Monday, May 6, 2019

பல்லாவரம் நகராட்சியில் தண்ணீர் தட்டுப்பாடு: திரிசூலம் குவாரிகளில் நீர் எடுக்க மக்கள் எதிர்ப்பு
By நமது நிருபர், தாம்பரம் | Published on : 06th May 2019 02:33 AM




சென்னை விமான நிலையத்துக்கு எதிரே உள்ள திரிசூலம் மலை குவாரிகளில் தேங்கி உள்ள நீரை பல்லாவரம் நகராட்சி நிர்வாகம், லாரிகள் மூலம் எடுத்துச் செல்ல அப்பகுதியைச் சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்யப்பட்டுள்ளது.
சென்னை புறநகர்ப் பகுதிகளான பல்லாவரம், தாம்பரம், பம்மல், அனகாபுத்தூர், செம்பாக்கம் ஆகிய பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து, வீட்டு உபயோகத்துக்குத் தேவையான தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். பல்லாவரத்தில் பெரிய ஏரி, நெமிலிச்சேரி ஏரி தூர்ந்து போய், மழைநீர் தேங்கி நிலத்தடி நீர் மட்டம் உயர்வதற்கான வாய்ப்பே இல்லாத நிலை உள்ளது. மேலும் மழைநீர் சேகரிப்புத் திட்டத்தையும் சிறப்பாக செயல்படுத்த முடியாத நிலையில், பொதுமக்கள் தண்ணீர் கிடைக்காமல் பெரிதும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

இதையடுத்து, பல்லாவரம் நகராட்சிக்கு அருகில் உள்ள கல்குவாரிகளில் தேங்கிக் கிடக்கும் தண்ணீரை பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டது. அதன்படி நகராட்சி எல்லைக்குள்பட்ட மூவரசம்பட்டு பகுதியில் 100 அடி ஆழத்தில் ஒரு ஏக்கர் பரப்பில் நீர் தேங்கியுள்ள கல்குவாரியைக் கண்டறிந்து, அதில் இருந்து தினமும் 2 லட்சம் லிட்டர் நீர் பெறப்பட்டு, பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.

பற்றாக்குறையைப் போக்க, அருகில் உள்ள திரிசூலம் மலைக் குவாரிகளில் கடல் போல் தேங்கிக் கிடக்கும் நீரை லாரிகளில் எடுத்து வருவதற்கு ராட்சத மோட்டார்கள், குழாய்கள், மின் இணைப்பு உள்ளிட்ட அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில், வெள்ளிக்கிழமை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் குவாரியில் இருந்து நீரை எடுத்துச் செல்ல எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் நகராட்சி ஊழியர்கள் வேறு வழியின்றி, பொருத்தப்பட்ட அனைத்து உபகரணங்களையும் திரும்ப எடுத்து சென்றனர்.

இதுகுறித்து பல்லாவரம் நகராட்சி பொறியாளர் எம்.கருப்பையா ராஜா கூறியது:

பல்லாவரம் நகராட்சிக்குச் சொந்தமான 3 கிணறுகளில் இருந்து தினமும் பெறப்பட்ட சுமார் 8 லட்சம் லிட்டர் நீரின் மூலம் நிலையை சமாளித்து வருகிறோம். கிணறுகளில் போதிய நீர் கிடைக்காத நிலையில் பல்லாவரம் நகராட்சியைச் சுற்றிலும் உள்ள கல்குவாரிகளில் தேங்கிக் கிடக்கும் தண்ணீரை எடுக்க திட்டமிட்டு, முதல்கட்டமாக மூவரசம்பட்டு கல்குவாரியில் இருந்து தினமும் 2 லட்சம் லிட்டர் நீர் பெறப்படுகிறது. மேலும், திரிசூலம் கல்குவாரிகளில் இருந்தும் நீரை பெற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டோம். அதற்கு தற்போது எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து உயர் அதிகாரிகள் மூலம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு தெரிவிக்க உள்ளோம் என்றார் நகராட்சி பொறியாளர் கருப்பையா ராஜா.
சிக்கராயபுரம், பம்மல், அனகாபுத்தூர், மூவரசம்பட்டு குவாரிகளைப் போல் திரிசூலம் குவாரிகளில் தேங்கி இருக்கும் நீரையும் பொதுமக்கள் பயன்படுத்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

No comments:

Post a Comment

Madras HC Justice Seshasayee retires

Madras HC Justice Seshasayee retires TNN | Jan 8, 2025, 03.58 AM IST  Chennai: A judge might possess the power of a giant, but should not ac...