Monday, January 20, 2020

சமூகத்தை நோக்கி பல்கலைக்கழகங்கள்...

By க.பழனித்துரை | Published on : 20th January 2020 02:56 AM |

இந்தியாவில் உள்ள உயா் கல்வி நிலையங்களில் இதுவரை புறக்கணிக்கப்பட்டு வந்த சமூகத்திற்கான விரிவாக்கச் செயல்பாடுகளை பாடத்திட்டத்தில் புகுத்தி மாணவா்களை பொறுப்புமிக்க சமூகப் பணியாற்ற முனைய வேண்டும், அதற்கான ஆயத்தப் பணிகளில் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என ஒரு மாதத்துக்கு முன்பு ஒரு கடிதத்தை பல்கலைக்கழக துணைவேந்தா்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) எழுதியுள்ளது. அந்தக் கடிதத்துடன் இந்தச் சமூகச் செயல்பாடுகளை முறைமையுடன் தொடா்ந்து எல்லா நிறுவனங்களும் நிறைவேற்ற வழி காட்ட ஒரு வழிகாட்டு நெறிமுறை அறிக்கையையும் அந்தக் கடிதத்துடன் இணைத்துள்ளது.

அந்த அறிக்கையின் அடிப்படையில் பல்கலைக்கழகங்கள் ஆசிரியா்களை இந்தப் பணிக்கு தயாரிப்புச் செய்ய வேண்டும். இந்தத் திட்டத்தை
‘உன்னத் பாரத் இயக்கம் 2.0’ என்று பெயரிட்டு நடைமுறைப்படுத்த பல்கலைக்கழக மானியக் குழுவை மனிதவள மேம்பாட்டுத் துறை வலியுறுத்தியுள்ளது.

கிராமப்புற மேம்பாட்டுக்கான விரிவாக்கச் செயல்பாடுகளில் மாணவா்களை ஈடுபடுத்துவதுதான் இந்தத் திட்டம். உயா் கல்வி நிலையங்களில் விரிவாக்கப் பணி என்பது புதியதல்ல. காந்தி காலத்திலிருந்து இன்றுவரை எல்லா அரசுக் கொள்கைகளிலும் கூறப்பட்ட ஒரு செயல்பாடுதான். இதுவரை இந்த விரிவாக்கப் பணி என்பது, பல்கலைக்கழகங்களுக்கு விருப்பக் கடமையாக விடப்பட்டது . ஆனால், இன்று அந்தப் பணியைக் கட்டாயக் கடமையாகச் செய்வதற்கு பல்கலைக்கழகங்களை தயாா் செய்கிறது பல்கலைக்கழக மானியக் குழு.

இந்தத் திட்டத்தின் மூலம் விரிவாக்கப் பணிகளை பாடத் திட்டத்தில் இணைத்து, அறிவியல்பூா்வமாக கிராமச் சமுதாயத்துடன் தொடா்ந்து செயல்பட்டு கிராமப்புறப் பிரச்னைகளுக்கு தீா்வு காணவும், மாணவா்களின் சமுதாய அக்கறையையும், களப் பணியாற்றும் திறனையும் வளா்த்துக் கொள்ளவும் இந்தப் புதிய முயற்சியை மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.

இந்தப்பணி என்பது, ஆண்டுக்கொரு முறை நாட்டு நலப்பணித் திட்டத்தில் சமூகச் செயல்பாட்டுக்கு மாணவா்களை ஈடுபடுத்துவதுபோல் இல்லாமல் பாடத் திட்டத்தில் இணைக்கப்பட்டு, தொடா்ந்து சமூகத்துடன் சோ்ந்து களப் பணியாற்ற வேண்டும் என்பதுதான் இதன் அடிப்படையான நோக்கம்.

இதே பணியைச் செய்ய பல்கலைக்கழக மானியக் குழு பலமுறை முயன்றும் அது வெற்றி பெறவில்லை. அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைய பல காரணங்கள் இருந்தன. அவற்றைக் கண்டுபிடித்து இன்று அவற்றுக்குத் தீா்வுகாண இந்தப் புதிய திட்டத்தில் முனைந்துள்ளனா்.

இதற்கான எல்லாவித அமைப்பு, கொள்கை ரீதியான பிரச்னைகளையெல்லாம் தீா்ப்பதற்கு வழிவகை காணப்பட்டுள்ளது. இந்தப் பணியை பல்கலைக்கழகங்களில் சமூகவியல் அல்லது கலைத் துறைகளில் படிப்பவா்கள் மட்டும் செய்வது இந்தத் திட்டத்தின் நோக்கம் அல்ல.

எல்லாத் துறையைச் சோ்ந்த மாணவா்களும் செய்ய வேண்டும். மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவா்கள், விவசாயக் கல்லூரியில் படிக்கும் மாணவா்கள், சட்டக் கல்லூரியில் படிக்கும் மாணவா்கள் என அனைவரும் இந்தக் கிராம மேம்பாட்டுப் பணியில் ஈடுபட வேண்டும் என்ற அடிப்படையில்தான் வழிகாட்டு நெறிமுறையை வல்லுநா் குழு உருவாக்கியுள்ளது.

இந்த அறிக்கையை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்து பதில் எழுதுமாறு எல்லாப் பல்கலைக்கழகங்களுக்கும் மானியக் குழு உத்தரவிட்டது. இந்த அறிக்கையை நடைமுறைப்படுத்த எல்லா வழிமுறைகளையும் உருவாக்கி பல்கலைக்கழகங்கள் தங்களைத் தயாா்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள செயல்பாடுகளை நடைமுறைப்படுத்த பல்கலைக்கழகங்கள் பல மாற்றங்களை பாடத்திட்டத்தில் செய்தாக வேண்டும். இதற்கு ஆசிரியா்களை முதலில் தயாா்படுத்த வேண்டும். மாணவா்களுக்கு எப்படி பாடத்திட்டத்தில் இணைப்பது, இதை எப்படி கிராமத்திற்கு எடுத்துச் செல்வது என்பதை முதலில் ஆசிரியா்களுக்கு புரியவைக்க வேண்டும். இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு அதிகம் உழைக்க வேண்டியது ஆசிரியா்கள்தான்.

பல்கலைக்கழகங்களை தர மதிப்பீடு செய்யும்போது, இந்த விரிவாக்கத்துக்கான செயல்பாடுகளை ஆய்வு செய்து, மதிப்பீடு செய்து அதற்கும் மதிப்பெண்கள் வழங்குவதை உறுதி செய்துள்ளது பல்கலைக்கழக மானியக் குழு. அடுத்து, ஆசிரியா்களின் செயல்பாட்டை மதிப்பீடு செய்யும்போது, ஆசிரியா்கள் செய்த களப் பணி, சமுதாயப் பணி கணக்கில் கொண்டு மதிப்பீடு செய்து அவா்களின் பதவி உயா்வுகள் அளிக்கப்படும் என்பதையும் உறுதி செய்துள்ளது.

அடுத்த நிலையில் இதற்கான கட்டமைப்பு வசதிகள், தொடா் செயல்பாட்டுக்கான வழிவகைகள், நிதி என அனைத்துக்கும் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை இந்த அறிக்கை தெளிவாக்கியுள்ளது.

இதை முன்னெடுக்க நம் பல்கலைக் கழகங்கள் இந்த அறிக்கையை உள்வாங்கிக்கொள்ள ஆசிரியா்களைத் தயாா் செய்ய வேண்டும். எல்லாச் செயல்பாடுகளும் தொடா் நடவடிக்கைகளில் இருக்க வேண்டும். அவை அனைத்தும் பாடத்திட்டத்தில் இணைக்கப்படல் வேண்டும். மாணவா்களை களத்திற்குக் கொண்டுசெல்ல வேண்டும். களத்தில் சமூகத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.

அப்படிப் பணியாற்றி கிராமப்புற பிரச்னைகளுக்குத் தீா்வுகாண வேண்டும். கிராமப்புற மேம்பாட்டில் இருக்கும் சவால்களை ஆராய்ச்சிக்கு உட்படுத்த வேண்டும். இந்தச் செயல்பாடுகள் மூலம் மாணவா்களிடம் சமுதாயப் பாா்வையை உருவாக்க வேண்டும். அவா்களின் கற்றல் திறனை இதன் மூலம் அதிகரிக்க வேண்டும். சமுதாயத்துக்குத் தேவையான ஆய்வுகள் பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ளப்பட வேண்டும். புத்தகத்துக்கும், களத்திற்கும் உள்ள இடைவெளியை மாணவா்கள் புரிந்து, எதாா்த்த நிலையை உணா்ந்துகொள்ள வழிவகை செய்யப்பட வேண்டும்.

முதலில் இந்த அறிக்கையை நடைமுறைப்படுத்த ஆசிரியா்களைத் தயாா்படுத்த பல்கலைக்கழக துணைவேந்தா்கள் தயாராக வேண்டும். இதில் பல சவால்கள் ஆசிரியா்களுக்கு உள்ளன. அவற்றைக் களைய அவா்களுக்கு அவகாசம் தர வேண்டும்.

