Monday, March 19, 2018

வருகிற 25-ந் தேதி சேலம்-சென்னை இடையே பயணிகள் விமான சேவை



வருகிற 25-ந் தேதி சேலம்-சென்னை இடையே விமான சேவை தொடங்குகிறது. இதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

மார்ச் 19, 2018, 03:00 AM

ஓமலூர்,

வருகிற 25-ந் தேதி சேலம்-சென்னை இடையே விமான சேவை தொடங்குகிறது. இதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த காமலாபுரம் பகுதியில் சேலம் விமானம் நிலையம் உள்ளது. இந்த விமான நிலையம் விரிவாக்கம் செய்து பயணிகள் சேவை விரைவில் தொடங்கப்படும் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவித்தது. அதன்படி வருகிற 25-ந் தேதி முதல் சேலம்-சென்னை இடையே பயணிகள் விமான சேவை தொடங்கப்படும் என்றும், சென்னை-சேலம், சேலம்-சென்னை இடையே தினமும் விமானம் இயக்கப்படும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் வருகிற 25-ந் தேதி காமலாபுரத்தில் உள்ள சேலம் விமான நிலையத்தில் நடக்கும் விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு விமான சேவையை தொடங்கி வைக்கிறார்.

இதையொட்டி காமலா புரம் விமான நிலையத்தில் நேற்று மாவட்ட கலெக்டர் ரோகிணி தலைமையில் முன்னேற்பாடு பணிகள் செய்வது குறித்து ஆய்வுக்கூட்டம் நடந்தது. பன்னீர்செல்வம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் செம்மலை, வெங்கடாசலம், வெற்றிவேல் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர், விமான சேவை தொடக்க விழாவிற்கு பந்தல் அமைக்கும் பணியை கலெக்டர் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். மேலும், விமான நிலையத்தில் கலெக்டர் ரோகிணி ஆய்வு செய்து பயணிகள் வசதிகள் குறித்து விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

முதல்-அமைச்சரின் தீவிர முயற்சியால் சேலம் விமான நிலையத்தில் இருந்து விமான சேவை தொடங்கப்பட உள்ளது. இந்த விமான சேவையை வருகிற 25-ந் தேதி நடக்கும் விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். இதற்கான முன்னேற்பாடு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. 3 ஆண்டுகள் ஒப்பந்தம் மூலம் ட்ரூஜெட் நிறுவனம் விமான சேவையில் ஈடுபட உள்ளது. விமானத்தில் 74 இருக்கைகள் இருக்கும்.

சென்னையில் இருந்து தினமும் காலை 9.50 மணிக்கு புறப்படும் விமானம், சேலத்திற்கு 10.40 மணிக்கு வந்தடையும். அதேபோல், சேலத்தில் இருந்து 11 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு 11.50 மணிக்கு செல்லும். இந்த திட்டத்தை 3 ஆண்டுகளுக்கு தொடர்ந்து செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு நபருக்கு ரூ.1,499 கட்டணம் ஆகும். இந்த விமான நிலையத்திற்கு பயணிகள் வந்து செல்வதற்கு ஏதுவாக தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முழுமையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சேலம் விமான நிலையத்திற்கு சுமார் 570 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அதிகபட்ச இழப்பீட்டு தொகை வழங்கிட முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தற்போது விரிவாக்கம் செய்வதற்கான ஆய்வுப்பணிகள் மட்டுமே நடக்கிறது. விரைவில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் கலந்தாலோசித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து அவர்களுக்கு அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு அதிகபட்ச இழப்பீட்டு தொகை வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு கலெக்டர் ரோகிணி கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024