மருத்துவ படிப்பை கைவிட்டால் ரூ.2 கோடி தண்டம் கட்டணும்
பதிவு செய்த நாள்15ஆக
2017
21:26
சென்னை, :'அரசு கல்லுாரிகளில் சேர்ந்து, உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளை பாதியில் கைவிட்டால், அரசு சாரா டாக்டர்கள், இரண்டு கோடி ரூபாய் செலுத்த வேண்டும்' என, மருத்துவக் கல்வி இயக்ககம்தெரிவித்துள்ளது.அரசு மருத்துவமனைகளில், 'சூப்பர் ஸ்பெஷாலிட்டி' எனப்படும், முதுநிலை உயர் சிறப்பு மருத்துவத்துக்கான, டி.எம்., - எம்.சி.எச்., படிப்புகளுக்கு, தமிழகத்தில், 192 இடங்கள் உட்பட, நாடு முழுவதும், 1,215 இடங்கள் உள்ளன. இதற்கும், 'நீட்' தேர்வு அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடப்பது வழக்கம்.
இதில், மாநிலங்களுக்கு இருந்த, 50 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு உள்ளது. இந்தாண்டு முதல், 100 சதவீத இடங்களுக்கும், மத்திய அரசு மாணவர் சேர்க்கையை நடத்துகிறது. இதற்கான, 'ஆன்லைன்' கவுன்சிலிங், இன்று நடைபெற உள்ளது.
இது குறித்து, தமிழக மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழக அரசு மருத்துவக் கல்லுாரிகளில், உயர் சிறப்பு படிப்பில் சேரும், அரசு டாக்டர்கள் மற்றும் அரசு சாரா டாக்டர்கள் அனைவரும், இரண்டு கோடி ரூபாய்க்கான உத்தரவாத ஆவணங்களை, ஏழு நாட்களில், மருத்துவக் கல்வி இயக்ககத்தில் அளிக்க வேண்டும். டாக்டர்கள், அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் பட்சத்தில், தொகைக்கான உத்தரவாதம், தானாக செயலிழந்து விடும்.
அரசு சாரா டாக்டர்கள், படிப்பை முடித்ததும், 10 ஆண்டுகள், அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும். படிப்பை பாதியில் கைவிட்டாலோ, அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற தவறினாலோ, இரண்டு கோடி ரூபாயுடன், அரசிடம் இருந்து பெற்ற, உதவித்தொகையையும்
சேர்த்து செலுத்தவேண்டும்.தொகையை செலுத்தாவிட்டால், ஏற்கனவே படித்த படிப்புகளுக்கான அசல் சான்றிதழ், திருப்பி தர மாட்டாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment