அண்ணா பல்கலை பதிவாளர் பதவி வயது வரம்பை, 60 ஆக உயர்த்த திட்டம்
Added : மே 06, 2019 01:03
சென்னை:பதிவாளர் பொறுப்புக்கான வயது வரம்பை, 60 ஆக உயர்த்த, அண்ணா பல்கலை, திட்டமிட்டுள்ளது; சிண்டிகேட் கூட்டத்தில், இதற்கான முடிவு எடுக்கப்பட உள்ளது.
அண்ணா பல்கலை துணை வேந்தராக, சுரப்பா பதவியேற்றது முதல், பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். தேர்வு நடைமுறைகளில் மாற்றம், பேராசிரியர் பதவி உயர்வு விதிகளில் திருத்தம், பேராசிரியர் நியமனங்களில் புதிய நடைமுறை என, சில நடவடிக்கைகள் எடுத்துள்ளார்.
அதேபோல, தமிழக இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், அண்ணா பல்கலை பேராசிரியர்கள் ஈடுபடுவதை தவிர்த்து, உயர் கல்வித் துறையே நேரடியாக, கவுன்சிலிங் நடத்த வழி வகுத்துள்ளார். மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை மறுசீரமைக்கவும் உத்தரவிட்டு உள்ளார்.இந்நிலையில், நிர்வாக நடைமுறைகளிலும் மாற்றங்கள் ஏற்படுத்த, அவர் திட்டமிட்டுள்ளார்.
முதற்கட்டமாக, அண்ணா பல்கலை பதிவாளர் பதவிக்கான வயது உச்ச வரம்பை, 58ல் இருந்து, 60 ஆக உயர்த்த, கோப்புகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இந்த கோப்புகளுக்கு, சிண்டிகேட் அனுமதி பெற்று நடைமுறைப் படுத்த, பல்கலை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.தற்போது, அண்ணா பல்கலையில், பதிவாளர் பொறுப்பு காலியாக உள்ளது. அந்த இடத்தில், பேராசிரியர் குமார், பொறுப்பு பதிவாளராக ஓராண்டாக உள்ளார்.
நிரந்தர பதிவாளரை நியமிக்க, துணை வேந்தர் மற்றும் உயர் கல்வித்துறை இடையே உடன்பாடு ஏற்படாததால், பேராசிரியர் குமாரையே பதிவாளராக நீடிக்க, துணை வேந்தர், சுரப்பா அனுமதி அளித்துள்ளார்.அடுத்த மாதம் ஓய்வு பெற உள்ள, பேராசிரியர் குமார், வயது உச்ச வரம்பு உயர்த்தப்படும் நிலையில், ஜூன் மாதத்துக்கு பின்னரும், கூடுதல் பொறுப்பில் நீடிப்பார் என, தெரிகிறது. பல்கலையின் இந்த நிர்வாக முடிவுக்கு, ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பல்கலையின் சிண்டிகேட் கூட்டம், இன்று நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நிதிக்குழு கூட்டத்தை நடத்தாமல், சிண்டிகேட் கூட்டத்தை நடத்தக்கூடாது என, ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதையும் மீறி, இன்று, சிண்டிகேட் கூட்டம் நடந்தால், பதிவாளர் வயது உச்ச வரம்புக்கு ஒப்புதல் பெறப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment