Tuesday, August 15, 2017

தெரிந்த பெயர், தெரியாத விவரம்: வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்

Published on : 31st July 2017 03:39 PM  |   


*




 தமிழகத்தின் மிக முக்கிய பறவைகளின் சரணாலயங்களுள் ஒன்று வேடந்தாங்கல்.

* ஆங்கிலேய ஆட்சியாளர்களால் 1858-இல் தொடங்கப்பட்ட இந்த சரணாலயம் சுமார் 160 ஆண்டுகாலமாக சுற்றுலா பயணிகளைக் கவர்ந்து வருகிறது.

* இங்குள்ள ஏரியின் பரப்பளவு 75 ஏக்கர். உள்பகுதியில் கடம்ப மற்றும் வேல மரங்கள் நிறைந்து உள்ளது. இம்மரங்களின் மேற்கிளைகளில் கூடு கட்டி முட்டைகள் இட்டு இனப்பெருக்கம் செய்யவும் தங்கி செல்லவும் வெளிநாட்டு பறவைகள் இப்பகுதியைத் தேடி வருகின்றன.

* வேடந்தாங்கலுக்கு அழையா வெளிநாட்டு விருந்தாளிகளாக, பாம்புதாரா, கரண்டிவாயன், கூழைக்கடா, அரிவாள்மூக்கன், வெள்ளை அரிவாள்மூக்கன், முக்குளிப்பான் உள்ளிட்ட வெளிநாட்டு பறவைகள் வந்து தங்கிச் செல்கின்றன.

* பறவைகள் இங்கு வருவதற்கு முக்கிய காரணமாக இங்கு நிலவும் பருவநிலையும், இனவிருத்தி செய்து தங்கள் வம்சத்தை பெருக்கிக் கொள்ளவும் சாதகமான சூழ்நிலை நிலவுகிறது.

* அக்டோபர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை சீசன் காலமாக உள்ளது.

* பறவைகளின் சீசன் காலத்தில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகளை இங்கு காணலாம்.

* வேடந்தாங்கலைச் சுற்றி மதுராந்தகம் ஏரி, கருங்குழி ஏரி உள்ளிட்ட ஏரிகள் நீர் அரண்களாக உள்ளன.

* இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தூரத்தில் உள்ள பறவைகளை காணக்கூடிய வகையில் கோபுர டவர் வழியாக டெலஸ்கோப் பொருத்தப்பட்டுள்ளது. அவற்றின் மூலம் பறவைகளின் உருவத்தை - அதன் நிறத்தை மிக எளிதாக கண்டு களிக்க முடியும். தனியார் கடைகளில் டெலஸ்கோப் கருவியை வாடகைக்குப் பெற முடியும்.

* விளைநிலங்களில் பயிரிடப்படும் நெல், பருப்புவகைகளையும், நீர்நிலைகளில் வாழும் சிறுமீன்கள், புழு, பூச்சிகள் போன்றவைகளையும் இப்பறவைகள் தமது உணவாக உட்கொள்கின்றன.

* ஏரிநீரில் வாழும் இப்பறவைகளின் எச்சம் மிகச்சிறந்த உரமாக வேடந்தாங்கல் பாசன நிலங்களுக்குப் பயன்படுவதால் இப்பகுதி விவசாயிகள் அதிக விளைச்சலை பெறுகின்றனர்.

* பறவைகளுக்கு அச்சமூட்டக்கூடாது என்ற நோக்கில், தீபாவளி நேரத்தில் அதிக சத்தத்துடன் கூடிய பட்டாசுகளை இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக வெடிப்பதில்லை. இதன் காரணமாக வேடந்தாங்கலை "வெடி வெடிக்காத கிராமம்' என அழைக்கிறார்கள்.

* காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே இச்சரணாலயம் செயல்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து 83 கி.மீ தூரத்திலும், மதுராந்தகத்தில் இருந்து 16 கி.மீ தூரத்திலும், செங்கல்பட்டில் இருந்து 25 கி.மீ தொலைவிலும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது.

* இந்த சரணாலயம், சென்னை வன உயிரியல் காப்பாளர் (வண்டலூர்) கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது.
தொகுப்பு : மதுராந்தகம் குமார்

No comments:

Post a Comment

NEWS TODAY 23 AND 24.12.2024