Sunday, September 22, 2019

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையரிடம் தனிப்படை விசாரணை

By DIN | Published on : 22nd September 2019 03:48 AM

தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டில் சேர்ந்த சென்னை மாணவர் "நீட்' தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது தொடர்பாக அக் கல்லூரி முதன்மையரிடம் தனிப் படை போலீஸார் சனிக்கிழமை விசாரணை நடத்தினர்.

சென்னை, தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை சிறப்பு மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

இவரது மகன் உதித் சூர்யா(20), தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டில் சேர்ந்தார்.

இந்நிலையில் உதித் சூர்யா "நீட்' தேர்வை ஆள்மாறாட்டம் செய்து எழுதி மருத்துவப் படிப்பில் சேர்ந்திருப்பதாக, தேர்வறை அனுமதிச் சீட்டு ஆதாரத்துடன், அசோக்கிருஷ்ணன் என்பவர் கடந்த 11ஆம் தேதி தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையர் ராஜேந்திரனுக்கு மின்னஞ்சல் மூலம் புகார் அனுப்பியதாகக் கூறப்படுகிறது. பின்னர், கடந்த, 13 ஆம் தேதி, மின்னஞ்சல் மூலம் இந்த புகார் குறித்து விசாரணை நடத்த மீண்டும் அவர் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இப் புகார் குறித்து மருத்துவக் கல்லூரி முதன்மையர் தலைமையிலான குழுவினர், உதித் சூர்யா, அவரது தந்தை வெங்கடேசன் ஆகியோரிடம் நடத்திய விசாரணையில், மஹாராஷ்டிரத்தில் தேர்வு மையம் ஒன்றில் ஆள்மாறாட்டம் செய்து உதித் சூர்யா "நீட்' தேர்வு எழுதியிருப்பதும், ஆள்மாறாட்டம் செய்து கலந்தாய்வில் பங்கேற்றதும் தெரியவந்தது.

மேலும், கல்லூரிச் சேர்க்கையின் போதும் உதித் சூர்யா சார்பில் "நீட்' தேர்வு எழுதியவரே ஆள் மாறாட்டம் செய்து கல்லூரியில் ஆஜராகி சான்றிதழ் சமர்ப்பித்திருந்ததும் தெரிய வந்தது. இது குறித்து மருத்துவக் கல்லூரி நிர்வாகம் சார்பில் மருத்துவக் கல்வி இயக்குநரகத்துக்கு அறிக்கை அனுப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மாணவர் தலைமறைவு: ஆள்மாறாட்ட புகார் குறித்து மருத்துவக் கல்லூரி நிர்வாகம் விசாரணை மேற்கொண்டதை அடுத்து, உதித்சூர்யா கல்லூரி விடுதியில் இருந்து தலைமறைவாகி விட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தகவல் மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் மத்தியில் பரவியதை அடுத்து, உதித் சூர்யா மீது கடந்த 18-ஆம் தேதி க.விலக்கு காவல் நிலையத்தில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையர் ராஜேந்திரன் புகார் அளித்தார்.
தனிப் படை விசாரணை: இப் புகாரின் பேரில் ஆண்டிபட்டி காவல் ஆய்வாளர் உஷா, சார்பு- ஆய்வாளர் சுல்தான் பாஷா ஆகியோர் அடங்கிய தனிப் படை அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.

சென்னையில் உதித் சூர்யாவின் வீட்டில் யாரும் இல்லாத நிலையில், அவரது உறவினர் வீடுகளில் தனிப்படையினர் விசாரணை நடத்தினர். மேலும் உதித் சூர்யா படித்ததாகக் கூறப்படும் "நீட்' தேர்வு பயிற்சி மையத்திலும் விசாரணை நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து, உதித் சூர்யா மீதான புகார் குறித்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி நிர்வாகம் நடத்திய விசாரணை விவரம், உதித் சூர்யா சமர்ப்பித்த கல்வி மற்றும் இதர சான்றிதழ்களின் நம்பகத் தன்மை, கல்லூரி மாணவர் சேர்க்கையின் போது பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளின் பதிவு, அசோக்கிருஷ்ணன் என்ற பெயரில் மின்னஞ்சலில் புகார் அனுப்பியவர் குறித்த விவரம் உள்ளிட்டவை குறித்து மருத்துவக் கல்லூரி முதன்மையர் ராஜேந்திரனிடம் தனிப் படை காவல் ஆய்வாளர் உஷா சனிக்கிழமை விசாரணை நடத்தினார்.

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் கூறியது: தனிப் படை போலீஸார் நடத்திய விசாரணையில், உதித் சூர்யா ஏற்கெனவே இரு முறை "நீட்' தேர்வு எழுதி தோல்வியடைந்திருந்ததும், இந்த ஆண்டு "நீட்' தேர்வு நடைபெற்ற நாளில் அவர் சென்னையில் இருந்ததும் தெரிய வந்துள்ளது.
உதித் சூர்யா சார்பில் "நீட்' தேர்வு எழுதியவரின் புகைப்படத்தை ஆதாரமாக வைத்து, தமிழகத்தில் ஏற்கெனவே "நீட்' தேர்வு எழுதியவர்கள், மருத்துவக் கல்லூரியில் தற்போது 2 ஆம் ஆண்டு படித்துவரும் மாணவர்கள் பட்டியலுடன் ஒப்பிட்டுப் பார்த்தும், உதித் சூர்யா சார்பில் "நீட்' தேர்வு எழுதியவர் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவரா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த விசாரணையை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றுவது குறித்து காவல் துறை தலைவர்தான் முடிவு செய்ய வேண்டும். உதித் சூர்யா சார்பில் ஆள் மாறாட்டம் செய்து "நீட்' தேர்வு எழுதியவர் குறித்த விவரம் தெரிந்தவர்கள் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக தொலைபேசி எண்: 04546-253101, செல்லிடப்பேசி எண்: 94981 01570 ஆகியவற்றில் தொடர்பு கொண்டும், ள்ல்ர்ச்ச்ண்ஸ்ரீங்ற்ட்ங்ய்ண்க்ண்ள்ற்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீர்ம் என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தகவல் தெரிவிக்கலாம் என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024