Monday, February 17, 2020


நிரம்பி வழியும் ஆதரவற்ற முதியோர் இல்லங்கள்: பராமரிக்க வழி தெரியாமல் தவிக்கும் தன்னார்வலர்கள்

By DIN | Published on : 17th February 2020 02:00 AM




ஈரோடு: ஆதரவற்ற முதியோர் இல்லங்களை நாடி வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் புதிதாக மீட்கப்படும் ஆதரவற்ற முதியோரைப் பராமரிக்க வழி தெரியாமல் தன்னார்வலர்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் இலவச முதியோர் இல்லங்களில் இடமே இல்லை என்பது நிதர்சனமான உண்மை. அந்த அளவுக்கு அனைத்து இலவச முதியோர் இல்லங்களும் நிரம்பி வழிகின்றன.

ஈரோடு மாவட்டத்தில் 12 முதியோர் இல்லங்கள் உள்ளன. இதில், 3 இல்லங்கள் இலவச சேவையை அளிக்கின்றன. பிற இல்லங்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இலவச சேவையும், பிறருக்கு கட்டணம் பெற்றுக் கொண்டும் சேவை அளிக்கின்றன. முதியோர் இல்லங்களுக்கு பராமரிப்புச் செலவுக்காக ஒரு முதியோருக்கு மாதம் ரூ. 750 என்ற அடிப்படையில் அரசு 40 பேருக்கு மட்டும் உதவித் தொகை வழங்குகிறது. இந்த உதவித் தொகை ஆதரவற்ற முதியோரின் உணவு செலவுக்கே போதுமானதாக இல்லை.
இருப்பினும் பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையேயும் நன்கொடையாளர்களின் உதவி மூலம் முதியோர் இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன. நிதி நெருக்கடி காரணமாக, ஆதரவற்ற முதியோர் இல்லங்களில் 50 முதியோரைப் பராமரிப்பது என்பதே பெரிய சவாலாக இருக்கிறது.

இந்நிலையில், இப்போது முதியோர் இல்லத்தை நாடிவரும் ஆதரவற்றோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஈரோட்டில் முதியோர் இல்லங்களுக்கு தினமும் குறைந்தது 10 பேர் வரை தங்களைச் சேர்த்துக் கொள்ளும்படி கோரி தாமாகவோ அல்லது தன்னார்வ அமைப்பினர் மூலமோ வந்து திரும்பிச் செல்வதாகக் கூறுகிறார் முதியோர் இல்லக் காப்பாளர் ஒருவர்.
மேலும், கடந்த 5 ஆண்டுகளாக இந்தப் பணியில் இருக்கும் அவர், நான் பணியில் சேர்ந்த புதிதில் இத்தனை பேர் இல்லத்தை நாடி வரவில்லை. முதியோர் இல்லவாசிகளுக்கு குடும்பத்தவருடன் வாழவே விருப்பம். ஆனால், குடும்பத்தவர்களுக்கு அதில் விருப்பமில்லை என்கிற யதார்த்தம் உறுத்தும் நிலையில் முதியோர் இல்லங்களே, அவர்களின் ஒரே புகலிடமாக இருக்கின்றன. ஆதரவற்ற முதியோர் இல்லங்களை நடத்துவதற்கு மிகப்பெரிய சவாலாக இருப்பது நிதி தேவை. அதனால் இருப்பவர்களிடம் வாங்கி இல்லாதவர்களுக்கு கொடுப்போம் என்ற அடிப்படையில் பெற்றோரை இல்லத்தில் விடுபவர்களிடம் கட்டணம் வசூலித்து அதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு அதிகபட்சமாக 20 பேர் வரை இலவசமாகப் பராமரித்து வருகிறோம்' என்றார்.

நன்கொடையாளர்கள் அதிகரிக்க வேண்டும்: ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் இருந்து பல்வேறு தன்னார்வலர்களால் மீட்கப்பட்ட 100 பேர் என மொத்தம் 150 முதியோரை வைத்து பராமரித்து வரும் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே அழியாநிலை கிராமத்தில் "நமது இல்லம்' என்ற பெயரில் ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தை நடத்தி வரும் எம்.சந்திரசேகர் கூறியதாவது: அரசால் முழுமையாக உதவ முடியாது என்பதால் நன்கொடையாளர்கள் உதவியை நாடுகிறோம். உணவு, உடை, தங்குமிடம், பராமரிப்பு, பணியாளர்கள் ஊதியம் என ஒரு முதியவருக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ. 5,000 வரை செலவாகிறது. இதனால், வசதி உள்ளவர்கள் ஏதாவது ஒரு வகையில் ஆதரவற்ற முதியோர் இல்லங்களுக்கு உதவ முன்வர வேண்டும். தேடி வருபவர்களிடம் உதவி செய்வதைத் தவிர்த்து, இல்லங்களுக்கு நேரடியாகச் சென்று உதவ வேண்டும். இதன் மூலம் தவறுகள் தவிர்க்கப்படுவதோடு, உதவி செய்பவர்களுக்கு நிம்மதியும், மீண்டும் உதவ வேண்டும் என்ற எண்ணமும் உருவாகும். வாழப்போகும் சில காலம் முதியோர் சற்று நிம்மதியான வாழ்க்கையை வாழ, வசதி உள்ளவர்கள் ஏதேனும் ஒரு வகையில் உதவ முன்வர வேண்டும் என்றார்.




இல்லங்களில் இடம் கிடைக்கவில்லை: ஆதரவற்ற முதியோரை மீட்டு இல்லங்களில் சேர்க்கும் ஈரோட்டைச் சேர்ந்த ஜீவிதம் அறக்கட்டளை நிறுவனர் கே.மனிஷா கூறியதாவது:

ஈரோடு பகுதியில் வாரத்தில் குறைந்தபட்சம் 3 ஆதரவற்ற முதியோரை மீட்கிறோம். ஆனால், இந்த முதியோரைப் பராமரிக்க இல்லம் கிடைக்கவில்லை. பெரும்பாலான முதியோர் இல்லங்கள் கட்டணம் பெற்றுக் கொண்டு முதியோரைப் பராமரிக்கும் இல்லங்களாகத்தான் உள்ளன. இங்கு செய்துகொடுக்கப்படும் வசதியைப் பொருத்து ரூ. 5,000 முதல் ரூ. 10,000 வரை மாதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தவிர ரூ. 30,000 முதல் ரூ. 50,000 வரை வைப்புத் தொகை செலுத்த வேண்டும்.

ஆதரவற்ற முதியோரை மீட்டு இல்லம் வரை அழைத்துச் செல்லவே ரூ. 1,000 வரை செலவு செய்ய வேண்டியுள்ளது. இதற்கே மிகவும் சிரமப்படும் நிலையில் எங்களால் எப்படி கட்டணம் செலுத்த முடியும்? மாவட்டத்தில் ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தை அரசே நடத்த வேண்டும். அப்போதுதான் ஆதரவில்லாத முதியோரைப் பராமரிக்க முடியும் என்றார்.
ஈரோட்டைச் சேர்ந்த எழுத்தாளர், சமூக ஆர்வலர் எஸ்.ஆர்.சுப்பிரமணியம் கூறியதாவது: முதியோர் இல்லங்களில் பராமரிக்கப்படும் ஆதரவற்ற முதியோருக்கு வழங்கப்படும் பராமரிப்பு உதவித் தொகையை ரூ. 750இல் இருந்து ரூ. 3,000ஆக உயர்த்த வேண்டும். மேலும், 40 பேருக்கு மட்டுமே உதவித் தொகை என்ற விதிமுறையைத் தளர்த்தி ஒவ்வோர் இல்லத்திலும் 100 பேருக்கு இந்த உதவித் தொகையை வழங்க வேண்டும்.
இப்போது உதவ பலர் தயாராக இருந்தாலும், உதவி உரியவர்களுக்குப் போய் சேருகிறதா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. இதனால், நன்கொடையாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்திட மாவட்ட ஆட்சியர்கள் குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு ஒருமுறை கூட்டத்தை நடத்தி, இந்த இல்லங்களுக்கு நேரடியாக பொருளாதார, பொருளுதவிகளைப் பெற்றுத் தர வேண்டும் என்றார்.
- கே.விஜயபாஸ்கர்

No comments:

Post a Comment

T.N. univerisities face financial crisis as UGC refuses to release funds: Appavu

T.N. univerisities face financial crisis as UGC refuses to release funds: Appavu The Hindu Bureau TIRUNELVELI 03.01.205 The universities in ...