'உங்கள் பணம், உங்கள் கையில்' என்று எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட மானியத் தொகையை அரசு நேரடியாக மக்கள் கையில் கொடுக்க முடிவு செய்தது. அதன்படி மார்ச் 31ம் தேதிக்குள் இந்த நேரடி மானியத் திட்டமான பஹலில் சேர மக்களுக்கு மத்திய அரசு அறைகூவல் விடுத்துள்ளது. திட்டத்தில் சேருவதற்கான கடைசி நாள் நெருங்கி கொண்டு இருக்க வாடிக்கையாளர்கள் கேஸ் விநியோகஸ்தர் அலுவலகங்களில் குவிந்த வண்ணம் உள்ளனர். இதில் பல நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக மக்கள் கூறுகின்றனர்.
ஆதார் கார்டு அல்லது வேறு ஏதாவது அடையாள ஆவணங்களை கேஸ் விநியோகஸ்தரிடம் வாடிக்கையாளர் சமர்ப்பிக்க வேண்டும். அதோடு மானியத் தொகையை வங்கியில் செலுத்த வசதியாக வங்கி கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களையும் கொடுக்க வேண்டும். வாடிக்கையாளர்களில் பெரும்பாலானவர்களுக்கு வங்கி கணக்கு இல்லை. இதனால் மத்திய அரசு குறிப்பிட்டுள்ள வங்கி கிளைகளில் முட்டி மோதி பெரும்பாலானவர்கள் வங்கி கணக்கைத் தொடங்கி விட்டனர்.
இதன்பிறகு கேஸ் விநியோகஸ்தர்களிடம் சென்றால் அங்கு வேறு ஒரு பிரச்னை. வாடிக்கையாளர்களில் பலரது இணைப்பு அவர்களது பெற்றோர் பெயரில் இருந்து வருகிறது. இதில் என்ன கொடுமை என்றால் இறந்து போன பெற்றோரின் பெயரில் இணைப்பு இருப்பதால் அதை மானியத் திட்டத்தில் சேர மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பெற்றோரின் பெயரிலிருந்து தன்னுடைய பெயருக்கு மாற்ற வாடிக்கையாளர்கள் பல்வேறு போராட்டங்களை சந்திக்க வேண்டியதுள்ளது
பாதிக்கப்பட்டவரில் ஒருவரான புரசைவாக்கத்தை சேர்ந்த சரவணன் என்பவர், “ சென்னை மந்தைவெளியில் குடியிருந்தபோது எனது தந்தை ஜெகநாதன் பெயரில் இந்த கேஸ் இணைப்பு பெறப்பட்டது. பிறகு வேலை நிமித்தமாக சென்னை புரசைவாக்கத்திற்கு குடியேறினேன். இதனால் அங்கிருந்த கேஸ் இணைப்பை புரசைவாக்கத்திற்கு மாற்றினேன். இந்த சூழ்நிலையில் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு எனது தந்தை ஜெகநாதன் இறந்து விட்டார்.
இதனால் அவரது பெயரில் உள்ள கேஸ் இணைப்பை என்னுடைய பெயருக்கு மாற்ற கேஸ் விநியோகஸ்தர் அலுவலகத்துக்கு சென்றேன். அப்போது நான் கொடுத்த ரேஷன் கார்டில் எனது தந்தை பெயரை தவறுதலாக ஜெகன்ராஜ் என்று அச்சிடப்பட்டுள்ளது. இதை சுட்டிக்காட்டிய விநியோஷஸ்தர் அலுவலக ஊழியர்கள், 2500 ரூபாய் கொடுத்தால் உன்னுடைய பெயருக்கு இணைப்பை மாற்றித் தருகிறேன் என்கிறார்கள். பெயர் மாற்ற பணம் செலுத்த தேவையில்லை என்று எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளதாக நான் கூறினேன்.
சட்டப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றால் ரேஷன் கார்டில் உள்ள தந்தையின் சரியான பெயரை மாற்றிவிட்டு வரும்படி தெரிவித்தனர். இதனால் பெயரை மாற்ற வள்ளுவர் கோட்டத்தில் உள்ள குடிமைப் பொருள் அலுவலகத்துக்கு சென்றேன். அங்கு இப்போது பெயரை மாற்ற முடியாது என்று கூறினர். இதனால் சேப்பாக்கம் எழிலகத்தில் செயல்படும் குடிமை பொருள் தலைமை அலுவலகத்துக்கு சென்றேன். அங்கு பெயரை மாற்ற அதற்குரிய ஆவணங்களை சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் கொடுங்கள். அதற்கு அவர்கள் லஞ்சம் கேட்டால் எழுத்துப்பூர்வமாக எழுதித்தரச் சொல்லுங்கள் என்றார்கள்.
இதனால் மீண்டும் வள்ளுவர் கோட்ட அலுவலகத்துக்கு சென்றேன். அவர்கள் இன்று, நாளை என்று இழுத்தடிக்கிறார்கள். வேறுவழியின்றி கேஸ் விநியோகஸ்தர் அலுவலகத்துக்கு சென்றால் பணம் கொடுத்தால் மட்டுமே பெயரை மாற்ற முடியும் என்கிறார்கள். ரேஷன் கார்டில் தவறுதலாக எனது தந்தை பெயரை எழுதிய அந்த அரசு அதிகாரியால் நான் மானிய திட்டத்தில் சேர வீட்டுக்கும் அரசு அலுவலகத்துக்கும் அலைந்து கொண்டு இருக்கிறேன்" என்றார் வருத்தத்துடன்.
இந்தப் பிரச்னையை கையில் எடுத்துள்ள தேவை இயக்கம் ஒருங்கிணைப்பாளர் இளங்கோ கூறுகையில், " பெயர் மாற்ற பணம் தேவையில்லை என்று கூறுகிறார்கள். ஆனால் கேஸ் விநியோகஸ்தர்கள் பணம் தந்தால் மட்டுமே மாற்ற முடியும் என்கிறார்கள். கேஸ் விநியோகஸ்தர்கள் பணம் கேட்பது குறித்து சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனத்தின் டோல் ப்ரி நம்பரை தொடர்பு கொண்டால் அது சேவையில் இல்லை என்று பதில் வருகிறது. எண்ணெய் நிறுவனத்தின் நம்பர் பல நாட்கள் செயல்படாமல் உள்ளது. இந்த சூழ்நிலையில் எப்படி வாடிக்கையாளர்கள் தங்களது குறைகளை தெரிவிக்க முடியும்.
இந்த பிரச்னையை யாரிடமும் சொல்ல முடியாமல் கேட்கிற பணத்தை கொடுத்து விட்டு அரசு கொடுக்கும் சொற்ப மானியத் திட்டத்தில் சேருகின்றனர். கேஸ் விநியோகஸ்தர்களின் அடாவடிக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு அலுவலகத்தில் மக்களை அலைக்கழிப்பவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
இதுகுறித்து எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, "பெயர் மாற்றுவதற்கு என்று தனிக் கட்டணம் கிடையாது. முன்பு சிலிண்டருக்கான டெபாசிட் தொகை குறைவு. ஆனால் இப்போது அதிகம். அதற்காக பணம் கேட்டு இருப்பார்கள். கூடுதலாக பணம் கேட்டால் எங்களிடம் சம்பந்தப்பட்ட கேஸ் விநியோகஸ்தர் மீது புகார் அளிக்கலாம்" என்றார்.
பஹல் திட்டம் பாமர மக்களை பாடாய்படுத்துகிறது!
- எஸ்.மகேஷ்
No comments:
Post a Comment