Sunday, July 5, 2020

சென்னையில் ஜூலை 6 முதல் புதிய கட்டுப்பாடுகள் - தளர்வுகள் அறிவிப்பு


சென்னையில் ஜூலை 6 முதல் புதிய கட்டுப்பாடுகள் - தளர்வுகள் அறிவிப்பு

05.07.2020

சென்னை: சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை இரவுடன் முழுப் பொது முடக்கம் நிறைவடைய உள்ள நிலையில், ஜூலை 6 முதல் புதிய கட்டுப்பாடுகள் - தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை நள்ளிரவுடன் முழு ஊரடங்கு முடிவடையும் நிலையில், திங்கள்கிழமை காலை முதல் கடைகள் திறப்பு குறித்து தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

சென்னையில் திங்கள்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை காய்கறி, மளிகைக் கடைகள் திறந்திருக்கலாம்.

சென்னையில் திங்கள்கிழமை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை தேநீர் கடைகள் திறந்திருக்கலாம். ஆனால், தேநீர் கடைகளில் பார்சல் மட்டுமே விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வணிக வளாகங்கள் தவிர்த்து ஷோ ரூம்கள், பெரிய கடைகள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை, ஏற்கனவே அறிவித்த வழிமுறைகளுடன் செயல்படலாம்.

சென்னை காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் இயங்கும் உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல்கள் மட்டுமே வழங்கலாம்.

மற்ற செயல்பாடுகள் ஜூன் 19-ம் தேதிக்கு முன் இருந்த கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன் இங்கலாம்.

இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், தமிழக அரசு, கரோனா நோய்த் தொற்றிலிருந்து பொது மக்களை பாதுகாத்து, அவர்களுக்கு தேவையான வாரணங்களை வழங்கி முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் ஊரடங்கு உத்தரவை 25.3.2020 முதல் மத்திய அரசு அமல்படுத்தியதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தியது.

இதைத் தொடர்ந்து, கரோனா தொற்றின் நிலைமையை கருத்தில் கொண்டும், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், சில தளர்வுகளுடன் 31.7.2020 வரை ஊரடங்கு நீட்டிக்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டது. இருந்தபோதிலும் பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், முழு ஊரடங்கு 5.7.2020 வரை அமலில் இருக்க உத்தரவிட்டிருந்தேன். தற்போது, அதாவது 6.7.2020 முதல் மறு உத்தரவு வரும் வரை பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் கீழ்க்கண்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கும் உணவகங்களில் காலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும்.

தொலைபேசி மூலம் ஆர்டர் செய்து வீடுகளுக்கு உணவு வழங்கும் சேவைகளுக்கு இரவு 9.00 மணி வரை மட்டும் அனுமதி வழங்கப்படும். அப்பொருட்களை வழங்கும் ஊழியர்கள் தாங்கள் பணிபுரியும் நிறுவனங்களிடமிருந்து அடையாள அட்டை பெற்று பணியாற்ற வேண்டும்.

தேநீர் கடைகள் (பார்சல் மட்டும்) காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும்.

காய்கறி கடைகள் மற்றும் மளிகைக்கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும்.

வணிக வளாகங்கள் (மால்ஸ்) தவிர்த்து, அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் (நகை, ஜவுளி போன்றவை), ஏற்கனவே அறிவித்து இருந்த வழிமுறைகளுடன் காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை செயல்படலாம்.

மற்ற செயல்பாடுகளைப் பொருத்தவரை, 19.6.2020க்கு முன்னர் பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் அனுமதித்துள்ள கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் இயங்க உத்தரவிட்டுள்ளேன். பொதுமக்கள் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

Dailyhunt

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Dinamani

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024