Sunday, March 18, 2018

இன்று யுகாதி கொண்டாட்டம்: தலைவர்கள் வாழ்த்து

2018-03-18@ 01:14:41



சென்னை: இன்று யுகாதி கொண்டாடப்படுவதையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தெலுங்கு மற்றும் கன்னட புத்தாண்டான யுகாதி இன்று கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, தலைவர்கள் தெலுங்கு மற்றும் கன்னட மக்களுக்கு உகாதி திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.கவர்னர் பன்வாரிலால் புரோகித்: யுகாதி பண்டிகையை மகிழ்ச்சிகரமாக, பாரம்பரியமாகக் கொண்டாடும் வேளையில், நாம் அனைவரும் நாட்டின் வளர்ச்சிக்காக ஒருங்கிணைந்து செயல்படவேண்டும். நாம் செய்யும் முயற்சிகள் அனைத்தும் நம் நாட்டின் அமைதிக்காகவும், வலிமைக்காகவும், ஒளிமயமான வளர்ச்சிக்காகவும் உதவவேண்டும் என்று விரும்புகிறேன்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி: பன்னெடுங்காலமாய் தமிழ்நாட்டு மக்களோடு நல்லுறவைப் பேணி இனிதே தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள், மொழியால் வேறுபட்டாலும், வாழும் இடம் ஒன்று என்ற உணர்வோடு,தமிழ் மக்களின் நெஞ்சங்களோடு பின்னிப் பிணைந்து, சகோதர, சகோதரிகளாய் ஒற்றுமையாய் வாழ்ந்து வருவது தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் செயலாகும். தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கு எனது மனமார்ந்த யுகாதி திருநாள் வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

திருநாவுக்கரசர்(காங்கிரஸ்): தமிழகத்தில் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அவர்களது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை பேணிக் காப்பதோடு, தமிழக மக்களின் கலாச்சாரத்தோடு ஒன்றிணைந்து சகோதர, சகோதரிகளாய் வாழ்ந்து வருவது நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு எடுத்துக்காட்டாகும். தமிழர்கள் அனைவருடனும் பாசத்துடன் பழகும் பண்புள்ளோர் என்பதற்கான எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது.

ராமதாஸ்(பாமக): தமிழர்களுக்கும், தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கும் இடையிலான ஒற்றுமையும், சகோதரத்துவமும் ஆல்போல் தழைத்தோங்க நாம் அனைவரும் உறுதியேற்க வேண்டும்.ஜி.கே.வாசன்(தமாகா): தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் உலகில் எங்கிருந்தாலும் அவர்கள் எல்லா வளங்களும், நலங்களும் பெற்று இன்புற்று வாழ வேண்டும்.இதே போல், பல்வேறு அரசியல் தலைவர்களும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024