பெரியகுளம்: பெரியகுளத்தில் மாவடு சீசன் துவங்குவதற்கு சில தினங்கள் உள்ள நிலையில் 'அட்வான்ஸ் புக்கிங்' நடந்து வருகிறது. தமிழகத்தில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு அடுத்தபடியாக மாங்காய் விளைச்சலில் நான்காம் இடம் பிடித்துள்ளது பெரியகுளம். அம்மா ஊட்டும் சோறுக்கு வாய் திறக்காத சிறுவர்கள் மாவடு சேர்த்து ஊட்டினால் வாய் திறப்பர் என்ற சொல் உண்டு.
மாங்காய் சீசன் துவங்குவதற்கு முன்னால் மாவடு சீசன் துவங்கும். மலைப்பகுதிகளில் உயரமான மாமரங்களில் மாவடு விளைகிறது. மாவடுவுடன் விளக்கெண்ணெய், மஞ்சள்பொடி, மிளகாய்பொடி கலவையை கலந்து பக்குவப்படுத்தி வைத்தால் ஒரு ஆண்டு முழுவதும் வைத்து ருசித்து சாப்பிடலாம். தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். மார்ச் கடைசி வாரத்திலிருந்து, ஏப்ரல் வரை மாவடுகாய் கிடைக்கும். பெரியகுளத்திலிருந்து மதுரை, சென்னை மற்றும் வடமாநிலங்கள் அனுப்பிவைக்கப்படுகிறது. மேலும் சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் அரபு நாடுகளான ஈரான், சவுதி நாடுகளுக்கு மாவடு பனக்கொட்டான்களில் பக்குவமாக அனுப்பப்படுகிறது.
கடந்தாண்டு ஒரு மரக்காய் (4படி) ரூ.300 முதல் 400 வரை விற்கப்பட்டது. தற்போது சீசன் துவங்க உள்ளதால் மாவடு வாங்க முன்பதிவு துவங்கியுள்ளது. தங்கள் உறவினர்களுக்கு வாங்கி அனுப்ப வியாபாரிகளிடம் ஆயிரம் ரூபாய் முதல் பத்தாயிரம் ரூபாய் வரை பலர் முன்தொகை கொடுத்து வைத்துள்ளனர். இந்த ஆண்டு ஒரு மரக்காய் ரூ.400 முதல் 500 வரை விலை போகும் என மாவடு வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
No comments:
Post a Comment