'தினமலர்' நாளிதழில், கடந்த, 10ம் தேதி, ஆதார்...எங்கே...எப்படி? என்ற தலைப்பில், ஆதார் முகாம்கள் நடக்கும் முகவரிகள், ஆதார் விண்ணப்பத்தை நிரப்புவது குறித்த விளக்கம் ஆகியவை இடம் பெற்றிருந்தன. இதுதொடர்பாக, ஏராளமான கடிதங்கள், மின்னஞ்சல்கள், 'தினமலர்' நாளிதழ் அலுவலகத்தில் குவிந்தன. அவற்றில் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.
அவற்றின் சாராம்சமாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, ஆதார் திட்ட இணை இயக்குனர் கிருஷ்ணா ராவ், அளித்துள்ள பதில்கள்:
தற்போது நடக்கும் ஆதார் முகாம் யாருக்காக?
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில், ஆதார் எண் உருவாக்கப்படுகிறது. ஆனால், அந்த கணக்கெடுப்பில் விடுபட்டோருக்கு, ஆதார் எண் உருவாக்கப்படுமா என்ற சந்தேகம் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றது. மக்கள் தொகை கணக்கெடுப்பில், விடுபட்டோருக்கு ஆதார் எண்ணை உருவாக்கவே, தற்போதைய முகாம் நடக்கிறது. எனவே, மக்கள் தொகை கணக்கெடுப்பில் விடுபட்டோர், 14 பாகங்களை கொண்ட, ஆதார் விண்ணப்பத்தை நிரப்பி, அவர்கள் குடியிருக்கும் பகுதிக்கு உட்பட்ட, ஆதார் மையங்களில் அளிக்கலாம்.
வெளியூர், வெளிமாநிலங்களை சேர்ந்தோர் என்ன செய்வது?
சென்னை போன்ற பெருநகரங்களில், வெளியூரை சேர்ந்தோர் அதிகம் உள்ளனர். அவர்களின் சொந்த ஊரில் நடந்த, மக்கள் தொகை கணக்கெடுப்பில், அவர்கள் சேர்க்கப்பட்டு இருக்கலாம். அதனால், அவர்களின் சொந்த ஊருக்கு சென்றுதான், ஆதார் எண்ணுக்கு, விண்ணப்பிக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான ரசீது இருந்தால், அதை கொண்டு, தற்போது அவர்கள் இருக்கும் பகுதியில் உள்ள, ஆதார் மையத்தில் விண்ணப்பிக்கலாம். அந்த ரசீது மூலம், அவர்களின் சொந்த ஊரில் எடுக்கப்பட்ட, மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களை பெற்று, ஆதார் எண் உருவாக்கப்படும்.
ஆதார் எண் அட்டை, அவரின் சொந்த முகவரிக்கு அனுப்பப்படும். இல்லையேல், அவருடைய தற்போதைய முகவரியை, நிரந்தர முகவரியாக மாற்றி கொண்டால், புதிய முகவரிக்கு, ஆதார் எண் அட்டை அனுப்பப்படும்.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன், ஆதார் முகாமில், புகைப்படங்கள் எடுக்கப்பட்ட பின்னும், அட்டை கிடைக்கவில்லை; இணையதளத்தில் தேடினாலும் விவரம்
கிடைக்கவில்லை என்றால், என்ன செய்வது?
புகைப்படம், ரேகைகள் எடுத்து பல மாதங்கள் ஆனோர், இணையதளத்தில், ஆதார் எண் பதிவு குறித்து தேடும்போது, 'அண்டர் பிராசசிங்' என, வந்தால் அவர்களுக்கு, ஆதார் எண் உருவாக்கப்பட்டு, அட்டை விரைவில் வந்து சேரும். ஆனால், 'எரர்' என வந்தால், அவர்களின் ரேகை மற்றும் புகைப்படங்கள் சரியாக பதிவாகவில்லை என, அர்த்தம். அவர்கள், மீண்டும் புகைப்படம் மற்றும் ரேகையை பதிவு செய்ய விண்ணப்பிக்க வேண்டும்.
மற்றவர்களுக்கு, உரிய காலத்தில், குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு, புகைப்படங்கள் எடுக்கப்படும்; தொடர்ந்து அட்டையும் வழங்கப்படும்.
