Tuesday, March 13, 2018

டிஜிட்டல் போதை 25: அறிவு வளர்ச்சிக்கு எது அவசியம்?

Published : 10 Mar 2018 12:25 IST

வினோத் ஆறுமுகம்




‘வெளியே எங்கும் சுத்தாதே. இந்தா வீடியோ கேம், வீட்டிலேயே விளையாடு!’ என்று தங்கள் குழந்தைகளைப் பெற்றோர்கள் பொத்திப் பொத்தி வளர்ப்பதற்குக் காரணம் இல்லாமல் இல்லை.

குழந்தைக் கடத்தல், சிறார் பாலியல் சீண்டல்கள் எனத் தினமும் கேள்விப்படும் செய்திகள், குழந்தைகளைவிடவும் பெற்றோர்களை அதிகமாகப் பயமுறுத்தி வருகின்றன. இந்தச் செய்திகள் பெற்றோர் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அதனால்தான் குழந்தைகள் வெளியில் சென்று ஆபத்தைச் சம்பாதிப்பதைவிட வீட்டினுள் கிடந்து மூளை மழுங்கினால்கூடப் பரவாயில்லை என்று பெரும்பான்மையான பெற்றோர் நினைக்கிறார்கள்.

‘விளையாடும்’ சாதி

இன்னொரு முக்கியக் காரணமும் இருக்கிறது. இந்தியச் சமூகம் சாதியச் சமுகம். வெளியில் செல்லும் தங்கள் குழந்தைகள் எந்தச் சாதிக் குழந்தைகளுடன் சேர்கிறார்கள் என்ற கவலை பெற்றோர்கள் பலருக்கு உண்டு. தங்கள் குழந்தைகள் வேறு சாதிக் குழந்தைகளுடன் பழகிவிடக் கூடாது என்பதில் பெற்றோர்கள் பலர் உறுதியாக உள்ளனர். நகரங்களில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் பெற்றோருக்கும் இந்த எண்ணம் உள்ளது.

‘என் பிள்ளை கொஞ்சம் துறுதுறு. யாரையாவது அடித்துவிட்டால் என்ன செய்வது? எதற்குத் தேவையில்லாத வம்பு?’. இப்படி அக்கம்பக்கத்தில் உள்ளவர்களின் குழந்தைகளுடன் தகராறு ஏற்பட்டு, அதனால் பெற்றோர்களிடையே சண்டை வந்துவிடுமோ எனப் பயந்து, தங்கள் குழந்தைகளுக்கு ‘144’ தடைச் சட்டம் போடும் பெற்றோர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

பின்தங்கிவிடாமல் இருக்க…

எங்கே தன் குழந்தை தொழில்நுட்ப விஷயங்களில் பின்தங்கி விடுமோ எனக் கவலைப்பட்டு, குழந்தைகளின் தொழில்நுட்ப அறிவு வளர்ச்சிக்காக அவர்களுக்குப் பல டிஜிட்டல் கருவிகளைப் பெற்றோர் பலர் வாங்கிக் கொடுத்துவிடுகிறார்கள். அந்தக் கருவிகளுடன் எவ்வளவு நேரம் செலவழித்தாலும், கண்டுகொள்வதில்லை. மாறாக, இதையெல்லாம் அக்கம்பக்கத்துப் பெற்றோரிடம் சொல்லி, பெருமை அடித்துக்கொள்ளும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுவிட்டார்கள்.

குழந்தைகளோ பள்ளியைவிட்டு வந்ததும் அவர்களின் கைகள் ‘ஸ்நாக்ஸை’ தேடுவதைவிடவும், கேம் விளையாடுவதற்குப் பெற்றோரின் ‘ஸ்மார்ட்போனை’யே தேடுகின்றன. பள்ளியில் வாங்கும் மதிப்பெண் குறைந்தால் ஒழிய, பெற்றோர்களுக்கு அதன் பாதிப்பு தெரிவதில்லை.

திருத்திக்கொள்வோமா?

நாம் அனைவருமே சமூக விலங்குகள். உண்மையில் சமூகத்தை விட்டு ஒதுங்கி வாழ்ந்தால், அது மனச்சோர்வை அதிகரிக்கும். குழந்தைகளின் மனநிலையும் இதே போன்றதுதான். சமூகத்திடமிருந்துதான் குழந்தைகள் பல விஷயங்களைக் கற்றுக்கொள்கிறார்கள். அதற்கு அனுமதிக்க வேண்டும். அப்படிக் கற்பதுதான் அவர்களின் உடலுக்கும் உள்ளத்துக்கும் நன்மை தரும்.

இயல்பாக ஒத்த வயதுக் குழந்தைகளுடன் அவர்கள் சேர்ந்து விளையாடி, சண்டையிட்டுக்கொண்டு, அவர்களே சமாதானம் ஆகிவிடுவார்கள். இதன்மூலம் அவர்கள் கற்கும் விஷயங்களையும் அதனால் அவர்கள் மனம் பெறும் உற்சாகத்தையும் எந்தத் தொழில்நுட்பமும் கொடுத்துவிடாது.

சிறப்பான மூளையை உருவாக்க…

உங்கள் சுற்றத்தார் புரிந்துகொள்ளவில்லை, ஒத்த வயதுக் குழந்தைகள் இல்லை, விளையாட மைதானம் இல்லை என்பது போன்ற காரணங்களுக்காக வீடியோ கேம்களைக் கொடுக்க வேண்டாம். மாறாக ஓவியம், யோகா, நடனம், இசை போன்ற துறைகளில் உங்கள் குழந்தைக்கு எதில் ஆர்வம் உள்ளதோ, அதில் அவர்களைச் சேர்க்கலாம்.

இவற்றால், தொழில்நுட்பத்தில் உங்கள் குழந்தை ஒன்றும் பின்தங்கி விடாது. தேவையில்லாமல் பயப்படாதீர்கள். நாம் செய்ய வேண்டியதெல்லாம், சிறப்பான மூளையை உருவாக்க உதவுவதுதான். எந்தச் சூழலிலும் புதிய விஷயங்களைக் கற்கும் ஆர்வத்தை உருவாக்கினாலே போதும். அந்தச் சிறந்த மூளை, தன் வாழ்க்கைக்கு என்ன தேவையோ அதைக் கற்றுக்கொள்ளும். அந்த மூளையை நிச்சயம் வீடியோ கேம்களாலோ ஸ்மார்ட் வகுப்புகளினாலோ உருவாக்க முடியாது. அத்தகைய மூளைக்கு நல்ல உடல் அவசியம். நிம்மதியான உறக்கம் அவசியம். நிதானமான வாழ்க்கையும் அவசியம்.

(அடுத்த வாரம்: டிஜிட்டல் சுகாதாரம் கற்கலாமா?)
கட்டுரையாளர், டிஜிட்டல் சமூக ஆய்வாளர்
தொடர்புக்கு: digitaldiet2017@gmail.com

No comments:

Post a Comment

Union minister lands at wrong lounge at airport, probe ordered

Union minister lands at wrong lounge at airport, probe ordered Oppili.P@timesofindia.com 31.10.2024 Chennai : An inquiry has been ordered af...