Monday, September 23, 2019

ஆராய்ச்சி படிப்புகளில் ஆர்வமில்லை உயர்கல்வி ஆய்வில் புள்ளி விபரம்

Updated : செப் 23, 2019 00:34 | Added : செப் 22, 2019 22:25 |

புதுடில்லி:நாடு முழுவதும், பல்வேறு கல்வி நிறுவனங்களில், பிஎச்.டி., எனப்படும், ஆராய்ச்சி படிப்பின் மீது ஆர்வம் குறைந்து வருவது, ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில், அகில இந்திய உயர்கல்வி குறித்து, சமீபத்தில், ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் தெரியவந்துள்ள விபரங்கள்:பல்கலைக்கழகங்கள், கல்லுாரிகள் மற்றும் தனிச்சிறப்பு கல்வி நிறுவனங்கள் என்ற மூன்று பிரிவுகளில், உயர்கல்வி குறித்த ஆய்வுகள் நடத்தப்பட்டன.

தேர்வு

இதில், 962 பல்கலைக்கழகங்கள்; 38 ஆயிரத்து, 179 கல்லுாரிகள்; 9,190 தனிச்சிறப்பு கல்வி நிறுவனங்கள், ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. மொத்தமுள்ள கல்லுாரிகளில், 34.9 சதவீத நிறுவனங்களில் மட்டுமே, முதுநிலை படிப்புகள் உள்ளன; 2.5 கல்லுாரிகளில் மட்டுமே, பிஎச்.டி., எனப்படும் ஆராய்ச்சி படிப்புகள் உள்ளன. இவற்றில், பெரும்பாலான கல்லுாரிகளில், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளையே, முதுநிலை மேற்படிப்புக்கு செல்லும் மாணவர்கள் தேர்வு செய்கின்றனர்.

இதற்கு அடுத்தபடியாக, சமூக அறிவியல் மற்றும் மேலாண்மை தொடர்பான படிப்புகள், மாணவர்களின் அடுத்த தேர்வாக உள்ளன. உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ள மாணவர்களில், ஒரு லட்சத்து, 69 ஆயிரத்து, 170 மாணவர்கள் மட்டுமே, பிஎச்.டி., படிப்பில் சேர்ந்துள்ளனர். இது, மொத்த மாணவர்களில், 0.5 சதவீதம் மட்டுமே.

34.5 சதவீத மாணவர்கள்

இவர்களில், மாநில அரசு பல்கலைக்கழகங்களில், அதிகபட்சமாக, 34.5 சதவீத மாணவர்கள் ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்கின்றனர். அடுத்ததாக, தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ள கல்வி நிறுவனங்களில், 21.6 சதவீதம் பேரும், டீம்டு எனப்படும், தன்னாட்சி அதிகாரம் பெற்ற தனியார் பல்கலைக்கழகங்களில், 21.6 சதவீதம் பேரும், மாநில அங்கீகாரம் பெற்ற தனியார் பல்கலைக்கழகங்களில், 13.4 சதவீதம் பேரும், ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்கின்றனர்.

கல்லுாரி மற்றும் பல்கலைக்கழங்களில் உள்ள மொத்த மாணவர்களில், 79.8 சதவீதம் பேர், இளநிலை பட்டப்படிப்பில் உள்ளவர்கள். இளநிலை படிப்புகளை பொருத்தவரை, பி.ஏ., பட்டப்படிப்பை முதல் தேர்வாகவும், அதைத் தொடர்ந்து, பி.எஸ்சி., மற்றும் பி.காம்., படிப்புகளை அடுத்த தேர்வாகவும் மாணவர்கள் விரும்புகின்றனர். இளநிலை படிப்பை பொருத்தவரை, கலை, சமூக அறிவியல் படிப்புகளில், அதிகளவாக, 35.9 சதவீதம் பேர் சேர்ந்து உள்ளனர்.

தனியார் நிர்வாகம்

அதைத் தொடர்ந்து, அறிவியல் படிப்புகளில், 16.5 சதவீதம் பேரும், வணிகவியல் படிப்புகளில், 14.1 சதவீதம் பேரும், பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் படிப்புகளில் 13.5 சதவீதம் பேரும் சேர்ந்துள்ளனர். மொத்தமுள்ள கல்லுாரிகளில், 34.8 சதவீதம், கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்வியில், எதாவது ஒன்றை மட்டுமே, பிரதானமாகக் கொண்டு உள்ளன. இவற்றில், 83.1 சதவீதகல்வி நிறுவனங்கள், தனியாரால் நிர்வகிக்கப்படுகின்றன.

தனியாரால் நிர்வகிக்கப்படும் கல்லுாரிகளில், 38.1 சதவீத நிறுவனங்கள், பி.எட்., படிப்பை மட்டுமே கற்றுத்தருகின்றனர். நாட்டிலேயே அதிகபட்சமாக, ஆந்திரா மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில், 88 சதவீத உயர் கல்வி நிறுவனங்கள், தனியாரால் நிர்வகிக்கப்படுகின்றன. இதற்கு அடுத்தபடியாக, மூன்றவது இடத்தில் உள்ள தமிழகத்தில், 87 சதவீத உயர் கல்வி நிறுவனங்கள், தனியாரால் நடத்தப்படுகின்றன. குறைந்த பட்சமாக, அசாமில், 16 சதவீதம் மட்டுமே தனியார் கல்வி நிறுவனங்கள் உள்ளன. இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024