பெங்களூரில் 2வது நாளாக தொடரும் மழை.. வெள்ளம் சூழ்வதால் மக்கள் அச்சம்
பெங்களூர்: கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் தொடர்ந்து 2வது நாளாக பெய்த கன மழையால் நகரின் பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
பெங்களூரில் நேற்று இரவு விடிய, விடிய கன மழை பெய்தது. 24 மணி நேரத்தில் பெங்களூரு இந்துஸ்தான் ஏரோநாடிகல் லிமிடட் மையத்தில் 14.4 செ.மீ., மழையும் சிட்டி ரயில் நிலையம் பகுதியில் 12.9 செ.மீ அளவு மழையும் பெய்திருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை கொட்டித் தீர்த்தது.
இந்த கன மழைால் பெங்களூரின் பல பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. பல இடங்களில் 5 அடி வரை தண்ணீர் தேங்கியது. மக்கள் வீட்டை விட்டு வர முடியாமல் அவதிப்பட்டனர். கனமழைக்கு தமிழகத்திலிருந்து சென்று பெங்களூரில் வேலை பார்க்கும், ஐடி ஊழியர்கள் கணிசமாக வசிக்கும் கோரமங்களா பகுதி மிகவும் பாதிக்கப்பட்டது.
பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன. நகரின் பல பகுதிகளிலும் பல மணி நேரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டன. ஹெச்.எஸ்.ஆர் லேஅவுட், சாந்திநகர், வில்சன் கார்டன், கே.ஆர்.புரம், அல்சூர், விவேக் நகர், முருகேஷ் பாள்யா, பழைய விமானநிலைய சாலை, குர்ரப்பனபாளையா, பன்னேருகட்டா சாலை, பொம்மனஹள்ளி, ஆடுகோடி, மடிவாளா, சிக்கலட்சுமைய்யா லேஅவுட் உள்ளிட்ட பகுதிகளில் திடீர் மழையால் பெருகிய வெள்ளம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. தெருக்களில் முழங்கால் அளவு நீர் தேங்கியது. தொடர்ந்து தொல்லை தரும் பெல்லந்தூர் ஏரியில் நுரைமூட்டம் மிகவும் அதிகரித்தது.
இந்த நிலையில் இன்று மதியத்திற்கு பிறகு சூரியன் வெளிப்பட்டது. ஆனால், இரவானதும் மழை கொட்ட ஆரம்பித்தது. இதனால் இரவில் வெள்ளப்பெருக்கு ஏற்படுமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். இன்னும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. பெங்களூரின் அருகேயுள்ள தமிழக தொழில் நகரமான ஒசூரிலும் மழையால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
source: oneindia.com
Dailyhunt