ஆதார் விண்ணப்பங்களை, அந்தந்த முகாம்களில் கொடுக்கும் போது, ரசீது வழங்குவதில்லை. ரசீது கொடுப்பீர்களா?
ஆதார் விண்ணப்பம் செய்தோருக்கு, விண்ணப்பங்களை பெற்று கொண்டதற்கான, ரசீது வழங்கப்படுகிறது. அவற்றை, ஒவ்வொரு மையத்திலும் அளிக்கிறோம்.ஏற்கனவே விண்ணப்பத்திருந்தால், அதற்கு, ஒப்புகை சீட்டு வழங்கப்பட்டிருக்காது. அதனால், விண்ணப்பம் என்ன ஆகுமோ என, அஞ்சத் தேவையில்லை.
ஒவ்வொரு ஆதார் மையத்திலும், ஆள் பற்றாக்குறை நிலவுகிறது. தகவல் சொல்ல ஆட்கள் நியமிக்கப்படுவரா?
ஒவ்வொரு மையத்திலும், இரண்டு 'டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள்' நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள், விண்ணப்பதாரரின் விவரங்களை பதிவேற்றம் செய்வதோடு, அவர்களை புகைப்படம் எடுத்தல், ரேகையை பதிவு செய்தல் ஆகிய பணிகளை செய்வர். அவர்கள் தவிர, மையம் எந்த பகுதியில் உள்ளது என்பதை பொறுத்து, வருவாய் துறை அல்லது சென்னை மாநகராட்சி நிர்வாகங்கள், தகவல் சொல்ல ஒரு நபரை நியமித்துள்ளன. அவர்கள், விண்ணப்பதாரரின் சந்தேகங்கள் மற்றும் பிற தகவல்களை சொல்வதோடு, அவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப, அவர்களின் விவரங்களை, இணையத்தில் தேடி அளிக்கும் பணியையும் செய்கின்றனர்.
ஆதார் பற்றிய பிற சந்தேகங்கள் ஏற்பட்டால், சென்னை மாநகராட்சி எனில், மண்டல அலுவலகங்களையும், சென்னை நீங்கலாக பிற பகுதிகளை சேர்ந்தோர், அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களையும் அணுகலாம்.
தண்டையார்பேட்டை, ராயபுரம் பழைய வார்டுக்கு பதில் புதிய வார்டு
சென்னையில் ஆதார் பதிவுகள், பழைய வார்டு அடிப்படையிலேயே நடக்கின்றன. ராயபுரம் மற்றும் தண்டையார்பேட்டை மண்டலத்தில் பழைய வார்டுகளுக்கு பதிலாக, தற்போது தரப்பட்டுள்ள புதிய வார்டு எண்கள் கீழே தரப்பட்டுள்ளன. தண்டையார்பேட்டை மண்டலத்தின் பழைய வார்டு 1 முதல் 2 வரையில் உள்ளவர்களுக்கு, எருக்கஞ்சேரி, கிருஷ்ணமூர்த்தி சாலை, மாநகராட்சி அலுவலகத்திலும், பழைய வார்டு 3 முதல் 13 வரையில் உள்ளவர்களுக்கு தண்டையார்பேட்டை, டி.எச்.,சாலையிலும் ஆதார் பதிவு நடக்கின்றன.
தண்டையார்பேட்டை
பழைய புதிய
வார்டு வார்டு
1 34
2 35,36
3 38
4,6 39
5,7 40
8 42
9 44,48
10 41,43
11 47
12 44,48
13 53
ராயபுரம் மண்டலத்தின் பழைய வார்டுகள் 14 முதல் 31 வரையில் உள்ள வார்டுகளில் 14 முதல் 17 வரையில், கிழக்கு கல்மண்டபத்திலும், 18 முதல் 21 வரையில் பழைய வண்ணாரப்பேட்டை பேரம்பாலு தெருவிலும், 22 முதல் 31 வரையில் ஏழுகிணறு, சண்முகம் தெருவிலும் ஆதார் பதிவுகள் நடக்கின்றன.
ராயபுரம்
பழைய புதிய
வார்டு வார்டு
14 43
15,16 49
17,18 50
19 52
20,21 51
22 50,52
23 54
24 55
25,26 56
27 60
28 55,60
29 55
30 57
31 53
ஆதார் அதிகாரிகள் கவனத்திற்கு...
