Sunday, March 18, 2018

ஆன்லைன் மயத்திற்கு பின்னர் தொடரும் அவலம் சர்வர் கோளாறால் முடங்கும் அஞ்சல் துறை: நாள் முழுவதும் தபால் நிலையங்களில் மக்கள் காத்திருக்கும் அவலம்


2018-03-18@ 01:26:48


நாகர்கோவில்: அஞ்சல் துறை முற்றிலும் ஆன்லைன்மயமாக்கப்பட்டுள்ள நிலையில் சர்வர் கோளாறு காரணமாக அடிக்கடி முடங்கி வருகிறது. இந்திய அஞ்சல்துறை முற்றிலும் ஆன்லைன் மயமாக்கப்பட்டு வருகிறது. கோர் பேங்கிங் முறையில் தபால் நிலையங்கள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டுள்ளதால் எந்த ஒரு தபால் நிலையத்திலும் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவும் வசதிகள் உள்ளது. அந்த வகையில் கணக்கு எண்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. மேலும். ‘ட்ராக் மற்றும் ட்ரேஸ்’ மூலம் பதிவு செய்யப்பட்ட கடிதம், பொருட்கள் பட்டுவாடா விவரத்தை அறியும் வசதி உள்ளது. செயற்கைக் கோள் வழியில் பணவிடை அனுப்பும் வசதி, மின்னணு அஞ்சல், இணைய வழி பில் தொகை செலுத்துதல், செல்வமகள் சேமிப்புத் திட்டம், பொது சேமநல நிதி, தேசிய சேமிப்புப் பத்திரம், வங்கி சேமிப்புக் கணக்கு, மாத வருவாய்த் திட்டம், வைப்புத் தொகைத் திட்டங்கள், காப்பீட்டுத் திட்டச் சேவைகள் எல்லாம் ஆன்லைன் சார்ந்ததாக உள்ளது. இதனால் தபால் நிலையங்களை தினமும் நாடுவோர் அதிகரித்து வருகின்றனர்.

இந்தநிலையில்தான் சர்வர் கோளாறு காரணமாக அஞ்சல்துறையின் செயல்பாடுகள் அவ்வப்போது முடங்குகிறது. ஆன்லைன் வசதி வந்த பிறகு பாஸ் புத்தகங்களில் சாதாரணமாக பதிவு செய்து தொகைகளை பெறுவது இல்லை. ரெக்கரிங் டெபாசிட் திட்டங்களுக்காக முகவர்கள் ஒவ்வொரு மாதமும் 15ம் தேதிக்கு முன்னதாகவும் அல்லது 30, 31ம் தேதிக்கு முன்னதாகவும் பணம் செலுத்த வேண்டும். இந்த காலகட்டத்தில்தான் சர்வர் கோளாறு காரணமாக அடிக்கடி கணினிகள் முடங்குவதால் பணம் செலுத்த முடியாமல் முகவர்கள் தவிக்கின்றனர்.

வங்கிகளை போன்றே தபால் சேவைகளில் தாமதம் ஏற்பட்டால் சேவைக்கு ஏற்ப அபராத தொகை செலுத்த வேண்டிய நிலை உண்டு. குறித்த காலத்தில் பணம் செலுத்தப்படாவிட்டால் திட்டத்தின் அடிப்படையில் ரெக்கரிங் டெபாசிட் திட்டங்களில் ₹100க்கு ₹1 அபராதம் செலுத்த வேண்டி வரும். சர்வர் கோளாறு என்றாலும் அதற்கு மாற்று ஏற்பாடுகளும் செய்யப்படுவது இல்லை. இதன் வாயிலாக லட்சக்கணக்கான ரூபாய் தபால்துறைக்கு அபராதமாகவும் கிடைக்கிறது. ஆன்லைன் மயமாக்கப்பட்ட நிலையில் அதற்கேற்ப சர்வர் வசதிகளை மேம்படுத்தவும், தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்தவும் தபால்துறையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாதது இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இதனால் பணி பளு அதிகரிக்கும் வேளையில் சர்வர் கோளாறு உருவாகிறது என்றும் கூறப்படுகிறது. எனவே வங்கிகளுக்கு இணையான சேவைகளை தொடங்கியுள்ள அஞ்சல்துறை தனது தொழில்நுட்ப சேவைகளை மேலும் மேம்படுத்த வேண்டும். ஆன்லைன் பேங்கிங், மொபைல் போன் சார்ந்த நெட்பேங்கிங் பரிவர்த்தனைகளை மேலும் பரவலாக்க வேண்டும் என்பதும் வாடிக்கையாளர்களின் விருப்பம் ஆகும்.

* நாடு முழுவதும் 1 லட்சத்து 54 ஆயிரம் அஞ்சல் அலுவலகங்கள் உள்ளன.
* தமிழகத்தில் மட்டும் 10 ஆயிரத்து 263க்கும் மேற்பட்ட அஞ்சலகங்கங்கள் உள்ளன.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024