Saturday, March 14, 2015

ஒரு தலைக்காதலால் அரசு பெண் ஊழியருக்கு நடந்த கொடூரம்!

கிருஷ்ணகிரி: காதலை ஏற்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த என்ஜினீயர், தனது உடலில் தீ வைத்துக் கொண்டதோடு, அரசு பெண் ஊழியரையும் கட்டிப்பிடித்ததால் இரண்டு பேரின் உடல் கருகியது. ஒருதலை காதலால் நடந்த இந்த சோக சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலத்தில் அரங்கேறியுள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தாலுகா நடியப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் (24), 6 ஆண்டுகளுக்கு முன்பு நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ்2 படித்து வந்தார். அதே பள்ளியில் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியை சேர்ந்த ராணி (24) (பெயர் மாற்றம்) பிளஸ்2 படித்து வந்தார். அப்போது முதல் சந்தோஷ், ராணியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இவரது காதலை ராணி ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனிடையே, பள்ளி படிப்பு முடிந்ததும் சந்தோஷ் சென்னையில் பொறியியல் கல்லூரியில் படித்தார். பாலக்கோட்டை சேர்ந்த ராணி கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். அந்த காலத்திலும் சந்தோஷ், ராணியை தொடர்ந்து ஒருதலைபட்சமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கல்லூரி படிப்பை முடித்த ராணி, குரூப்-1 தேர்வு எழுதி தேர்வானார். அவருக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் அலுவலகத்தில் உதவியாளராக பணி கிடைத்தது. அவர் தினமும் பாலக்கோட்டில் இருந்து வேலைக்கு சென்று வந்தார். இதனிடையே, ராணியை ஒருதலையாக காதலித்து வந்த சந்தோஷ், அவரை திருமணம் செய்ய முடிவு செய்து, பாலக்கோட்டில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளார்.

அப்போது ராணியின் வீட்டார், திருமணத்திற்கு விருப்பம் இல்லை என்று கூறியுள்ளனர். ஆனாலும் சந்தோஷ் விடாமல் தொடர்ந்து 3 முறை ராணி வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளார். ஆனால் அவர்களோ, சந்தோசிற்கு தங்களின் மகள் ராணியை கொடுப்பதில்லை என்று உறுதியாக தெரிவித்து விட்டனர். இதனால் சந்தோஷ் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று காலை ராணி, கெலமங்கலத்தில் உள்ள தனது அலுவலகத்திற்கு வேலைக்கு செல்வதற்காக பாலக்கோடு பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்தார். அங்கு சந்தோஷ் தயாராக நின்று கொண்டிருந்தார். பாலக்கோட்டில் இருந்து புறப்பட்ட பேருந்தில் ராணி ஏற, பின்னால் உள்ள இருக்கையில் சந்தோஷ் அமர்ந்து கொண்டார். கெலமங்கலம் பேருந்து நிலையத்திற்கு பேருந்து வந்ததும் ராணி இறங்கியுள்ளார். அவரை பின்தொடர்ந்து சென்ற சந்தோஷ், "ஏன், என்னை காதலிக்க மறுக்கிறாய். உன்னை விடாமல் 6 ஆண்டுகளாக நான் காதலித்து வருகிறேன். என்னுடைய காதலை ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறாய்?“ என்று ராணியிடம் கேட்டுள்ளார்.

அப்போது ராணி, “நான் தான் அப்போதே சொல்லி விட்டேனே. என்னை காதலிக்க வேண்டாம் என்று பலமுறை கூறியும் ஏன் என்னை தொடர்ந்து வருகிறாய்?“ என்று கேட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து கெலமங்கலம் சுல்தான்பேட்டையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் தண்ணீர் குடிக்க பயன்படுத்தும் பிளாஸ்டிக் கேனில், சந்தோஷ் பெட்ரோலை வாங்கியுள்ளார். பின்னர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ராணியிடம், "கடைசியாக கேட்கிறேன். என்னை காதலிக்கிறாயா இல்லையா?" என்று கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ராணி, தனது உறவினருக்கு செல்போன் மூலம் பேசி தான் ஆபத்தான சூழலில் உள்ளதாகவும், தன்னை வந்து மீட்டு செல்லும்படியும் கூறியுள்ளார். அப்போது திடீரென்று சந்தோஷ், தான் வைத்திருந்த கேனில் இருந்த பெட்ரோலை தனது உடலில் மளமளவென்று ஊற்றியுள்ளார். பின்னர் சிகரெட் பற்ற வைக்கும் லைட்டர் மூலம் தனது உடலில் தீயை பற்ற வைத்துள்ளார்.

இதில் அவரது உடல் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்த அதிர்ச்சி அடைந்த ராணி அங்கிருந்து ஓட முயற்சி செய்வதற்குள் எரியும் தீயுடன் ஓடிய சந்தோஷ், “என்னுடன் வாழ முடியாது என்று தான் கூறி விட்டாய். சாவிலாவது நாம் ஒன்றாக இணைவோம்“ என்று கூறி, எரியும் நெருப்புடன் ராணியை கட்டிப்பிடித்து கொண்டார். இதில் அவரது உடலிலும் தீப்பிடித்தது. 2 பேர் உடலிலும் தீப்பிடித்து எரிவதை பார்த்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு கெலமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். சந்தோஷ் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது பற்றிய தகவல் அறிந்ததும் காவல்துறையினர், சிகிச்சை பெற்று வரும் ராணி மற்றும் சந்தோஷிடம் விசாரணை நடத்தினர். ராணி அளித்த வாக்குமூலத்தில், "என்னை ஒருதலைபட்சமாக காதலித்து வந்த சந்தோஷ், தொடர்ந்து என்னை காதலிக்க சொல்லி வற்புறுத்தி வந்தார். நான் காதலிக்க மறுத்ததால் ஆத்திரத்தில், அவரது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொண்டு, என்னையும் கட்டிப்பிடித்து, கொலை செய்ய முயன்றார். இதுதொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறியுள்ளார்.

அந்த புகாரின் பேரில் கெலமங்கலம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024