Wednesday, August 16, 2017

பெங்களூருவில் கொட்டி தீர்த்த மழை வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது



பெங்களூருவில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் நகரில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

ஆகஸ்ட் 16, 2017, 05:00 AM
பெங்களூரு,

பெங்களூருவில் நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்து நேற்று அதிகாலை வரை விடிய-விடிய பலத்த மழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக பெங்களூரு தெற்கு பகுதிகளில் கனமழை பெய்தது.

மழையுடன் சூறைக்காற்றும் வீசியது. இதனால் ஜெயநகர், மாதவன் பார்க், வி.வி.புரம், கோரமங்களா, பசவனகுடி, லால்பாக், எச்.எஸ்.ஆர். லே-அவுட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. அவ்வாறு முறிந்த மரங்கள் வீடுகள் மீதும், வீடுகள் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனங்கள், கார்கள் மீதும் விழுந்தன. இதனால் அந்த வாகனங்கள் சேதம் அடைந்தன.

வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது

நகரில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் அந்த வீடுகளில் வசிப்பவர்கள் தூங்க முடியாமல் பரிதவித்தார்கள்.

இதுதவிர எச்.எஸ்.ஆர். லே-அவுட், கோரமங்களா, சாந்திநகர், நாகவாரா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. இதனால் அந்த பகுதிகளில் வசிப்பவர்கள் நேற்று காலையில் தங்களது வீடுகளில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்தார்கள். எச்.எஸ்.ஆர். லே-அவுட் 1-வது செக்டாரில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்குள் மழைநீர் புகுந்தது. அங்குள்ள வகுப்பறைகளுக்குள் தண்ணீர் தேங்கி நின்றது.

கார்கள் மிதந்தன

சாந்திநகரில் உள்ள அரசு பஸ் பணிமனைக்குள் மழைநீர் புகுந்ததால் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த பஸ்களை வெளியே எடுக்க முடியாமல் டிரைவர்கள் சிரமத்தை அனுபவித்தார்கள்.

கோரமங்களாவில் உள்ள பி.எம்.டி.சி. பஸ் நிலையத்தில் உள்ள வாகன நிறுத்தும் இடத்திற்குள் மழைநீர் தேங்கியதால் கார்கள் மிதந்தன.

பெங்களூரு வில்சன் கார்டன் பகுதியில் உள்ள விநாயகர் கோவிலுக்குள் மழை நீர் புகுந்துவிட்டது. அந்த மழைநீரை வெளியேற்றும் பணியில் அந்த பகுதியில் இருந்த முஸ்லிம்களும் ஈடுபட்டனர். இது மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக இருந்தது.

கொட்டி தீர்த்த மழையால் பல்வேறு சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றதால், நேற்று வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் பரிதவித்தார்கள்.

12 செ.மீ. மழை

நேற்று காலையில் இருந்து மாலை வரை நகரின் பல்வேறு இடங்களில் விட்டு விட்டு மழை பெய்தது. பெங்களூருவில் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் 12 செ.மீ. மழை பெய்து இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 23 AND 24.12.2024