Tuesday, August 15, 2017

ஓய்வு பெறும் லண்டன் ’பிக் பென்’ கடிகாரம்!

ராகினி ஆத்ம வெண்டி மு.

உலகின் மிகப்பெரிய மணிக்கூண்டு கோபுரங்களில் ஒன்றான லண்டனின் பிரசித்திபெற்ற ‘பிக் பென்’ கடிகாரம், புனரமைப்புப் பணிகளுக்காக நிறுத்திவைக்கப்பட உள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.




லண்டன் மாநகரில், தேம்ஸ் நதிக்கரையோரம் அமைந்திருக்கும் வெஸ்ட்மின்ஸ்டெர் அரண்மனையில் அமைந்திருக்கிறது இந்த வானுயர மணிக்கூண்டு. இந்த வெஸ்ட்மின்ஸ்டெர் அரண்மனையில்தான் பிரிட்டிஷ் நாடாளுமன்றம் இயங்கி வருகின்றது. 1858-ம் ஆண்டு, ஏப்ரல் 10-ம் நாள் கட்டி முடிக்கப்பட்ட இம்மணிக்கூண்டு, கடந்த 156 ஆண்டுகளாக ஆங்கிலேயரின் தலைநகரச் சின்னமாக விளங்கிவருகிறது.

இரண்டு உலகப் போர்களைக் கடந்தும், எவ்வித சுழற்சி மாற்றங்களும் இன்றி தன் உலகப்புகழ் பெற்ற மணியோசையால் துல்லியமாக நேரம் காட்டி, காலங்கள் பல கடந்து காலூன்றி நிற்கும் இந்த பிக்பென் கடிகாரக்கூண்டு, தற்போது மிகவும் மோசமான நிலையை எட்டியிருப்பதால், அதற்கான பராமரிப்புப் பணிகளை விரைந்து செய்யவேண்டுமென நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது. அக்குழு சமர்பித்த அறிக்கையில் மணிக்கூண்டின் மேற்கூரையும், கடிகார முட்களும், மணியோசை எழுப்பும் தொங்குருண்டையும் மற்றும் வேறு சில உலோக பாகங்களும் துருப்பிடித்து சேதமடைந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

அவ்வாறு பராமரிப்புப் பணிகளுக்காக நான்கு ஆண்டுகள் இக்கடிகாரம் நிறுத்திவைக்கப் கொடுத்த அறிவிப்பு செயல்பட்டால், இக்கடிகாரத்தின் 156 ஆண்டு கால வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தில், மிக நீண்ட நாட்களுக்கு அதன் மணியோசை நிறுத்தப்படும் காலமாக இப்புனரமைப்புக் காலம் அமையலாம் எனக் கருதப்படுகிறது.

அறிக்கைகளுக்கும், கணக்கீடுகளுக்கும் அப்பால் பிரிட்டிஷாரின் கலைப் பொக்கிஷத்திற்கு, உலகச் சிறப்பு வாய்ந்த, நூறாண்டுகளுக்கு மேல் கடந்து ஒலிக்கும் மணியோசைக்கு சில காலம் ஓய்வு!

No comments:

Post a Comment

NEWS TODAY 23 AND 24.12.2024