ஆடிமாதம் தொடங்கியும் ஊரடங்கு காரணமாக குலதெய்வ கோயில்களில் வழிபட முடியாமல் தவிக்கும் பக்தர்கள்; கோயிலுக்கு வெளியே நின்று கற்பூரம் ஏற்றினர்
2020-07-18@ 14:38:42
திருவண்ணாமலை: ஆடி மாதம் தொடங்கியும் ஊரடங்கு உத்தரவு காரணமாக, குலதெய்வ கோயில்களுக்கு சென்று பக்தர்கள் வழிபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கோயிலுக்கு வெளியே நின்று கற்பூரம் ஏற்றிவிட்டு சென்றனர்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கோயில்களில் பக்தர்கள் அதிகளவில் கூடுவார்கள் என்பதால், சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆடி மாதங்களில் இந்துக்கள் தங்களது குலதெய்வ கோயிலுக்கு சென்று, பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். ஆனால், தற்போது ஊரடங்கு காரணமாக ஆடி மாதத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற பச்சையம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஆடிவெள்ளி திருவிழா, கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் யாரும் கோயிருக்கு வரவேண்டாம் என கோயிலுக்கு வெளியே அறிவிப்பு பலகை வைத்து சாலைகளும் அடைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி நேற்று, சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்து, கோயிலுக்கு வெளியே சாலைகள் அடைக்கப்பட்டுள்ள பகுதியில் கற்பூரம் ஏற்றி வழிபட்டு விட்டு திரும்பி சென்றனர். ஆடிமாதத்தில் வழக்கமாக குலதெய்வ கோயில்களில் வழிபட்டு வந்த நிலையில், கொரோனா காரணமாக கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதே என பக்தர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment