சினிமா வரலாற்றில் முதன்முறையாக ரூ.1000 சந்தா செலுத்தி ஆண்டு முழுவது சினிமா பார்க்கலாம் - கோவில்பட்டி சண்முக திரையரங்கம்" என்ற ஒரு விளம்பரம் அனைவரையும் கவர்ந்தது.
இது உண்மையா, எதற்காக ஆரம்பித்திருக்கிறார்கள் என திரையரங்க எண்ணைத் தொடர்புக் கொண்டு பேசினோம்.
"விளம்பரப்படுத்தும் பணிகள் எல்லாம் முடிந்து இன்று முதல் தான் அதற்கான வேலையை ஆரம்பிக்கிறோம். இப்போது திரையரங்கிற்கு மக்களின் வருகை என்பது பெருமளவு குறைந்து விட்டது. ஏதாவது வித்தியாசமாக பண்ண வேண்டிய சூழல் ஏற்பட்டு இருக்கிறது.
கடந்தாண்டு மட்டும் 37 படங்களை வெளியிட்டு இருக்கிறோம். அதில் ஒருவர் 20 படங்கள் பார்க்கிறார் என்று வைத்துக் கொண்டால் கூட, அதற்கான செலவு அவருக்கு ரூ.1000-த்தை தாண்டிவிடும். ஆகையால் இந்த புதிய முறையை அறிமுகப்படுத்துகிறோம். இம்முறைப்படி ரூ.1000 கட்டினால் கூப்பன் ஒன்றை கொடுத்துவிடுவோம்.
எங்கள் திரையரங்கில் வெளியாகும் படத்தை நீங்கள் இந்த கூப்பனைப் பயன்படுத்தி படத்தினைக் கண்டு மகிழலாம். கூப்பனில் ஒரு படத்தை ஒரு முறை தான் பார்க்க முடியும். ஒரு வேளை இந்த படத்தைப் பார்க்க உங்களுக்கு விருப்பமில்லை என்றால் உங்களது நண்பர்கள், குடும்ப உறுப்பினர் யாராவது உங்களது கூப்பனை எடுத்துக் கொண்டு வந்து படம் பார்க்கலாம். அதற்கும் அனுமதிக்கிறோம்." என்றார்கள்.
"ஆரம்பிக்க காரணம் என்ன?" என்று கேட்டதற்கு "முன்பு எல்லாம் ஒரு படம் திரையிட்டால் மக்கள் கூட்டம் என்பது அதிகமாக இருக்கும். எங்களுக்கு சந்தோஷமாக இருந்தது. தற்போது சினிமா தயாரிப்பு என்பது மிகப்பெரிய விஷயமாகி விட்டது. நடிகர்கள், நடிகைகள் என அனைவருமே சம்பளத்தை உயர்த்திவிட்டார்கள். அதுமட்டுமன்றி தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என எல்லாரையும் தாண்டி எங்களிடம் படம் வரும் போது அதன் விலை என்பது மிகவும் அதிகமாகிறது. அப்படி நாங்கள் கஷ்டப்பட்டு எடுத்து வெளியிட்டால் கூட மூன்று நாட்கள் தான் அதற்கு மதிப்பு. அதற்கு பிறகு கூட்டம் குறைந்துவிடும்.
இது ஒரு பிரச்சினை என்றால், அடுத்த பிரச்சினை திருட்டு டி.வி.டி. 80 ரூபாய் கொடுத்து படம் பார்ப்பதற்கு 30 ரூபாய் கொடுத்து டி.வி.டியில் வீட்டிலேயே படம் பார்க்கலாம் என்று மக்களும் எண்ண ஆரம்பித்துவிட்டார்கள். இதனால் ஒரு புதுமையாக விஷயம் பண்ணலாம் என்று ஆரம்பித்தோம். இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று தெரிவித்தார்கள்.
No comments:
Post a Comment