Saturday, March 14, 2015

தமிழகத்தில், பிரபல நடிகர்கள், தொழிலதிபர்கள் உட்பட, 10 ஆயிரம் பேர், 'மானிய விலை, சமையல் காஸ் சிலிண்டர் வேண்டாம்' என, எண்ணெய் நிறுவனங்களிடம் ஒப்புதல் படிவம் கொடுத்துள்ளனர்.

தமிழகத்தில், பிரபல நடிகர்கள், தொழிலதிபர்கள் உட்பட, 10 ஆயிரம் பேர், 'மானிய விலை, சமையல் காஸ் சிலிண்டர் வேண்டாம்' என, எண்ணெய் நிறுவனங்களிடம் ஒப்புதல் படிவம் கொடுத்துள்ளனர். இதன் மூலம், மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக அவர்கள் உருவாகி உள்ளனர்.

தமிழகத்தில், பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்களுக்கு, 1.53 கோடி, வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர் உள்ளனர்.மத்திய அரசு, உணவு, உரம், பெட்ரோலிய பொருட்களை, மானிய விலையில், மக்களுக்கு வழங்கி வருகிறது. இதனால், அரசுக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.குறிப்பாக, மானிய விலையில் வினியோகம் செய்யப்படும், சமையல் காஸ் சிலிண்டரில், ஏராளமான முறைகேடு நடப்பதாக கூறப்படுகிறது.இதையடுத்து, மத்திய அரசு, மாற்றி அமைக்கப்பட்ட சமையல் காஸ் சிலிண்டர் நேரடி மானிய திட்டத்தை, கடந்த ஜனவரியில், தமிழகம் உட்பட, நாடு முழுவதும் அமல்படுத்தியது.

இத்திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர், சந்தை விலையில், சிலிண்டர் வாங்க வேண்டும். பின், அதற்கான மானிய தொகை, அவரின் வங்கி கணக்கில், நேரடியாக வரவு வைக்கப்படும்.தமிழகம் உட்பட, பல மாநிலங்களில், ஏழை முதல், எம்.எல்.ஏ., - எம்.பி., அமைச்சர், கோடீஸ்வரர் வரை ஏராளமானோர் மானிய விலை, சிலிண்டர் பெற்று வருகின்றனர்.இதை கட்டுப்படுத்த, 'மானியத்தை விட்டுக் கொடுங்கள், நாட்டின் முன்னேற்றத்தில் பங்கு எடுங்கள்' என, மத்திய அரசின் சார்பில், எண்ணெய் நிறுவனங்கள், வாடிக்கையாளரின் மொபைல் போன்களுக்கு, எஸ்.எம்.எஸ்., தகவல் அனுப்பி வருகின்றன.மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உட்பட, வசதி படைத்த பலர், சந்தை விலையில், காஸ் சிலிண்டர் வாங்க விருப்பம் தெரிவித்து, மானிய சிலிண்டர் வேண்டாம் என, எண்ணெய் நிறுவனங்களிடம் ஒப்புதல் படிவம் கொடுத்துள்ளனர். அதன்படி, தமிழகத்தில், 10,412 வாடிக்கையாளர்கள், 'மானிய சிலிண்டர் வேண்டாம்' என, எண்ணெய் நிறுவனங்களிடம் தெரிவித்துள்ளனர்.
பட்டியல்:நடிகர்கள் கமல்ஹாசன், பிரசாந்த்;திரைப்பட இயக்குனர்கள் மணிரத்னம், சங்கர்; திரைப்பட பின்னணி பாடகர் ஜேசுதாஸ் மற்றும் தொழிலதிபர்கள் பலர் இப்பட்டியலில் உள்ளதாக தெரிய வந்துள்ளது.ஆனால், தமிழக அமைச்சர்கள், முன்னாள் முதல்வர் கருணாநிதி, அவரது மகன் ஸ்டாலின், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட பலர், இன்னமும் மானிய சிலிண்டர் தான் வாங்கி வருவதாக எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இதுகுறித்து, எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:மானியம் அல்லாத சிலிண்டர் விலை, 600 ரூபாய் முதல், 800 ரூபாய் வரை உள்ளது. நேரடி மானிய திட்டத்தின் கீழ், இந்த விலையில் தான், காஸ் சிலிண்டர் வாங்க வேண்டும்.பின், மானிய தொகை, அவரின், வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். மானியம் அல்லாத சிலிண்டர் திட்டத்தில், யாரையும் கட்டாயப்படுத்தி சேர்க்கவில்லை. விருப்பப்பட்டு இணைந்தால், மானியம் அல்லாத சிலிண்டர் வழங்கப்படும். தற்போது, இந்தியாவில், 1.02 லட்சம் பேர் 'மானிய சிலிண்டர் வேண்டாம்' என, கூறி உள்ளனர். தமிழகத்தில், 10,412 பேர் இவ்வாறு கூறி உள்ளனர்.மானிய அல்லாத சிலிண்டர் திட்டத்தில், பலர் இணைவதன் மூலம், அந்த நிதியில், பல்வேறு வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்ள முடியும். இவ்வாறு, அவர்கூறினார்.

ஏஜென்சி உரிமம் ரத்து: சென்னை, ஆதம்பாக்கத்தில், ஐ.ஓ.சி., நிறுவனத்தின், 'ரோஸ்' காஸ் ஏஜென்சி உள்ளது. இதில், 25 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு, காஸ் சிலிண்டர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த ஏஜென்சி மீது, குறித்த நேரத்தில், காஸ் வினியோகம் செய்யாதது உள்ளிட்ட, பல்வேறு புகார்கள் எழுந்தன. இதையடுத்து, இதன் உரிமத்தை, ஐ.ஓ.சி., அதிகாரிகள், நேற்று, ரத்து செய்தனர்.

விண்ணப்பம் போதும்!மானியம் அல்லாத சிலிண்டர் பெற விரும்பும் வாடிக்கையாளர், காஸ் ஏஜென்சிக்கு சென்று, 'மானிய சிலிண்டர் வேண்டாம்' என்பதற்காக உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.பின், அவர்களுக்கு சந்தை விலையில், சிலிண்டர் வழங்கப்படும். அதற்கான மானியம், வங்கியில் செலுத்தப்படாது.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024