Sunday, September 22, 2019

உலகிலேயே இது முதல்முறை: உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக இணையும் சட்டக் கல்லூரித் தோழர்கள்!

By ENS | Published on : 21st September 2019 04:19 PM



உச்ச நீதிமன்றம்

புது தில்லி: உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக புதிதாக பதவியேற்றுள்ள 4 பேருக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. ஆம் அவர்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மட்டுமல்ல, அவர்கள் நான்கு பேரும் 1982ம் ஆண்டு தில்லி சட்டக் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்களாம்.

உச்சநீதிமன்ற நீதிபதியாக வெ.இராமசுப்பிரமணியன் உள்பட 4 நீதிபதிகள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவில் 34- ஆக அதிகரித்துள்ளது. இவர்கள் நால்வரும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக வரும் திங்கட்கிழமை பதவியேற்க உள்ளனர்.

ஹிமாசலப் பிரதேச உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி வெ.இராமசுப்பிரமணியன், பஞ்சாப்-ஹரியாணா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி கிருஷ்ண முராரி, ராஜஸ்தான் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ரவீந்திர பட், கேரள உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ரிஷிகேஷ் ராய் ஆகிய நால்வரும் உச்சநீதிமன்ற புதிய நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் நீதிபதி எஸ். ரவீந்திர பட், ரிஷிகேஷ் ராய் மற்றும், ஏற்கனவே உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக இருக்கும் டிஒய் சந்திரகுட், எஸ்கே கௌல் ஆகியோர் தில்லி சட்டப் பல்கலைக்கழகத்தில் ஒரே ஆண்டில் சட்டப்படிப்பு முடித்தவர்களாம்.

இது உலகிலேயே வேறு எந்த நாட்டிலும் நிகழாத ஒரு நிகழ்வாகும். அதாவது நாட்டின் உச்சபட்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் 4 பேர் ஒன்றாக ஒரே வகுப்பில் படித்தவர்களாக இருப்பது இதுவரை நிகழாத ஒன்றாம்.

இவர்களில் சந்திரகுட் 2016ம் ஆண்டு மே மாதமும், கௌல் 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதமும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர்.

தற்போது புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் 4 நீதிபதிகளில் பட் மற்றும் ராய் ஆகியோரின் பெயர்களை மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் கடந்த மாதம் பரிந்துரைத்திருந்த நிலையில், இதற்கு குடியரசுத் தலைவர் கடந்த வாரம் ஒப்புதல் அளித்திருந்தார்.

இது மட்டுமல்ல, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்-ம் இதே கல்லூரியில் வேறு ஆண்டில் படித்தவர்தான். தற்போது நீதிபதிகளாக இருக்கும் ஆர்எஃப் நாரிமன், நவீன் சின்ஹா, தீபக் குப்தா, இந்து மல்ஹோத்ரா, சஞ்சீவ் கன்னா ஆகியோரும் இதே கல்லூரியில் வேறு வேறு ஆண்டுகளில் சட்டம் பயின்றவர்கள்தான்.

1924ம் ஆண்டு துவக்கப்பட்ட தில்லி சட்டப் பல்கலைக்கழகத்தில் தற்போது 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சட்டம் பயின்று வருகிறார்கள்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024