ஊரை புறக்கணித்து, 'பறந்த' பஸ்கள்
Added : பிப் 17, 2020 00:20
சேலம்:சேலம் மாவட்டம், மல்லுாருக்குள் வராமல், பைபாசில், 'பறந்த' பஸ்களை சிறைபிடித்த மக்கள், பஸ்களை ஊருக்குள் அனுப்பி, பாடம் புகட்டினர்.
சேலம் மாவட்டம், மல்லுார் வழியாக, நாமக்கல், கரூர், திருச்சி, மதுரை, தஞ்சை, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு, 300க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. மல்லுாருக்கு வெளியே, சேலம் - நாமக்கல் நான்கு வழிச்சாலை செல்கிறது.இதனால், பஸ்கள் மல்லுாருக்குள் வராமல், புறவழிச்சாலையில் செல்கின்றன. அத்துடன், மல்லுார் பயணியரை பஸ்சில் ஏற்ற மறுக்கின்றனர். இதனால், மல்லுார் மற்றும் சுற்றுவட்டாரத்தில், 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள், பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
இந்நிலையில், மல்லுார் வராத பஸ்களை, நேற்று சிறைபிடித்து போராட்டம் நடத்தப் போவதாக, அப்பகுதி மக்கள், 'நோட்டீஸ்' வெளியிட்டனர். மல்லுார் போலீசார் அனுமதிக்காத நிலையில், பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் அய்யனார் தலைமையில், பொதுமக்கள், புறவழிச்சாலையில் நேற்று காலை திரண்டனர்.நான்கு வழிச் சாலையில் சென்ற பஸ்களை சிறைபிடித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தால் 'எக்ஸ்பிரஸ், ஒன் டூ ஒன்' உள்ளிட்ட பஸ்கள், மல்லுார் வழியாக சென்றன. புறக்கணிக்கும் பஸ்களின் முன்புற கண்ணாடி யில், 'வழி - மல்லுார்' என்ற, 'ஸ்டிக்கர்' ஒட்டினர். புறநகர், டி.எஸ்.பி., உமாசங்கர், ஆர்.டி.ஓ., சரவணபவன் ஆகியோர், மக்களை சமாதானப்படுத்தினர்.'அனைத்து பஸ்களும் மல்லுார் வழியாக செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்' என, போக்குவரத்து அதிகாரி களும் உறுதியளித்தனர். இதையடுத்து, போராட்டத்தை கைவிட்டனர்.
No comments:
Post a Comment