Sunday, September 22, 2019

மறந்து போன விருந்து

By முனைவர் அருணன் கபிலன்

விருந்து என்றவுடன் நமக்கு அறுசுவை உணவுகள் நிறைந்த விழாதான் நினைவுக்கு வருகிறது. உண்மையில் அது உணவு மட்டும்தான். ஆனால் விருந்து என்ற சொல்லுக்கு விருந்தினராகிய உறவினர்களின் கூட்டம் என்னும் உண்மையான பொருள் மறைந்து போய் விட்டது.
உறவுகளும் நட்புகளுமாகச் சூழ்ந்திருக்கத் தன் இல்லத்தில் நடைபெறும் நல்வேளைப் பொழுதுகளில் மகிழ்ந்திருந்து அறுசுவை உணவு உண்ணும் இனிய நிகழ்வே முழுமையான விருந்து. இதனைத் தமிழ் மரபு விருந்தோம்பல் என்கிறது. தெய்வப் புலவர் திருவள்ளுவர் விருந்தின் சிறப்பினைப் போற்றித் தனி அதிகாரமே படைத்திருக்கிறார். பண்டிகைக் காலங்களில் அவரவர் வீடுகளில் செய்யப்பட்ட உணவுகளைப் பரிமாறிக் கொள்வதும் விருந்தோம்பலின் ஒரு பகுதிதான். அதிலும் சமயக் கலப்பு நிறைந்த விருந்தோம்பலும் இன்றைக்கு உண்டு.

பழங்காலங்களில் ஓர் ஊரில் நடைபெறுகின்ற அம்மன் திருவிழா, ஐயனார் திருவிழா, தேர்த் திருவிழா போன்ற ஊர்ப் பொது விழாக்களுக்கு அண்மையில் உள்ள ஊர்களிலிருந்து உறவினர்கள் புடைசூழ வருகை தந்து விடுவார்கள். பத்து நாட்களும் விருந்து மணக்கும் அந்த இனிய நாள் ஞாபகங்களை இன்றைய பெரியவர்கள் தங்கள் நெஞ்சுக்குள் பசுமையாகத் தேக்கி வைத்திருப்பார்கள்.
ஒருகாலத்தில் திருமணம்கூடப் பல நாள் விழாவாகத்தான் நடைபெற்றது. வேளாண் தொழில் செய்வோர் அந்த விழாக்களுக்கு தான் மட்டும் செல்லாது தங்களுடைய கால்நடைகளையும் வளர்ப்பு உயிரிகளையும் விருந்தினராகவே அழைத்துச் சென்றிருக்கின்றனர்.
உண்மையில் விருந்து என்பது அறுசுவையோடு கூடிய உணவுதான் என்றாலும் அந்த உணவைத் தங்களின் முயற்சியால் தங்களின் நிலத்தில் விளைந்த பொருள்களால் தங்கள் வீட்டுப் பாத்திரங்களால் தாங்களே சமைத்துத் தாங்களே ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாகச் சேர்ந்து பரிமாறித் தாங்களும் மகிழ்ந்து உறவினர்களாகிய விருந்தினர்களையும் மகிழ்வித்து இன்புற்றிருந்த காலம்தான் உண்மையான விருந்துக் காலம்.

