Sunday, February 23, 2020

வாடிக்கையாளர்களின் மனதைக் கொள்ளையடித்த 'ஸ்விக்கி'யின் சாதனைப் பெண்!

By DIN | Published on : 23rd February 2020 03:04 PM



அனைத்துத் துறைகளிலும் சாதனை புரிந்து வரும் பெண்கள் தற்போது ஆண்களைப் போல உணவு டெலிவரி செய்யும் வேலையிலும் இறங்கி சாதனை படைத்து வருகின்றனர். அதில் குறிப்பிடத்தக்க ஒருவர் கேரளத்தைச் இருந்த சுதா ஜெகதீஷ்.

2019ம் ஆண்டின் இறுதியில் ஸ்விக்கியில் உணவு டெலிவரி செய்யும் பணியில் இணைந்தார் சுதா. கொச்சியைச் சேர்ந்த இவர், இந்தியாவில் ஸ்விக்கியில் அதிக ஆர்டர்களை டெலிவரி செய்த பெண் ஊழியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

2019ஆம் ஆண்டின் இறுதியில் பணியில் சேர்ந்த இவர் இதுவரை 6,838 ஆர்டர்களை வெற்றிகரமாக முடித்துள்ளார். முதலில் ஸ்விக்கியில் தனக்கு வேலை கிடைக்குமா? என்ற சந்தேகத்தில் சென்றுள்ளார். காரணம், அவருக்கு சற்று வயது அதிகம். இருப்பினும் மன தைரியத்துடன் அவர் திறமையாகப் பேசி நேர்காணலை நிறைவு செய்து வேலையை பெற்றார்.

பின்னர் வேலையில் அதிக ஈடுபாடு காட்டிய அவர் மிகவும் விரைவாக வேலையை செய்து முடித்தார். 'எனது மனதுக்கு பிடித்த வேலையை செய்கிறேன். பைக் ஓட்டுவது எனக்கு பிடிக்கும். அதனால் எனக்கு வேலை எளிதாக இருக்கிறது.

முதலில் இந்த வேலையை ஏற்றுக்கொள்ள எனது குடும்பத்தினர் சம்மதிப்பார்களா? என்ற சந்தேகம் இருந்தது. அம்மா மிகவும் தயங்கினார். ஆண்களால் செய்யக்கூடிய வேலை அது என்று கூறினார். இருப்பினும் ஒப்புக்கொண்டார். இன்று என்னைப்பார்த்து அவர்கள் பெருமைப்படுகிறார்கள்' என்று தெரிவித்தார்.

சுதா, தன் தாய் மற்றும் சகோதரருடன் வசித்து வருகிறார். பி.காம் பட்டதாரி. கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் டிப்ளோமா முடித்துள்ளார். பல நிறுவனங்களில் பணிபுரிந்த அவர் 2015ஆம் ஆண்டில் ஒரு விபத்தை சந்தித்ததன் விளைவாக கட்டாய ஓய்வு எடுக்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டார். பின்னர் வேலை கிடைக்காமல் இருந்து இறுதியாக ஸ்விக்கியில் இணைந்தார்.

'கடந்த பருவமழை சமயத்தில் கொட்டும் மழையில் நான் ஒரு ஆர்டரை வழங்க வேண்டியிருந்தது. வாடிக்கையாளரின் இருப்பிடத்தை அடைந்த நான், முற்றிலும் நனைந்து நடுங்கினேன். நான் வாசலில் நனைந்து கொண்டிருந்ததைப் பார்த்து வீட்டில் இருந்து வந்த பெண் ஒருவர் என்னிடம் ஒரு டவலை கொடுத்ததுடன், சூடாக டீ வேண்டுமா என்று கேட்டார். அன்றைய நாள் எனக்கு மிகவும் திருப்திகரமாக, மகிழ்ச்சியாக இருந்தது.

இவ்வாறு தனது ஒவ்வொரு பயணமும் ஒவ்வொரு தனித்துவமான அனுபவத்தை தருகிறது என்று கூறுகிறார் சுதா.

No comments:

Post a Comment

NEWS TODAY 23 AND 24.12.2024