Saturday, March 3, 2018

நான்கு மாதம் முன்பு இறந்து போன ஆசிரியைக்கு பிளஸ் 2 தேர்வுப் பணி: பள்ளிக் கல்வித்துறையின் அலட்சியம்

Published : 02 Mar 2018 21:22 IST

கிருஷ்ணகிரி



பிளஸ் 2 தேர்வு- கோப்புப் படம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளஸ்1, பிளஸ் 2 தேர்வு கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவதற்கு 4 மாதம் முன்னர் இறந்து போன ஆசிரியையை நியமனம் செய்த தகவல் வெளியாகியுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

2017-18 கல்வியாண்டிற்கான பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மார்ச் 1-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்த தேர்வு ஏப்ரல் 6-ம் தேதி வரை நடைபெற உள்ளது. பிளஸ் 2 பொதுத் தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 6,903 மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து 8,66,934 மாணவர்கள் மற்றும் 40,686 தனித்தேர்வர்கள் என மொத்தத்தில் 9,07,620 பேர் எழுதுகின்றனர்.

பிளஸ் 2 பொதுத் தேர்வினை நடத்துவதில் எந்தவித முறைகேடுகளும் நடைபெறாத வகையில் அரசுத் தேர்வுத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மேலும் தேர்வு கண்காணிப்புப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு தொடர்ந்து தேர்வு மையங்களில் செயல்முறைகள் குறித்து பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் மாவட்டத் தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் கல்வித் துறை அலுவலர்களுடன் இணைந்து செயல்படுவர். மேலும் தேர்வு முதன்மை கண்காணிப்பாளர், அறை கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்வு கண்காணிப்புப் பணியில் ஈடுபடுபவர்களை தேர்வு செய்வதற்கான முறைகளையும் தேர்வுத்துறை கையேடாக வழங்கி உள்ளது. மாவட்ட அளவில் தேர்வுப் பணியினை கண்காணிக்க ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கல்வித்துறையில் இருந்து இயக்குனர், இணை இயக்குனர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பிற்கான பொதுத் தேர்விற்கான அறைக்கண்காணிப்பாளர் பணிக்கு நியமிக்கப்பட்டவர்களில் 4 மாதத்திற்கு முன் இறந்து போன ஆசிரியர் ஒருவருக்கு பணி அளிக்கப்பட்டுள்ளது என ஆசிரியர்கள் குற்றம் சாட்டினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வணிகவியல் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் இந்துமதி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மரணமடைந்தார். ஆனால் அவருக்கு இந்த ஆண்டு பொதுத் தேர்வில் அரசு மேல்நிலைப் பள்ளி காரப்பட்டு என்ற தேர்வு மையத்திற்கு (தேர்வு மைய எண் 3417) அறைக் கண்காணிப்பாளர் பணி வழங்கப்பட்டுள்ளது.

இந்த பணி நியமனத்தை பார்த்த ஆசிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பள்ளிக் கல்வித்துறையில் அனைத்தும் ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது எனக் கூறி வரும் நிலையில், இறந்து சில மாதங்கள் ஆன ஆசிரியரின் பெயர் தேர்வு கண்காணிப்புப் பணிக்கு வந்துள்ளது என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒன்று என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கூறுகையில், ''ஊத்தங்கரை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றிய வணிகவியல் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் இந்துமதி 4 மாதம் முன்பு இறந்துள்ளார். ஆனால் தேர்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் பெயர்பட்டியல் அவர்கள் பணிபுரியும் பள்ளியில் இருந்து பெற்று அவர்களை தேர்வுப் பணிக்கு ஒதுக்கீடு செய்வோம்.

அதனைத் தொடர்ந்து மீண்டும் ஆசிரியர்களின் அனுமதியை பெற்றுத் தரும்படியும், அவர்களில் யாருக்காவது உடல்நிலை சரியில்லாமலோ, மகப்பேறு விடுப்பில் இருந்தாலோ அது குறித்து தகவல்களை தரும்படியும் கேட்போம்.

அது மட்டுமின்றி தேர்வுப் பணிக்கு தேர்வு செய்யப்படும் ஆசிரியருக்கு தேர்வுப் பணியில் ஈடுபடுவதற்கு ஏதுவாக அவருக்கு தேர்வுப் பணி ஒதுக்கியதற்கான அனுமதி கடித்தத்தை அளிப்பதுடன், அவரை பள்ளிப் பணியில் இருந்து விடுவிக்கும் படி அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு கடிதம் அனுப்புவோம்.

ஆனால் இந்த நடைமுறைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்ட பிறகும் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் இருந்து வணிகவியல் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் இந்துமதி இறந்து விட்டார் என்ற தகவல் வரவில்லை. இதனாலேயே அவருக்கு தேர்வுப் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஆனால் ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் தேவையான அறைக் கண்காணிப்பாளர்களை விட கூடுதலாக பணிக்கு நியமனம் செய்வோம். இதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. தேர்வுப் பணியில் மெத்தனமாக செயல்பட்ட தலைமை ஆசிரியரியரிடம் விசாரணை நடத்தி, துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்'' என்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

University of Madras to implement NEP's Academic Bank of Credits

University of Madras to implement NEP's Academic Bank of Credits The Senate has passed a resolution to create ABC IDs for all students e...