விருந்தினரை வரவேற்கும் முறை குறித்து இளையான்குடி மாறநாயனார் புராணத்தில் தெய்வச் சேக்கிழார் மிக அழகான வரையறை செய்கிறார். விருந்தினரை வாசல்வரை சென்று பணிந்து அழைத்து வந்து அவர்களுடைய பாதங்களைத் தூய்மையான நீரினால் புனிதம் செய்து மனைக்குள் எழுந்தருள்வித்து சரியான ஆசனத்தில் இருக்கச் செய்து, அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து தந்து அவர்கள் விரும்பியவாறு வேண்டியவாறு அவர்களுக்கு ஏற்ற அறுசுவை உணவு வழங்குவதையே தனது தொழிலாகவும் சிவத்தொண்டாகவும் கொண்டு வாழ்ந்தவர் இளையான்குடி மாறநாயனார். இதில் ஒரு மறைபொருளைச் சேக்கிழார் உணர்த்திக் காட்டுகிறார். இளையான்குடி மாறநாயனாரின் இயல்பு சிவச்சின்னங்கள் அணிந்து வரும் யாவராயினும் அவர்களை இவ்வாறு வரவேற்பார் என்றும், வரும் யாவராயினும் அவர்களை இவ்வாறு வரவேற்பார் என்றும் இரு மறைப் பொருள்களை உணர்த்திக் காட்டுகிறார்.

விருந்து என்பதே புதியவர்களாய் வருபவர்கள் என்னும் பொருளில் இங்கு கையாளப்பெறுகிறது. என்ன அதிசயம்? ஹோமரின் காலத்தில் கிரேக்க மத நம்பிக்கைகளின்படி சியுசு என்னும் தெய்வம்தான் விருந்தோம்பல் பொறுப்பை ஏற்று நடத்தியதாம். கிரேக்க வழக்கப்படி வீட்டுக்குப் புறத்தே செல்லும் அயலார் ஒருவரை அந்த வீட்டைச் சேர்ந்தவர்கள் தங்கள் இல்லத்திற்கு விருந்தினராக வருமாறு அழைப்பு விடுப்பர். அவ்வாறு தம்வீட்டுக்கு வந்த அந்த விருந்தினரின் பாதங்களைக் கழுவி, உணவு மற்றும் திராட்சை ரசத்தை அளித்து அவர் இளைப்பாறிய பின்னரே, அவரது பெயரைக் கேட்பது வழக்கமாக இருந்திருக்கிறது. தமிழ்மரபுக்கும் கிரேக்க மரபுக்கும் எத்தனை பொருத்தம்? இது மட்டுமா? விருந்தினர் கேட்டால் என்னவெல்லாம் தரலாம்? வந்தவர் ஒரு குடிக்கு ஒரு மகனாக இருக்கும் தனது இளம்பிள்ளையைக் கறியாகச் சமைத்துத் தா என்று கேட்டவுடன் சற்றும் சளைக்காமல் தானும் தன் மனைவியுமாய்ச் சேர்ந்து கொண்டு தன்பிள்ளையை விருந்தினர் கேட்ட விதத்திலேயே சமைத்துத் தந்தவர் சிறுத்தொண்ட நாயனார். 

தமது இல்லம் எழுந்தருளி தங்கி இருந்து அறுசுவை உண்டபின்னால் தான் விரும்புவதைத் தரமுடியுமா எனக்கேட்டு, உன் மனைவியைத் தா என்றவுடன் தயங்காமல் தந்தவர் இல்லையே என்னாத இயற்பகை நாயனார். 

தன் வீட்டிற்கு விருந்தாக வந்த தேவதைகளிடம் தவறாக நடந்து கொள்ள முயன்ற ஒரு கும்பலிடமிருந்து அவர்களைக் காப்பாற்ற, இவர்களை ஒன்றும் செய்ய வேண்டாம். அவர்கள் என் கூரையின் கீழ் விருந்தினர்களாக வந்தவர்கள் என்று கூறி, அந்தக் கும்பலுக்குத் தன் மகளிரைப் பதிலாக நிறுத்திய லோத் என்பவரின் கதையைக் குறித்து விவிலியத்தின் ஆதிஆகமம் விவரிக்கிறது.

இதனால் விருந்தினர்கள் என்றாலே முன்பின் அறியாத புதியவர்கள் என்றும் அவர்களுக்கு அளிக்கப் பெறும் அறுசுவை உணவு மட்டுமல்லாமல் அவர்களின் மெய்ம்மனமகிழ்வே உண்மையான விருந்து என்பதும் அவர்களுக்காகத் தங்களையே ஈயும் ஈகைப் பண்பே என்பதும் புலப்படுகிறது.

