Sunday, March 8, 2015

180-வது ஆண்டுவிழா கொண்டாடும் சென்னை மருத்துவக் கல்லூரி

சென்னை மருத்துவக் கல்லூரி (கோப்புப் படம்)

சென்னையின் அடையாளச் சின்னங்களில் ஒன்றாக விளங்குவது மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ் (எம்எம்சி) எனப்படும் சென்னை மருத்துவக் கல்லூரி. நாட்டின் பாரம்பரிய மருத்துவக் கல்லூரிகளில் ஒன்றான இக்கல்லூரி தற்போது 180-வது ஆண்டுவிழாவைக் கொண்டாடுகிறது.

புனித ஜார்ஜ் கோட்டையில் 1664-ம் ஆண்டு மெட்ராஸ் ஜெனரல் ஹாஸ்பிட்டல் அமைக்கப்பட்டது. அதன் பின்னர் பல்வேறு இடங்களில் மாறி மாறி செயல்பட்ட அந்த மருத்துவமனை, 1772 முதல் சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே செயல்படத் தொடங்கியது. 1835 பிப்ரவரி 2-ம் தேதி மெட்ராஸ் மெடிக்கல் ஸ்கூலை அப்போதைய கவர்னர் சர் பிரெடரிக் ஆடம் தொடங்கிவைத்தார். 1852-ல் இது மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ் ஆக உயர்த்தப்பட்டது. 1857-ல் சென்னை பல்கலை.யுடனும், 1988-ல் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலை.யுடனும் இணைக்கப்பட்டது.

‘மெட்ராஸ் மெடிக்கல் ஸ்கூல்’ தொடங்கப்பட்டு 180 ஆண்டுகள் ஆகின்றன. 180-வது ஆண்டு விழாவை கல்லூரி நிர்வாகத்தினரும், முன்னாள் மாணவர்களும் இணைந்து 20 நாட்கள் கொண்டாடுகின்றனர்.

இதுகுறித்து சென்னை மருத்துவக் கல்லூரியின் உடற்கூறு இயல் துறை இயக்குநர் டாக்டர் சுதா சேஷய்யன் கூறியதாவது:

மெட்ராஸ் ஜெனரல் ஹாஸ்பிட்டல் தற்போது ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. 1835-ல் மெட்ராஸ் மெடிக்கல் ஸ்கூல் தொடங்கப்பட்டபோது 4 துறைகள் மட்டுமே இருந்தன. 21 மாணவர்கள் படித்தனர். தற்போது 50-க்கும் மேற்பட்ட துறைகள் உள்ளன. 250 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இக்கல்லூரியின் 180 ஆண்டு பாரம்பரியம், சிறப்புகளை இப்போதுள்ள மாணவர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் 180-வது ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள், வினாடி வினா போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. நிறைவு விழாவில் முன்னாள் மாணவர்கள் கலந்துகொள்கின்றனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்படும்.

இவ்வாறு சுதா சேஷய்யன் கூறினார்.

மாணவர்கள் நடைபயணம்

மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி யின் 180-வது ஆண்டு விழாக் கொண்டாட்டம் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று, பாரம்பரியம் போற்றும் நடைபயணத்தை (ஹெரிடேஜ் வாக்) கல்லூரி முதல்வர் டாக்டர் விமலா நேற்று காலை 8.15 மணிக்கு தொடங்கிவைத்தார். சுதா சேஷய்யன், மருத்துவ துணை கண்காணிப்பாளர் டாக்டர் நாராயணசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

இதில் 50 மருத்துவ மாணவர்கள், 15-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். முன்னாள் மாணவர் களான டாக்டர்கள் டி.குணசாகரம், விட்டல், ராஜன் சந்தோஷம் ஆகியோர் நடைபயணத்தை வழி நடத்திச் சென்றனர். கல்லூரியின் பழைய கட்டிடங்களைப் பார்வையிட்ட படியும், அவற்றின் பாரம்பரியத்தை விளக்கியபடியும் நடைபயணம் சென்றது. கல்லூரி, மருத்துவமனை வளாகம் முழுவதும் சுற்றிய பிறகு, பகல் 12 மணி அளவில் நடைபயணம் நிறைவடைந்தது.

பழைய கட்டிடங்கள்

சென்னை மருத்துவக் கல்லூரி யில் பிராட்ஃபீல்ட் அறுவை சிகிச்சை பிளாக் 1934-ல் கட்டப் பட்டது. இதய சிகிச்சை பிளாக், ஹேலன் டாஸ்ஸிக் அம்மையாரால் 1972-ல் திறக்கப்பட்டது. நாட்டின் முதல் நீரிழிவு நோய் சிகிச்சை மையம் டாக்டர் சாம் இ பி மோஸஸ் என்பவரால் 1953-ல் இங்கு தொடங்கப்பட்டது.

பிரபல முன்னாள் மாணவர்கள்

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி - இந்தியாவின் முதல் பெண் டாக்டர்.

டாக்டர் ஏ.லட்சுமணசாமி முதலியார் - சென்னை பல்கலைக்கழகத் துணை வேந்தராக 27 ஆண்டுகள் இருந்தவர். எம்எம்சி-யின் முதல் இந்திய முதல்வர்.

டாக்டர் கே.எஸ்.சஞ்சீவி - விஎச்எஸ் மருத்துவமனை நிறுவனர்.

டாக்டர் எம்.சி.நஞ்சுண்ட ராவ் - சுவாமி விவேகானந்தருடன் பழகியவர். அந்த காலத்தில் மயிலாப்பூர் பகுதியில் மருத்துவம் பார்த்தவர்.

டாக்டர் நடேசன், டாக்டர் டி.என்.நாயர் - இருவரும் நீதிக் கட்சியை சேர்ந்தவர்கள்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024