மாணவர்களுக்கு 'போதை' சப்ளை மாணவர், மருந்தாளுனர் கைது: 2000 மாத்திரைகள் பறிமுதல்
பதிவு செய்த நாள்15ஆக
2017
23:16
மதுரை,மதுரையில் கல்லுாரி மாணவர்களிடம் மாத்திரைகளை விற்று, போதைக்கு அடிமையாக்கிய கல்லுாரி மாணவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர். இரண்டாயிரம் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மதுரையில் கல்லுாரி மாணவர்கள் சிலர், துாக்க மாத்திரைகளை போதைக்கு பயன்படுத்துகின்றனர். மாணவர்களின் அலைபேசிக்கு தொடர்பு கொண்டு சிலர் மாத்திரை விற்பதாக, திடீர்நகர் இன்ஸ்பெக்டர் துரைபாண்டியனுக்கு தகவல் கிடைத்தது.
இதன்படி மதுரை சின்னம்பட்டி கல்லுாரி மாணவர் பிரபாகரன், 20, மூலக்கரை மருந்தாளுனர் சரவணகுமார், 24, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களது அறையில் இருந்து 2,௦௦௦ போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
* போலீசார் கூறியதாவது: வலியால் அவதிப்படும் நோயாளிகளுக்கு மருந்துக் கடைகளில், டாக்டர் பரிந்துரைபடி துாக்க மாத்திரை கொடுக்கின்றனர். மருந்து சீட்டு இல்லையெனில் தரக்கூடாது. இதை மருந்து கட்டுப்பாட்டு அலுவலர்களும் கண்காணிப்பர். ஏனெனில், மாத்திரையை உட்கொண்டு துாங்காவிட்டால், மூளையை பாதித்து போதையாக மாற்றிவிடும்.
'பார்மசிஸ்ட்' சரவணகுமார்,, மொத்த மருந்து வினியோகிஸ்தர்களிடம் துாக்க மாத்திரைகளை வாங்கி, ஒரு அட்டை 100 ரூபாய்க்கு பிரபாகரனிடம் விற்றுள்ளார். பிரபாகரன் கல்லுாரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படிக்கிறார். இவர், மாணவர்களுக்கு அந்த அட்டையை 200 ரூபாய்க்கு விற்றுள்ளார். இதற்காக இருவரும் தெற்குவாசலில் அறை ஒன்றை வாடகைக்கு எடுத்து மாத்திரைகளை இருப்பு வைத்துள்ளனர். இவர்களது அறையில் இருந்து தலா 10 மி.கி., அளவுள்ள 2,௦௦௦ மாத்திரைகளை பறிமுதல் செய்தோம்.
ஒரே நேரத்தில் 10 மி.கி., அளவு கொண்ட மூன்று மாத்திரைகளை மாணவர்கள் உட்கொண்டு, போதையாகி குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். அதிவேகமாக டூவீலர்களில் சென்று விபத்தில் சிக்குகின்றனர்.
இவ்வாறு கூறினர்.
No comments:
Post a Comment