Tuesday, March 13, 2018

சசிகலாவுக்கு தினக்கூலி 30 ரூபாய்

Added : மார் 13, 2018 02:32

பெங்களூரு: பெங்களூரு சிறையில், காளான் விளைவிக்கும் சசிகலாவுக்கும், தர்பூசணி பயிரிடும் இளவரசிக்கும், தினமும், 30 ரூபாய், கூலி வழங்கப்படுகிறது.சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள, சசிகலா, கர்நாடகா மாநிலம், பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இவர், சிறையில், கன்னடம், கணினி பயிற்சி பெற்று வருகிறார். சசிகலாவை விட, இளவரசி, நன்றாக கன்னடம் பேசுகிறார்.பெண்கள் சிறை அமைந்துள்ள பகுதியில், பழங்கள், காய்கறிகள் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், பச்சை மிளகாய், பப்பாளி, கத்திரிக்காய், காளான், தர்பூசணி என, பல காய்கறிகளும், பழங்களும் விளைவிக்கப்படுகின்றன.இதில், காளான், தர்பூசணி பழங்கள் விளைவிக்கும் வேலையை, முறையே, சசிகலாவும், இளவரசியும் செய்து வருகின்றனர். இதற்கு கூலியாக, அவர்களுக்கு, நாளொன்றுக்கு, 30 ரூபாய் வழங்கப்படுகிறது. தோட்ட வேலை, கன்னடம், கணினி பயற்சி முடித்த பின், பொழுது போக்குவதற்காக, வளையல் செய்வது, மணிகள் கோர்ப்பது போன்ற, அழகு கலை பொருட்கள் செய்யும்பணியையும், சசிகலா ஆர்வத்துடன் செய்து வருகிறார்.சமீபத்தில் சிறைக்கு வந்த, தேசிய மகளிர் ஆணைய தலைவர், ரேகா சர்மாவுக்கு, தான் செய்த வளையல்களை, சசிகலா பரிசாக வழங்கியுள்ளார்.'இதற்கு, எவ்வளவு பணம்' என, ரேகா கேட்டு, கைப்பையில் பணத்தை எடுக்க முயற்சித்துள்ளார். அப்போது, 'பணம் வேண்டாம்; என் பரிசாக வைத்து கொள்ளுங்கள்' என, சசிகலா கூறியுள்ளார்.சிறையின் மற்றொரு பகுதியில் அடைக்கப்பட்டுள்ள, சசிகலாவின் உறவினர், சுதாகரன், எப்போது பார்த்தாலும், வாசனை திரவியம் அடித்து கொள்வதும், தன்னை அழகு படுத்தி கொள்வதிலுமே காலத்தை கழித்துவருகிறார்.ஏதாவது பணி ஒதுக்கினாலும், சரியாக செய்வதில்லை என, சிறைத்துறை வட்டாரங்கள்தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024