புதுடில்லி: 'மதுரை காமராஜ் பல்கலைக்கழக துணைவேந்தர் கல்யாணி மதிவாணன் நியமனம் செல்லாது' என, சென்னை ஐகோர்ட் மதுரை கிளை வழங்கிய தீர்ப்பை, சுப்ரீம் கோர்ட் நேற்று தள்ளுபடி செய்தது.
'யு.ஜி.சி., வழிகாட்டுதலின் படி, துணைவேந்தர் பதவிக்கு கல்யாணி மதிவாணன் தகுதி இல்லை என்பதால் அவரை அப்பதவியில் இருந்து நீக்க வேண்டும்' என, பல்கலை முன்னாள் பேராசிரியர் ஜெயராஜ் உட்பட இருவர், மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தனர். இதை விசாரித்த டிவிஷன் பெஞ்ச், துணைவேந்தர் பதவியில் கல்யாணி மதிவாணனை நியமித்தது செல்லாது என உத்தரவிட்டது. இதை எதிர்த்து துணைவேந்தர் கல்யாணி மதிவாணன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் எஸ்.ஜே.முகோபாத்தியா, என்.வி.ரமணா ஆகியோர் நேற்று அளித்த தீர்ப்பு விவரம்: கடந்த, 2010ம் ஆண்டு பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறைகளின்படி, துணைவேந்தருக்கான தகுதி இல்லை என்று கூறி, கல்யாணி மதிவாணன் நியமனத்தை, சென்னை ஐகோர்ட் மதுரை கிளை செல்லாது என, தீர்ப்பளித்துள்ளது. இந்த விதிமுறைகளை தமிழக அரசு ஏற்க விரும்பும் பட்சத்தில் மட்டுமே, அது தொடர்பாக சட்டசபையில் சட்ட திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றலாம். ஆனால், தமிழக அரசு அவ்வாறு செய்யாததால், இவ்வழக்கில், மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே மோதல் ஏற்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை. அதனால், அந்த விதிமுறைகளுக்கேற்ப, தகுதியை கொண்டவர் தான், துணைவேந்தர் பதவி வகிக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல. அதனால், துணைவேந்தர் நியமனம் செல்லும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment