Wednesday, August 16, 2017

துணைவேந்தர் பதவி விண்ணப்பிக்க அவகாசம்
பதிவு செய்த நாள்15ஆக
2017
22:33

'அண்ணா பல்கலையின் புதிய துணைவேந்தர் பதவிக்கு, ஒரு வாரத்தில் விண்ணப்பங்கள் தாக்கல் செய்ய வேண்டும்' என, தேடல் குழு அவகாசம் வழங்கி உள்ளது.

அண்ணா பல்கலையில், துணைவேந்தராக இருந்த ராஜாராம் பதவிக்காலம், 2016 மே மாதம் முடிந்தது. புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய, தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை துணைவேந்தர், பாஸ்கரன் தலைமையில் தேடல் குழு அமைக்கப்பட்டது.

தேடல் குழுவினர், 10 மாதங்களுக்கும் மேலாக விண்ணப்பங்கள் பெற்று, மூன்று பேர் கொண்ட பட்டியலை, கவர்னரிடம் வழங்கினர். பட்டியலில் இடம் பெற்றவர்களிடம், கவர்னர் வித்யாசாகர் ராவ், நேர்முகத் தேர்வு நடத்தினார். பின், பட்டியலை நிராகரித்து, தேடல் குழுவையும் கலைத்தார்.
இதையடுத்து, துணைவேந்தர் நியமனம் தொடர்பாக, சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டு, புதிய தேடல் குழு அமைக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி, ஆர்.எம்.லோதா தலைமையிலான, இந்த குழுவினர், ஜூலை, 20ல், புதிய அறிவிக்கையை வெளியிட்டனர்.அதன்படி, தகுதியான பேராசிரியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறும் பணி நடக்கிறது. கல்வித்தகுதி, ஆராய்ச்சி விபரங்கள் உட்பட, பல்வேறு தகவல்கள், விண்ணப்பத்தில் இடம் பெற வேண்டும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள், வரும், 22 வரை மட்டுமே பெறப்பட உள்ளன.
கடைசி தேதிக்கு, இன்னும் ஒரு வாரமே அவகாசம் உள்ளதால், விண்ணப்பிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த முறை, சிறந்த தலைமை பண்பும், ஆராய்ச்சியில் முன்னிலையும், தரமான கல்வியை வழங்குவதில் ஆர்வமும் உடையவர், துணைவேந்தராக தேர்வு செய்யப்
படுவார் என, உயர் கல்வி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 23 AND 24.12.2024