ஜூலை 6 முதல் மாவட்டத்துக்குள் பணிக்குச் செல்ல இ-பாஸ் அவசியமில்லை
சென்னை: தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்டிருக்கும் பொது முடக்கம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைய உள்ளதால், ஜூலை 6-ம் தேதி முதல் மாவட்டத்துக்குள் பணிக்குச் செல்ல இ-பாஸ் அவசியமில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும், மாவட்டங்களுக்கு இடையே பயணிக்கும் பணியாளர்கள், ஏற்கனவே பெற்ற இ-பாஸை பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில், பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும், பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட திருவள்ளூர் மாவட்டத்தில், திருவள்ளூர் நகராட்சி, கும்மிடிபூண்டி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பேரூராட்சிகளிலும் மற்றும் பூவிருந்தவல்லி, ஈக்காடு மற்றும் சோழவரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு மற்றும் மறைமலைநகர் நகராட்சிகளிலும், நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சிகளிலும் மற்றும் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பகுதிகளிலும் 19.6.2020-லிருந்து முழு ஊரடங்கு உத்தரவினை அரசு அறிவித்தது. இந்த முழு ஊரடங்கு உத்தரவு 5.7.2020 வரை அமலில் உள்ளது.
மேற்காணும் பகுதிகளில் 6.7.2020 முதல் தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள், அனைத்து தனியார் நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படவும் மற்றும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் (நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர) தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள், அனைத்து தனியார் நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்படவும் அனுமதித்து 30.6.2020 நாளிட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் அரசாணை (நிலை) எண்.324 வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், பணியாளர்கள் மாவட்டங்கள் இடையே பணிக்குச் சென்று வர இ-பாஸ் அவசியம். மாவட்டத்திற்குள் பணிக்குச் சென்றுவர இ-பாஸ் அவசியமில்லை. இந்நிலையில், 19.6.2020-க்கு முன்னர் மாவட்ட ஆட்சியர்களால் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள மாவட்டங்கள் இடையே சென்று வருவதற்கான இ-பாஸ் மற்றும் இதர-பாஸ்களை தொழில் நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். எனவே, 6.7.2020-க்கு பின்னர் மாவட்டங்கள் இடையேயான போக்குவரத்திற்கு புதிதாக இ-பாஸ் மற்றும் இதர-பாஸ்கள் பெற அவசியமில்லை. இதுவரை இ-பாஸ் / இதரபாஸ்கள் பெறாதவர்கள் உரிய நடைமுறைகளின் படி விண்ணப்பம் செய்து அதனைப் பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Dinamani
No comments:
Post a Comment