சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருக்கும் அந்த சிற்றுண்டிச் சாலைக்குள் நுழைகிறவர்களை இன்முகத்துடன் வரவேற்கிறார் தாயம்மாள். 73 வயதாகும் தாயம்மாள், ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். ஓய்வூதியம் மூலம் வரும் வருமானத்தில் ஓய்வெடுக்க விரும்பாத இவர், மகளிர் சுய உதவி குழு மூலம் சிற்றுண்டி உணவகம் நடத்தி வருகிறார். ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வரும் கிராம மக்கள், அவ்வப்போது வரும் அலுவலக ஊழியர்களுக்கு மலிவு விலையில் அன்னம் வழங்குவதாலேயே இவரது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகம்.
வழிகாட்டிய கல்வி
எப்போதும் இன்முகத்துடன் இருக்கும் இவர் கடந்து வந்த இன்னல்கள் ஏராளம். பசியின் கொடுமையை அறிந்ததால்தான் இப்படியொரு உணவகத்தை நடத்தி வருகிறார். திருநெல்வேலி அருகே இருக்கும் வாசுதேவநல்லூரைச் சேர்ந்த இவருக்கு 18 வயதில் திருமணம் நடந்தது. அந்த மண வாழ்க்கை எட்டு ஆண்டுகள் மட்டுமே
நீடித்தது. 1968-ல் எதிர்பாராத விதமாக அவருடைய கணவர் ராமசாமி இறந்துவிட, நான்கு பிள்ளைகளைக் கரை சேர்ப்பதொன்றே தாயம்மாளின் வைராக்கியமாக இருந்தது. காந்தி கிராம் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்பாடம் படித்து தங்கப் பதக்கம் பெற்றார். ஆசிரியப் பயிற்சி முடித்துவிட்டு, சிவகங்கையில் உள்ள செயின்ட் ஜோசப் மெட்ரிக்குலேசன் பள்ளியில் ஆசிரியையாகப் பணியில் சேர்ந்தார். ஆசிரியப் பணியில் தனி முத்திரை பதித்த தாயம்மாள், ஓய்வுக்குப் பிறகும் தனக்கு தனித்த அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்.
ஓய்வுக்குப் பிறகும் வேலை
சத்தும் சுவையும் நிறைந்த உணவுப் பொருட்கள், இவரது சிற்றுண்டிச் சாலையின் அடையாள.
“என்ன வேணும்னு கேட்டு எடுத்துவைம்மா” என உட்கார்ந்த இடத்திலிருந்து உபசரிக்கிறார் தாயம்மாள். கையில் காசில்லை என்றாலும் கடன் சொல்லியாவது சாப்பிட்டுவிடலாம் என்ற நம்பிக்கையில் காலடி எடுத்து வைக்கும் கிராமத்தினர் இவரது கடைக்கு வைத்திருக்கும் பெயர் ‘ஆத்தா மெஸ்’.
“ஓய்வுங்கற பேர்ல வீட்ல் உட்காராம ஏதாவது செய்யணும்னுதான் இந்தக் கடையை நடத்துறேன்.எனக்கு உதவியா இருக்கற ரேவதி, மையலுக்கு உதவி செய்யும் பெண்கள்னு கூட்டா சேர்ந்து இந்தக் கடையை நடத்திட்டு இருக்கோம்” என்று சொல்லும் தாயம்மாள், எதையும் சாதிக்க வயது தடையல்ல என்பதை நிரூபிக்கிறார்.
படம்: சுப. ஜனநாயகசெல்வம்
No comments:
Post a Comment