இன்ஸ்டண்ட் காஃபி போர் அடிக்குதா? அப்போ ஸ்ட்ராங்கா ஃபில்டர் காஃபி போடக் கத்துக்கலாமே!
By கஸ்தூரி ராஜேந்திரன், தேனி. | Published on : 14th August 2017 04:40 PM |
சிலருக்கு கடையில் விற்பனையாகிற ப்ரூ, லியோ, நரசுஸ், உள்ளிட்ட காப்பித்தூள்களில் ஒன்றை வாங்கி ஃபில்டர் காஃபி தயாரிப்பதே திருப்தியாக இருக்கும். சிலருக்கோ, தாங்களே நேரடியாக சூப்பர் மார்கெட்டுகளுக்குச் சென்று தரமான காப்பிக் கொட்டைகளும், பீபரியும் வாங்கி தங்கள் கை பட மெஷினில் அரைத்து அதில் பதமாகச் சிக்கரி கலந்து நாசி மணக்க, மணக்க திடமான காப்பித் தூளை தாங்களே தயாரித்து அதில் காஃபி போட்டு அருந்தினால் தான் திருப்தியாக உணர முடியும். இதெல்லாம் அவரவர் மனநிலை சார்ந்த விஷயங்கள் என்றாலும் யோசித்துப் பார்க்கையில் இது கூட சற்று சுவாரஸ்யம் தரக் கூடிய விஷயம் தான் இல்லையா? சரி இப்போது தரமான, திடமான ஃபில்டர் காப்பித் தூள் எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்;
காப்பித்தூள் தயாரிக்கத் தேவையானவை...
- பிளாண்டேஷன் A - 1/4 கிலோ
- பீ பரி - 1/4 கிலோ
- சிக்கரி - 50 கிராம்
காப்பித்தூள் தயாரிக்கத் தேவையான பொருட்களை நாமே நேரடியாக வாங்கி, வீட்டிலேயே காப்பிக் கொட்டைகளை பதமாக வறுத்து, பீபரியும், சிக்கரியும் தேவையான அளவு சேர்த்து மெஷினில் அரைத்துக் கொள்வது ஒரு வகை... அல்லது சென்னையில் பல இடங்களில் தரமான காப்பித்தூள் அரவை அங்காடிகள் உள்ளன. அவற்றில் ஒன்றில் தரமான, மணமான காப்பித்தூளை சுடச் சுட அரைத்து விலைக்கு வாங்கிக் கொண்டு அதைக் கொண்டும் ஃபில்டர் காஃபி போட கற்றுக் கொள்ளலாம். இரண்டுமே ஒன்று தான்.
ஃபில்டர் காபி போடத் தேவையானவை:
- மணமான காப்பித்தூள்: 2 முதல் 3 டேபிள் ஸ்பூன்
- கொதிக்கும் தண்ணீர்: அரை கப்
- பால்: 2 கப்
- சர்க்கரை: தேவையான அளவு
- காஃபி ஃபில்டர்
ஃபில்டர் காஃபி தயாரிக்கும் முறை:
காஃபி ஃபில்டரில் முதலில் தேவையான அளவு காப்பித்தூளைப் போட்டு அதன் மேல், உள்ளிருக்கும் குடை கொண்டு காப்பித்தூளை கெட்டித்து அடைக்கவும். பின்னர் கொதிக்கும் தண்ணீரை அதன் மீது மெதுவாக விட்டு ஃபில்டரை அடைத்து டிகாக்ஷன் இறங்கும் வரை 5 நிமிடங்கள் காத்திருக்கவும். கொதிக்கும் தண்ணீர் விடப்பட்டிருப்பதால் வெகு சீக்கிரமாகவே டிகாக்ஷன் இறங்கி விடும். காஃபி ப்ரியர்களுக்கு கள்ளிச்சொட்டுப் போன்ற அதிகாலையின் முதல் டிகாக்ஷனை கண்ணால் காண்பதைப் போன்ற பேரானந்தம் தரக்கூடிய செயல் வேறில்லை! சூடான டிகாக்ஷனில் தேவையானதை ஒரு கப்பில் ஊற்றிக் கொண்டு, தேவையான அளவு சர்க்கரை சேர்த்து அதன் பின்னரே கொதித்து இறக்கிய பாலை அதில் கலக்க வேண்டும்.
இப்போது லோட்டாவில் அந்தக் காஃபியை ஊற்றி ஒரு ஆற்று ஆற்றிப் பாருங்கள். மணக்க, மணக்க நுரை பொங்கும் ஃபில்டர் காஃபி தயார். மனதிற்குத் திருப்தியாக, நிறம், மணம், திடம் மூன்றும் ஒருங்கே அமைந்த ஃபில்டர் காஃபியை மட்டும் நம்மால் தயாரிக்க முடிந்தந்தென்று வையுங்கள் அப்புறம் எப்பேற்பட்ட தலைவலியாலும் நம்மை ஒன்றுமே செய்து விட முடியாது.
மனச்சோர்வு, உடற்சோர்வு, தலைவலி, தொண்டை வலி எல்லாவற்றுக்குமே மிகச் சிறந்த நிவாரணியாக நாம் இந்த ஃபில்டர் காஃபியை உணரலாம்.
ஃபில்டர் காஃபி தயாரிக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை...
ஃபில்டரில் காப்பித்தூளைப் போட்டு உடனடியாக அதில் கொதிக்கும் தண்ணீரைச் சேர்த்து விடக் கூடாது. முதலில் குடை கொண்டு மூடி காப்பித்தூளை கெட்டிக்கச் செய்து அதன் மீது சிறிது, சிறிதாக நிதானமாகத் தான் கொதிக்கும் தண்ணீர் விடவேண்டும். அப்போது தான் தூள் இறங்காமல் வெறும் டிகாக்ஷன் மாத்திரம் ஃபில்டரில் இறங்கும். நமக்கும் கெட்டியான திடமான டிகாக்ஷன் கிடைக்கக் கூடும். அதே போல காஃபி போடும் போது முதலில் டிகாக்ஷனில் சர்க்கரை சேர்த்த பிறகே பால் சேர்க்க வேண்டும். அப்போது தான் காஃபி மணமாக இருக்கும்.
No comments:
Post a Comment