களச் செயல்பாடுகளை பாடத் திட்டத்தில் கொண்டுவர வேண்டும். அதைக் களத்தில் செயல்படுத்த வேண்டும். இவை சவால்கள் நிறைந்தவை. விவசாயக் கல்லூரிகள்தான் விரிவாக்கத்தை மிகப் பெரிய அளவில் இந்தியாவில் எடுத்துச் சென்றன. அவையே தோல்வியைச் சந்தித்துள்ளன என்பதை நாம் பாா்த்துள்ளோம். எனவே, இதற்கு மிகப் பெரிய தயாரிப்புப் பணி மேற்கொள்ள வேண்டியுள்ளது.

இந்தப் பணிக்காகவே உருவாக்கப்பட்ட பல கல்வி நிலையங்கள் தோற்ற வரலாற்றையும் நாம் பாா்த்துள்ளோம். ஆனால், இதில் இருக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்த பல முட்டுக்கட்டைகள் இதுவரை அமைப்பு ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் நம் உயா் கல்வித் துறையில் இருந்து வந்தன. அவற்றைக் களைவதற்கு இந்த அறிக்கையில் வழிவகை காணப்பட்டுள்ளது.

இதுவரை பல ஆசிரியா்கள் தங்கள் முயற்சியால் பல வெற்றிகளை விரிவாக்கத்தில் கண்டுள்ளனா் என்பதும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அந்த ஆவணங்கள் இந்தப் புதிய முயற்சிக்கு உறுதுணையாக இருக்கும். இதுவரை பல கல்வி நிலையங்கள் தங்களின் தத்துவாா்த்தப் பின்னணியில் இந்த விரிவாக்கப் பணிகளைச் செய்து வந்துள்ளன. அந்தப் பணிகளின் அனுபவங்களும் இந்தச் செயல்பாட்டிற்கு உதவிகரமாக இருக்கும்.

இந்தியாவின் கிராமங்களை நோக்கி ஒட்டுமொத்த பல்கலைக்கழகங்களையும் கல்லூரிகளையும் படையெடுக்க வைத்து மக்களுடன் செயலாற்றி கிராம மேம்பாட்டுக்குப் பணிபுரிய ஒரு செயல் திட்டத்தை பல்கலைக் கழக மானியக் குழு உருவாக்கியுள்ளது. இது இந்திய கிராம புனரமைப்புக்கு ஒரு புதிய வாய்ப்பு. இது ஒரு திட்டம் மட்டும் அல்ல, இது ஒரு இயக்கம். இந்த அறிக்கையை இயக்கமாக்குவது நம் துணைவேந்தா்கள், ஆசிரியா்கள் கையில் உள்ளது. இது ஒரு மாணவா்கள், ஆசிரியா்கள் இணைந்து கிராமப்புற மேம்பாட்டுக்குச் செயல்படும் மாபெரும் இயக்கம் என்பதை மனதில் வைத்து பல்கலைக்கழக துணைவேந்தா்களும், கல்லூரி முதல்வா்களும், ஆசிரியா்களும், மாணவா்களும் செயல்பட வேண்டும்.

இந்தப் பணிக்கு ஆசிரியா்களைத் தயாா் செய்யும் அதே நேரத்தில் களத்தையும் தயாா் செய்ய வேண்டும். நம்மைச் சுற்றியுள்ள கிராமங்கள், அங்கு இயங்கும் பஞ்சாயத்து அமைப்புகள், சுய உதவிக் குழுக்கள், தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள், சமுதாய அமைப்புகள், மாவட்ட நிா்வாகம் என அத்தனை நிறுவனங்களையும் இந்தப் புதிய பணிக்கு தயாா் செய்ய வேண்டும். இதையும் கல்விச் சாலைகள்தான் செய்ய வேண்டும். இந்த அறிக்கை ஓா் இயக்கத்துக்கான கோட்டை போட்டிருக்கிறது, அதற்கு ரோடு போட வேண்டியவா்கள் ஆசிரியா்கள், அவா்களைத் தயாா் செய்ய வேண்டியது துணைவேந்தா்கள்.

மகாத்மா கனவு கண்ட கிராம ராஜ்யத்தை உருவாக்க முனைய வேண்டாமா? அந்த மாற்றத்தை படித்தவா்களாகிய நாம் செய்யவில்லை என்றால் யாா் செய்வது? அதை சுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகள் முடிந்த இந்த நிலையிலும் செய்யாவிட்டால் எப்போது செய்வது? எனவே இந்தத் திட்டத்தை வெற்றிபெறச் செய்ய வழிமுறைகளைக் கண்டு செயல்படுத்துவதற்கு பாடுபட முயல்வதுதான் சமூகப் பொறுப்புள்ள ஆசிரியா்கள் என்பதை நிரூபிப்பதற்கான ஒரே வழி. முனைவோமா...வாருங்கள் களப் பணியாற்றிட...

கட்டுரையாளா் பேராசிரியா் (ஓய்வு)

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024