Sunday, February 16, 2020

'நா' காக்க ஆக்கம் உறுதி!

By முனைவர் சொ.அருணன் | Published on : 15th February 2020 03:56 AM |

மனிதனின் உடல் உறுப்புகளில் மிகவும் இன்றியமையாததும் மிகக் கவனமாகக் கையாளப்பட வேண்டியதுமாகிய உறுப்பு நாக்கு. ஐம்புலன்களின் வரிசையில் இரண்டாவது இடத்தைப் பெற்றபோதும் காக்கவேண்டிய உறுப்புகளில் இதற்குத்தான் முதலிடம் தரவேண்டும். எலும்பே இல்லாத தசையாலான இந்தச் சிறு உறுப்புத்தான் ஒரு மனிதனின் முழுநிலையை இந்த உலகுக்குப் புலப்படுத்துகிறது.

அடிப்படையில் புறஉணர்வின் மூலமாகிய சுவைகளை இது தன் கட்டுப்பாட்டில்தான் வைத்திருக்கிறது. உண்ணுகிற உணவைச் சரியாக மெல்லுவதற்கும் அதனை உமிழ் நீரோடு முறையாகக் கரைப்பதற்கும் இது உதவி புரிகிறது. நம் கட்டுப்பாட்டில் இருக்கிற வரையில் இது நமக்குக் கட்டுப்படும். மாறாக, இதன் இச்சைக்கு நாம் அடிபணிந்து விட்டால் அதோகதிதான். உணவில் மட்டுமன்று, உணர்விலும் கூட அப்படித்தான்.
ஐம்புலன்களுள் ஒன்றாக இருந்தபோதும் ஏனைய நான்கு புலன்களின் இயக்க வெளிப்பாடாக இருப்பது இந்த நாக்குத்தான். முன்னையது புறம் என்றால் இது நாக்கின் அகம். கண்ணால் கண்டதை, காதால் கேட்டதை, உள்ளத்தால் உடலால் உணர்ந்தவற்றை, மூளையால் எண்ணுவதை என எல்லாவற்றையும் இந்த நாக்குத்தான் உலகுக்கு அறிவிக்கிறது.

மொழிகளின் பிறப்பில் நாக்குக்கு முக்கிய இடமுண்டு. ஒலிகள் உடலின் பல உறுப்புகளின்வழி எங்கு தோன்றினாலும் அது மொழியாவது நாக்கின் உதவி கொண்டே ஆகும். செந்தமிழே நாப்பழக்கம்தானே. குழந்தை தோன்றிய காலந்தொட்டே நாக்கின் பெருமை உணர்த்தப்படுகிறது. தாலாட்டு என்பதே நாவசைத்த இசைதானே.

நாக்குக்கு இன்னொரு அகமும் உண்டு. சுவையைப் போலவே சொல்லிலும் இதனைக் கட்டுப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் என்ன நேரும் என்பதைத்தான் திருவள்ளுவர், "யாகாவாராயினும்...' என்று எச்சரித்துள்ளார். உடல், உள்ளம் என்ற வரிசையில் ஏனைய புலன்களைக் கூடக் காத்துக் கொள்ளத் தெரியாதவர்கள் நாக்கு என்ற இந்த ஒற்றை உறுப்பையாவது ஒழுங்காகக் காத்துக் கொள்ள வேண்டும் என்பது அவர் குறிப்பிடும் நாக்கின் இன்னொரு அகத்தைத் தெளிவாகச் சுட்டுகிறது.

நாக்கினால் நன்மைகளும் உண்டு. பெரிதும் தீமைகளும் உண்டு. பொன்போன்ற இனித்த மொழியை உருவாக்கும் கவிவல்லமை பெற்றவர்களை நாவன்மை உடையவர் என்பது வழக்கு. ஒüவையார் குறிப்பிடுகிற நான்கு கோடிகளுள் பெருங்கோடியாகத் திகழ்வது இந்த நாக்கினைக் காப்பதால் பெறுகிற கோடியைத்தான். "கோடானுகோடி கொடுப்பினும் தன்னுடைநாக் கோடாமை கோடி பெறும்' என்கிறார்.
உழவர்கள் கலப்பையைக் கொண்டு விளைச்சலுக்காக நெற்களத்தை உழுகிறார்கள். இவர்கள் நெல்லேர் உழவர்கள். வீரர்கள் தங்கள் வில்லைக் கொண்டு வெற்றிக்காகப் போர்க்களத்தை உழுகிறார்கள்.

