Saturday, January 25, 2020

நிர்பயா வழக்கு: குற்றவாளிகள் இருவர் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்தது டெல்லி நீதிமன்றம்: தண்டனையைத் தாமதிக்கத் திட்டம்; அரசுத் தரப்பு வாதம்

புதுடெல்லி

கடந்த 2012-ம் ஆண்டில் டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேரில் இருவர் தாக்கல் செய்த மனுவை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

கடந்த 2012-ம் ஆண்டு டெல்லி மருத்துவக் கல்லூரி மாணவி, ஓடும் பேருந்தில் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டுத் தூக்கி வீசப்பட்டார். அதன்பின் தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.

இந்த வழக்கில் முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கு மரண தண்டனை விதித்து 2013-ம் ஆண்டு செப்டம்பரில் டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரித் தாக்கல் செய்த மறு ஆய்வு மனு, சீராய்வு மனு ஆகியவற்றை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

குற்றவாளிகளில் ஒருவரான பவன்குமார் குப்தா குற்றச் சம்பவம் நடந்தபோது தான் பதின்வயது உடையவராக இருந்தேன் என்று கூறி தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரிய மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் தாக்கல் செய்த கருணை மனுவையும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார். இதைத் தொடர்ந்து குற்றவாளிகள் 4 பேருக்கும் பிப்ரவரி 1-ம் தேதி காலை 6 மணிக்குள் தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என டெல்லி விசாரணை நீதிமன்றம் டெத் வாரண்ட் பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாகக் குற்றவாளிகள் வினய் குமார் சர்மா, அக்சய் குமார் சிங், பவன் குப்தா தரப்பில் வழக்கறிஞர் ஏ.பி.சிங், டெல்லி நீதிமன்றத்தில் நேற்று ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில் ‘வினய் குமார் கருணை மனு தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளது.

அதேபோல, அக்சய் குமார் சிங், பவன் குப்தா ஆகியோர் தனது தண்டனையை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய இன்னமும் வாய்ப்பு உள்ளது. ஆனால், சிறை அதிகாரிகள் சில ஆவணங்களைத் தர மறுப்பதால் மனுக்களைத் தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. முக்கியமாக, 70 பக்கங்கள் கொண்ட வினய் குமாரின் டைரியை சிறை அதிகாரிகள் தர மறுக்கின்றனர். அதனை உடனடியாக தர சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்" என அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு டெல்லி பாட்டியாலா நீதிமன்ற கூடுதல் அமர்வு நீதிபதி அஜய் குமார் ஜெயின் ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது டெல்லி போலீஸார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில், "குற்றவாளிகளின் வழக்கறிஞர் கேட்டதுபோல அனைத்து ஆவணங்களும் திஹார் சிறை நிர்வாகத்தினர் தரப்பில் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர் தண்டனை தாமதப்படுத்தும் தந்திரத்தில் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவின் ஒட்டுமொத்தநோக்கமே சட்டத்தை ஏமாற்ற வேண்டும், தோற்கடிக்க வேண்டும் என்பதுதான். அவர்களுக்குத் தேவையான அனைத்து ஆவணங்களும் வழங்கப்பட்டபின் மீண்டும் மனு செய்துள்ளார்கள். சிறை அதிகாரிகள் வழங்கிய டைரியைக் கூட உங்களிடம் தாக்கல் செய்திருக்கிறோம். குற்றவாளிகள் ஒருவரான வினய்குமார் வரைந்த ஓவியங்களையும் புகைப்படம் எடுக்க அனுமதித்துள்ளோம். நீதிமன்றம் அனுமதித்தால் அனைத்தையும் வழங்கத் தயாராக இருக்கிறோம்" எனத் தெரிவித்தார்

குற்றவாளிகளின் வழக்கறிஞர் ஏ.பி. சிங் வாதிடுகையில், ''குற்றவாளி வினய் குமார் சிங்கிற்கு ஸ்லோ பாய்ஸன் வழங்கப்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் மருத்துவ அறிக்கைகளைக் கேட்டால் சிறை அதிகாரிகள் வழங்க மறுக்கின்றனர். சில முக்கிய ஆவணங்கள் மட்டுமே வெள்ளிக்கிழமை இரவு வழங்கப்பட்டன. அவரின் டைரி, மருத்துவ அறிக்கை வழங்கப்படவில்லை.

சிறை அதிகாரிகள் அதுபோன்ற எந்த ஆவணங்களும் இல்லை என்று தெரிவிக்கிறார்கள். வினய் குமார் நன்றாக ஓவியம் வரையக்கூடியவர். அவர் ஓவியம் மூலம் கிடைத்த பணம் குறித்து குடியரசுத் தலைவரிடம் தெரிவித்து கருணை மனுத் தாக்கல் செய்ய இருக்கிறோம். மற்றொரு குற்றவாளி பவன் சிங் தலையில் பலத்த அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் மருத்துவமனை அறிக்கையும் வழங்கப்படவில்லை. அக்சய் சிங் குமார் மருத்துவ அறிக்கையும் வழங்கப்படவில்லை" என வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அஜய் குமார் ஜெயின், "சிறை அதிகாரிகள் ஆவணங்கள், ஓவியங்களை வழங்குவார்கள். அதில் தேவைப்படுவனவற்றை வழக்கறிஞர் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். அதற்கு எந்தவிதமான தடையும் இல்லை. இந்த வழக்கில் இதற்கு மேல் எந்தவிதமான உத்தரவும் பிறப்பிக்கத் தேவையில்லாததால் மனுவைத் தள்ளுபடி செய்கிறேன்" எனத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024