Friday, July 3, 2020

'இ - பாஸ்' கேட்டு இதுவரை 37 லட்சம் பேர் விண்ணப்பம்

'இ - பாஸ்' கேட்டு இதுவரை 37 லட்சம் பேர் விண்ணப்பம்

Added : ஜூலை 02, 2020 22:49

ஊரடங்கின் போது, 'இ - பாஸ்' கேட்டு, இதுவரை, 37 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்; அதில், 13 லட்சம் விண்ணப்பங்களுக்கு மட்டுமே, தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த, மார்ச், 25 முதல், தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில், கல்யாணம், இறப்பு, தொழில் சம்பந்தமாக, வெளியூர், வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளுக்கு செல்ல, தமிழக அரசு சார்பில், 'ஆன்லைன்' வாயிலாக, இ - பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல, வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து, தமிழகத்திற்கு வரவும், இ - பாஸ் பெறுவது அவசியம்.

இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது முதல், வெளியூர் பயணங்கள் செல்ல, தமிழகத்திற்கு வர என, பல லட்சம் விண்ணப்பங்கள் பதிவாகி உள்ளன.இது குறித்து, அரசு அதிகாரிகள் கூறியதாவது:கொரோனா ஊரடங்கு காலத்தில், பல்வேறு காரணங்களுக்காக வெளியூர் செல்லவும், தமிழகத்திற்குள் வருவதற்கும், இதுவரை, 37.35 லட்சம் பேர் விண்ணப்பங்கள் பதிவு செய்துள்ளனர். அதில், மாவட்டங்களுக்குள் செல்ல, 52 ஆயிரத்து, 282 விண்ணப்பங்கள்; மாவட்டங்களுக்கு வெளியே செல்ல, 29.05 லட்சம்; தமிழகத்திற்கு வெளியே செல்ல, 3.01 லட்சம்; தமிழகத்திற்கு உள்ளே வர, 2.66 லட்சம் விண்ணப்பங்கள் பதிவாகி உள்ளன.

இவற்றில், இதுவரை, 13 லட்சம் விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதில், வெளி மாநிலங்களில் இருந்து வருவதற்கான விண்ணப்பங்களில், 57 ஆயிரம் பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு வெளியே இருந்து பதிவான விண்ணப்பங்களில் பெரும்பாலானவை, போலி ஆவணங்கள் வாயிலாக, விண்ணப்பிக்கப்பட்டுள்ளன.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

-- நமது நிருபர்- -

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024