* புகைப்படம் எடுப்பதற்கான நேரம் குறித்து, அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.
* பெரும்பாலோர், காலை 10:00 மணிக்கு மேல், வேலைக்கு செல்வதால், காலை 6:00 மணியில் இருந்து, 10:00 மணி வரை புகைப்படம் எடுக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்
* மக்களின் சந்தேகங்களை தீர்ப்பதற்கு, உரிய நபர்களை நியமிக்க வேண்டும்
* ஆதார் அட்டை விண்ணப்பங்களை, அந்தந்த வார்டு அலுவலகங்களிலும் வழங்க வேண்டும். அதனால், பகுதிவாசிகள், மண்டல அலுவலகங்களுக்கு அலைய வேண்டிய சூழல் ஏற்படாது.
* இருக்கை, குடிநீர், கழிப்பறை வசதிகள் செய்து தரவேண்டும்
* பெருங்குடி மண்டலத்தில் மூன்று இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், மக்கள் தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப, மடிப்பாக்கம் பகுதிக்கு, தனி மையம் அமைக்க வேண்டும்.
'தினமலரில்' ஆதார் அட்டை பதிவு பிரச்னைகள் தெளிவாகத்தான் எழுதப்பட்டிருந்தது. அதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதில்தான் இன்னும் தடுமாற்றம் இருக்கிறது. எங்கள் பகுதியில் எளிதாக பதிவு செய்ய முடிகிறது.
ரவிசந்திரன், 52, லட்சுமிபுரம், மாதவரம்
ஆவடி நகராட்சியில் உள்ள 48 வார்டுகள், பகுதி 65 சதுர கி.மீ., பரப்பளவில் உள்ளன. அனைத்து வார்டுகளுக்கும் நகராட்சி அலுவலத்தின் முதல் தளத்தில் வைத்து ஆதார் பதிவு செய்யப்படுகிறது. இது, பகுதிவாசிகளுக்கு மிகவும் சிரமமாக உள்ளது. குறிப்பாக, முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு. இது பற்றி 'தினமலரில்' தொடர்ந்து செய்தி வெளியாகிறது. ஆனால், மாவட்ட நிர்வாகம், நகராட்சி நிர்வாகம், ஆதார் பதிவு நிர்வாகத்தினிடையே சரியான ஒருங்கிணைப்பு இல்லை.
சடகோபன், 49. பட்டாபிராம்
'தினமலர்' செய்தி, ஆதார் அட்டைக்காக அலைக்கழிக்கப்படும் பலருக்கு ஆதரவாக ஆறுதலாக இருந்தது. ஏற்கனவே ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் பதிவு
செய்திருந்தால், அதில் இருவருக்கு மட்டுமே ஆதார் அட்டை கிடைத்துள்ளது. இது ஏன் என்று, அங்கு விசாரித்தால், யாரும் சரியான தகவல் தருவதில்லை; தொடர்புக்கான அலைபேசி எண்களும் இல்லை.
கோபால கிருஷ்ணன், தண்டுரை, ஆவடி
விண்ணப்ப படிவத்தை பார்த்தாலே இடியாப்ப சிக்கல் போல் இருந்தது. முழுவிவரம் தெரியாததால் படிவத்தை வீட்டிலேயே வைத்திருந்தேன். 'தினமலர்' நாளிதழில் வெளியான வழிகாட்டுதலை பார்த்து, படிவம் நிரப்பி கொடுத்தேன்
சுப்பிரமணி, ஐ.டி., ஊழியர், நங்கநல்லுார்
தவறாக நிரப்பினால் பிரச்சினை வரும் என நினைத்து, ஆலந்துார், தாலுகா அலுவலகத்தில் மனு எழுதி கொடுப்போரிடம், 25 ரூபாய் கொடுத்து நிரப்பினேன்.
'தினமலர்' நாளிதழை பார்த்தபின் தான் தெரிந்தது, நாமே நிரப்பி இருக்கலாமே என்று. பாமர மக்களுக்கும் புரியும்படி
வழிகாட்டுதல் கொடுத்த 'தினமலர்'
நாளிதழுக்கு நன்றி
மகாலட்சுமி, ஆதம்பாக்கம்
-நமது சிறப்பு நிருபர்-