இன்றைய நிலையில் விருந்து என்பது என்னவாயிருக்கிறது? ஏதேனும் ஒரு திருமண மண்டபத்தில் அல்லது நட்சத்திர விடுதியில் தொழில்முறைச் சமையல் வல்லுநர்கள் சமைத்த உணவை அமர்ந்தோ நின்றோ மற்றொரு தொழில்முறை உபசரிப்பாளர் பரிமாற நடைபெறுவதே விருந்து என்பதாக உள்ளது.
கிராமங்களில்கூட இப்போது விருந்தினர்களா
கிய உறவினர்கள் வந்துவிட்டால் உடனே உணவு விடுதியில் உணவு வாங்கி வரும் வழக்கம் மிகுந்து வருகிறது. எந்த நல்விழாவாக இருந்தாலும் இத்தனை இலைச் சாப்பாடு என்று கணக்குச் செய்து இன்னின்ன வகைப் பண்டங்கள் என்று பக்கத்து நகரத்திலிருக்கும் உணவுக் கடையில் பட்டியல் கொடுத்து விட்டால் விருந்து நிறைந்து விடுகிறது.

இவ்விதமான விருந்துகளில் இலைகளில் பரிமாறப்படுவதில் பாதிக்கு மேலான உணவுகள் குப்பைக்கே சென்று விடுகின்றன. தற்போது ஒரு மாற்றமாய் மிஞ்சுகிற உணவுப் பொருள்களைச் சேகரித்து அந்தந்த ஊர்களில் உள்ள ஆதரவற்றோர்களுக்குக் கொண்டு சேர்த்துப் பசியாற்றும் குழுக்களும் இயங்குவது சற்று ஆறுதலாக இருக்கிறது. அது இன்னொருவகை விருந்தாகி வருகிறது.

பொருள் படைத்தோர் இல்லங்களில் விருந்து என்பது கேளிக்கையாய் மாறி விட்டது. அவர்களோடு ஒட்ட முடியாமல் நடுத்தர வர்க்கத்து மக்களும் தவித்துத் தாங்களும் அதுபோன்ற விருந்துகளுக்கு ஆசைப்படுகிறார்கள். கிராமங்களில் வாழும் ஏழைகளின் வீடுகளில் மட்டும் இன்னும் கொஞ்சம் மிச்சமிருக்கிறது உண்மையான விருந்து.
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் நல்லறமாக விளங்கிய விருந்தோம்பல் மெல்ல மெல்லச் சிதைந்து பணத் துண்டுகளை வீசிப் பண்டங்களை வாங்கிக் கொட்டும் பகட்டுத்தனமாய் மாறிப் போய்விட்டது. எல்லாத் துறைகளையும் தன்பால் வளைத்துக் கொண்ட வணிகச் சூழல் உயிரிரக்கப் பண்பின் அடையாளமாகிய விருந்தினையும் உணவினையும் விலைகூறி விற்கத் தயங்கவில்லை.

விருந்து என்னும் அறியாதவர்களுக்கு உணவிடுவதற்கு இன்றைக்கு யாரும் காத்திருப்பதில்லை. பிச்சையெடுப்பவர்களும்கூட உணவை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. பணமிருந்தால் எதுவும் எங்கும் கிடைக்கும் என்பதால் அவர்களுக்கும் கூடப் பணமே முதன்மையாகத் தோன்றுகிறது.

நம் பழங்கால விருந்தோம்பல் வாழ்க்கையைப் பறைசாற்றும் விதமாகத்தான் சத்திரம் என்றும் சாவடி என்றும் பல ஊர்கள் இன்றும் வழக்கில் இருந்துகொண்டு இருக்கின்றன. ஆனால், அவற்றின் தன்மையே மாறிப் போய்விட்டனவே. தல யாத்திரையும், தீர்த்த யாத்திரையும் மேற்கொண்ட அந்தக் கால மனிதர்களுக்குக் கோயில்களும் சத்திரங்களும் சாவடிகளும்தான் விருந்து வழங்கும் இடங்களாக விளங்கின. சுற்றுலா என்னும் பெயர் பெற்றபின்னால் எல்லாமே விலை கொடுத்து வாங்கும் விலைப் பொருள்கள் ஆகிவிட்டன.
எத்தனை பெரிய இடங்களில் நடக்கும் எந்த விழாக்களிலும் மற்ற நிகழ்வுகள் நிறைந்திருந்தாலும் விருந்தில் குறை என்றால் ஊரே கூடிப் பேசும் என்ற பழங்காலக் கதைகள் நிறைய உண்டு. அறுசுவை உணவேயானாலும் முறையாகக் கவனித்து, கனிந்து உணவிடாத இடங்களில் உண்ணத் தலைப்படத் தமிழர்கள் கூசுவர். உண்ணீர் உண்ணீர் என்று ஊட்டாதார் தம்மனையில் உண்ணாமை கோடி பெறும் என்பார் ஒளவைப் பெருமாட்டி.

பொதுவாகத் திருமடத்தில் வசதி படைத்தவர்களுக்கும் பெரிய மனிதர்களுக்கும் தனி விருந்து. சாதாரண மக்களுக்கு, கிராமப்புற விவசாய மக்களுக்கு இரண்டாந்தர உணவு வழங்குவது வழக்கம். இந்த முறையை நாம் விரும்பவில்லை. நிர்வாகிகளுக்கு இதனை அறிவிக்க ஒரு யுக்தி செய்தோம். ஒருநாள், சிவகங்கை மன்னர் வரப் போகின்றார். மதியம் விருந்து தயாரியுங்கள் என்று உத்தரவிடப்பட்டது.
மடம் சுறுசுறுப்பாக இயங்கியது. சுவையான உணவு சமைத்தார்கள். மடத்து முகப்பு சிறப்பாக அலங்கரிக்கப்பட்டது. சிவகங்கை மன்னரை வரவேற்க ஆயத்தம். மணி பகல் 12. ஆனாலும் சிவகங்கை மன்னர் வரவில்லை. நமது மடத்து விவசாயிகள் சிலர் வந்தனர். நாம் விவசாயிகளை வரவேற்று, மடத்து நிர்வாகிகளிடம், இவர்கள்தான் சிவகங்கை மன்னர்கள். இவர்களை உபசரியுங்கள் என்றோம். எல்லோர் முகத்திலும் வியப்பு: ஆம்! நாட்டின் மன்னர்கள் விவசாயிகள்தான்.
இந்தச் சம்பவத்துக்குப் பிறகு திருமடத்தில் விசேஷங்களில் இரண்டு உணவு தயாரிப்பு இல்லை. ஒரே வகை உணவு-ஒரே பந்தி என்று விருந்தின் பெருமை குறித்து அனைவருக்கும் உணர்த்துவதற்காக குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனகர்த்தராக விளங்கிய குன்றக்குடி அடிகளார் பெருமான் நிகழ்த்திய திருப்பாடம் இது.

ஊர்ந்து திரிகிற வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதைப் போல அலைந்து திரிகிற தங்களின் வயிற்றுக்குச் சொரிபொருளாக உணவை அள்ளி எறிந்து விட்டு அடுத்த வேலையை நோக்கி அரக்கப் பரக்க ஓடுகிற மனிதர்கள் விருந்து என்னும் சிறந்த மனிதப் பண்பைத் தாங்கள் மறந்துவிட்டதை அறிவார்களா?

No comments:

Post a Comment

Diwali surprise: 4% hike in DA for govt employees

Diwali surprise: 4% hike in DA for govt employees  TIMES NEWS NETWORK 31.10.2024  Chandigarh : Calling it a Diwali bonanza for the families ...