். இதையடுத்து எனது மகளை கண்ணாடியை கழற்ற செய்து, ஒரு புத்தகத்தை கொடுத்து படிக்கச் சொன்னேன். அவள் படிக்க முடியாமல் திணறுவதை பார்த்த பிறகே அங்குள்ளோர் அவளை அனுமதித்தனர். ஆனால் பல மாணவ-மாணவிகள் செய்வதறியாது தங்கள் கண்ணாடிகளை கழற்றிவிட்டு தேர்வு எழுத சென்றனர். இந்த போக்கு இனியாவது மாறவேண்டும்”, என்று வேதனையுடன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

IAS reshuffle: Pradeep Yadav is secy to Udhaya

IAS reshuffle: Pradeep Yadav is secy to Udhaya  TIMES NEWS NETWORK 03.10.2024  Chennai : State govt on Tuesday carried out a reshuffle of se...