அவர்கள் வில்லேர் உழவர்கள். கற்றறிந்த புலவர்கள் தங்கள் நாவன்மையால் உலக மேன்மைக்காகச் சொல்லை உழுகிறார்கள். இவர்கள் சொல்லேருழவர்கள்.

வில்லைக் கருவியாக வைத்திருக்கிற வில்லேருழவர் பகை கொண்டாலும் பிழைத்து விடலாம். சொல்லைக் கருவியாகக் கொண்டிருக்கிற சொல்லேருழவரைப் பகைத்துக் கொள்ளாதே என்று திருவள்ளுவர் தந்திருக்கிற சிறப்பு நாவன்மைக்கே உரியது. போர்க்களத்தில் பல்லாயிரக்கணக்கான விற்களுக்கும் வாட்களுக்கும் அஞ்சாத பெருவீரம் படைத்த வேந்தர்கள்கூடப் புலவர்களின் ஒற்றைச் சொல்லுக்கு அஞ்சியிருக்கின்றனர் என்றால், அது நாவின் சிறப்புத்தானே. இதையே "வாயுள்ள பிள்ளை பிழைக்கும்' என்று கிராமத்தில் பழமொழியாக்கிக் கூறுகிறார்கள். இதில் வாய் என்பது நாக்கையே முன்னிறுத்துகிறது.

நாக்கின் புறம் மிகவும் தீமையானது. இனிய மொழிகளைத் தன்மூலம் நாக்கு வெளிப்படுத்தும்போது கனியைப் போன்ற தன்மையைப் பெறுகிறது. ஆனால், கொடிய மொழிகளை வெளிப்படுத்தும்போது அதுவே காயாகித் துவர்க்கிறது. "நரம்பில்லா நாக்கு இப்படியும் பேசும் அப்படியும் பேசும்' என்று போகிற போக்கில் சொல்லி வைத்த கிராமத்துப் பழமொழி திருக்குறளின் சாறு.
இந்த நாக்குக்கு இன்னும் கொடுந்தன்மை உண்டு. அது தீயினை விடவும் வெம்மை உடையது. இதையும் திருவள்ளுவர் உணர்த்தி எச்சரிக்கிறார். "தீயினால் சுட்டபுண் கூட ஆறிப் போய்விடும். ஆனால் நாவினால் ஒருவரைச் சொல்லால் சுடுகின்ற புண் எக்காலத்தும் ஆறாது' என்பதே அது. இந்த நாக்குக்குத்தான் எத்தனை பரிமாணம்?
"நா'விலிருந்துதான் "நான்' என்னும் செருக்கே தோன்றுகிறது என்றறிந்த ஞானிகள் நாவடக்கமாகத் தன்னை எப்போதும் நான் என்று சொல்ல அஞ்சி யான் என்றோ, இவன் என்றோதான் குறிப்பிட்டுக் கொள்வார்கள். மேடைப் பேச்சுக்கும் நாகாத்தல் மிக முக்கியம். உடலும் உள்ளமும் ஒன்றாக இணைந்து இந்த நாக்கின் மூலமாகத்தான் பேச்சு நிகழ்கிறது. அதனால்தான் நாகாக்க முடியாமல் பலரும் தடுமாறிப் போகிறார்கள்.


நிறைவாகத் திருவள்ளுவர் இப்படிச் சொல்லுகிறார்.
நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்.

"நாக்கு அடங்கிப் போய் இறுதியான விக்கல் வரும் மரணத் தறுவாய் நெருங்குவதற்கு முன்னால் நல்லறச் செயல்களை விரைந்து செய்து விடுங்கள்' என்கிறார். நாவை அசைத்து எழும் தாலாட்டில் தொடங்குகிற வாழ்க்கை அதே நாக்கில் அடங்கிப் போவதை எத்தனை நுட்பமாகக் காட்டியுள்ளார் திருவள்ளுவர்.

போக்கினால் கெட்ட மனிதரைக் காட்டிலும் நாக்கினால் கெட்ட மனிதர்களே இந்தப் புவியில் அதிகம். ஆக்கம் வேண்டுமெனில் திருவள்ளுவர் அறிவுறுத்திய மந்திரம் போன்ற சொல்லாகிய "நாகாக்க' என்பதைப் போற்றிக் கொள்வோம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 31.12.2024