தொழில்நுட்பம் வளர்ந்த பிறகு மொட்டைக் கடுதாசி அனுப்ப முடியலையா? 'சரஹா' இருக்குங்க!
By DIN | Published on : 14th August 2017 04:01 PM |
நேர்மை என்ற பெயருடன் துவங்கப்பட்டுள்ள 'சரஹா' என்ற சமூக தளம் சமீபத்தில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. தன்னைப் பற்றி தெரிவிக்காமல், ஒரு நபருக்கு தான் சொல்ல வேண்டிய விஷயத்தை மட்டும் கொண்டு சேர்க்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ்-அப் போன்ற சமூக தளங்களை தொடர்ந்து 'சரஹா' புதிதாக கால் பதித்துள்ளது.
சரஹா-வில் என்ன புதுமை என்று கேட்டால், தமிழில் நம்ம பாஷையில் சொல்வதாக இருந்தால் மொட்டைக் கடிதாசுதான். தகவல் தொழில்நுட்பம் வளர்ந்த பிறகு, மொட்டைக் கடிதாசுகள் அனுப்ப முடியாமல், நேருக்கு நேர் திட்டவும், தனது ஆழமான அன்பை வெளிப்படுத்தவும் முடியாமல் தவித்த பல ஆத்மாக்களுக்கு இது வரப்பிரசாதம்தான்.
சரஹா என்றால் அராபிய மொழியில் நேர்மை என்று பொருள். பேசுவதற்குக் கட்டுப்பாடுகள் இருக்கும் அரேபியாவில் உருவாக்கப்பட்ட இந்த சரஹா சமூக தளம் இப்போதுதான் இந்தியாவில் அறியப்படுகிறது.
தாங்கள் நினைத்ததை இந்த உலகத்துக்கே எளிதில் கொண்டு செல்ல வழி வகுக்கும் பேஸ்புக், டிவிட்டர் பக்கங்களுக்கு நேர் எதிராக, தான் யாரிடம் ஒரு விஷயத்தை சொல்ல நினைக்கிறோமோ, அவர்களிடம் அந்த விஷயத்தை நச்சென்று கொண்டு சேர்த்துவிடும். நம் பெயரைக் கூட சொல்லாது.
ஒரே ஒரு விஷயம், ஒரு கருத்தை அனுப்ப நினைப்பவருக்கும், பெறுபவருக்கும் சரஹாவில் அக்கவுண்ட் இருக்க வேண்டும். இதைத் தவிர வேறு எந்த நிபந்தனையும் இல்லை. இதில் ஆச்சரியம் என்னவென்றால், தனிப்பட்ட முறையில் சரஹா மூலம் அனுப்பப்படும் செய்திகளை, பலரும் தங்களது பேஸ்புக் பக்கங்களிலும் பகிர்ந்து வருகின்றனர்.
எல்லாம் நல்ல விஷயமாகவே இருக்கும். சிலது கிண்டல் கேலியாக இருக்கும். நறுக்கென்று இருக்கும் எதுவும் இதுவரை சமூக தளங்களை அலங்கரிக்கவில்லை.
முகத்துக்கு நேராக பேசாமல் முதுகுக்குப் பின்னால் பேசும் சமுதாயத்துக்கு இதுபோன்ற சரஹா தேவையான ஒன்றுதான் என்றாலும், சொல்ல வேண்டிய மிக முக்கியமான விஷயங்களை எளிதாக சொல்லிவிடலாம் என்றும் கூறிக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment