சிகிச்சை அளிக்காமல் சிறுமி, முதியவர் இறந்த விவகாரம் ஆம்பூர் அரசு மருத்துவமனை அலுவலரிடம் விசாரணை
2017-08-15@ 01:49:20
ஆம்பூர் : சென்னை வேங்கைவாசல் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ராஜ்குமார், அவரது நண்பர் சென்னை தி.நகர் பகுதியை சேர்ந்த சந்தானம் (73) ஆகியோர் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து பெங்களூருக்கு காரில் புறப்பட்டனர். காரை ராஜ்குமார் ஓட்டி வந்தார். வேலூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் அருகே தேசிய நெடுஞ்சாலையில், முன்னால் சென்ற லாரி திடீரென திரும்பியதில் ராஜ்குமார் கார் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த இருவரும் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லாததால் பிற்பகல் 1.10 மணியில் இருந்து இரண்டரை மணி நேரமாக சிகிச்சை அளிக்கப்படவில்லை. இதில் ராஜ்குமார் இறந்தார். இதையடுத்து தனியார் ஆம்புலன்ஸ் மூலம் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சந்தானம் அனுமதிக்கப்பட்டார். இதேபோல ஆம்பூர் தாலுகா ராலகொத்தூரை சேர்ந்த ராஜேஷின் மகள் வைஷ்ணவி(13) மூச்சு திணறலுக்கு சிகிச்சை அளிக்க டாக்டர்கள் இல்லாமல், 2 மணி நேரமாக உயிருக்கு போராடி இறந்தார்.
டாக்டர்கள் இல்லாததால் ஒரே நாளில் 2 பேர் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவல் தெரிவிக்க ஆம்பூர் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் (பொறுப்பு) ஷர்மிளாவை தொடர்பு கொண்டபோது அவர் போனை எடுக்கவில்லையாம். மேலும் சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் சாந்தியையும் தொடர்பு கொள்ள முடியவில்லையாம். இந்நிலையில், பிரச்னைகள் முடிந்தபிறகு இரவு மருத்துவமனைக்கு வந்த ஷர்மிளா, நோயாளிகளுக்கு சிகிச்ைச அளித்துள்ளார். நேற்று காலை மீண்டும் மருத்துவமனைக்கு வந்த அவர், மருத்துவமனை கண்காணிப்பாளர் (பொறுப்பு) கென்னடியிடம் தனக்கு 15 நாட்கள் லீவு வேண்டும் எனக்கூறி கடிதத்தை கொடுத்துள்ளார். இதை கென்னடி ஏற்க மறுத்துள்ளாராம். இதற்கிடையில் மருத்துவமனையில் நடந்த சம்பவம் தொடர்பாக ஷர்மிளா மற்றும் டாக்டர்கள், ஊழியர்களிடம் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமைச்சர் பதவி விலக அன்புமணி வலியுறுத்தல்
பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: வேலூர் மாவட்டம் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் இருவர் உயிரிழந்ததற்காக தமிழக ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் சுகாதாரத்துறை முற்றிலுமாக செயலிழந்து விட்டதையே இது காட்டுகிறது. ஆம்பூர் நிகழ்வுகளுக்கு பொறுப்பேற்று சுகாதார அமைச்சர் பதவி விலக வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment