கடுமையான பணிச் சுமை இருக்கும் போது கூட அவர்கள் படபடப்பாக இருப்பதைக் காண முடியாது. என்ன காரணமாக இருக்கும்? அவர்கள் தங்களது பணியை முழுமையாக நேசிப்பவர்கள். தங்களது பணியை மிகவும் அனுபவித்துச் செய்பவர்கள்.
இன்னொரு பிரிவினர் இருப்பார்கள். இந்த வேலை என் தகுதிக்கு மிகவும் குறைவான ஒன்று . நான் இதை விடச் சிறந்த வேலைக்குத் தகுதியானவன் என்ற மனப்பாங்குடனே இருப்பார்கள்.
இந்த எண்ணம் தவறானதா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்வேன். நான் வேலையில் சேர்வது என்ற குறிக்கோளில் வெற்றி பெற்று விட்டேன். இதற்கு அடுத்த கட்டமாக என்னை உயர்த்திக் கொண்டு இன்னும் முன்னே செல்வது எப்படி என்று நினைப்பது நல்ல எண்ணம்தான்.
ஆனால், நான் செய்யும் வேலை எனக்குப் பிடிக்கவில்லை என்று புலம்பிக் கொண்டு, மேலும் முன்னேறிச் செல்ல எந்த முயற்சியும் எடுக்காமல் காலந் தள்ளுவதுதான் பிரச்சினை. இதனால் வேலையில் விருப்பம் இல்லாமல் இருப்பார்கள். அவர்களது வேலையின் தரமும் அளவும் திருப்திகரமாக இருக்காது. இதனால் மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாவார்கள்.
அவரை வேலையை விட்டு நீக்கும் அளவுக்குப் போக வாய்ப்புண்டு. இதனால் கிடைத்த வேலையை இழந்து விட்டு மறுபடியும் முதலில் இருந்து வேலை தேட வேண்டிய நிர்ப்பந்தம் மட்டுமல்ல, வேலை கிடைத்தாலும் அந்த வேலையிலும் இவருக்கு அமைதி கிடைக்குமா என்பதும், அதனால் அந்த வேலையும் நீடிக்குமா என்பதும் கேள்விக்குறிதான்.
வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். திரைப்படத்தில் மருத்துவமனையைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கும் ஒரு பெரியவர் வருவோர், போவோர் எல்லோரையும் குறை சொல்லிக் கொண்டிருப்பார். கமலஹாசன் அவரது பணியின் மகத்துவத்தை அவருக்குப் புரிய வைத்தவுடன் முகமெல்லாம் மலரச் சிரிப்புடன் பணி செய்வார்.
எவ்வளவு சிறியப் பணியாக இருந்தாலும், எந்தப் பணியும் தரம் தாழ்ந்தது அல்ல என்பதை நாம் உணர வேண்டும். பாராட்டு கிடைத்தால் மகிழ்ச்சி. கிடைக்கவில்லை என்றால் கிடைக்கும் வரை உழைக்க வேண்டியதுதான்.
ஒருவன் எப்படி மகிழ்ச்சி வரும் போது துள்ளிக் குதித்து நடனமாடி மகிழ்கிறானோ, அது போலவே மகிழ்ச்சி வரும் வரை துள்ளிக் குதித்து நடனமாட வேண்டும் என்கிறது ஜென் பவுத்தம்.
பணிச்சூழல் நாம் விரும்பியபடி கனகச்சிதமாக இருக்க வேண்டும் என்று காத்திருக்கக் கூடாது. இருக்கும் சூழலில் பணியை ஆரம்பித்து அதை நமக்கு விருப்பமான முறையில் மாற்றிக் கொள்ள முயல வேண்டும். அதுவே பணியிடத்தில் மகிழ்ச்சி தரும்.
ஜி.வி. வெங்கடேசன்
No comments:
Post a Comment