தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரியில் புதிதாக 32 இருக்கைகள்..!
இ.கார்த்திகேயன் 02.03.2018
ஏ.சிதம்பரம்
துாத்துக்குடி மருத்துவக் கல்லுாரியில் வரும் கல்வியாண்டில் இருந்து புதிதாக 32 இருக்கைகளுடன் மருத்துவ மேல்படிப்பு துவங்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெறும்” என மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி கடந்த 2000-ம் ஆண்டு 100 எம்.பி.பி.எஸ் இருக்கைகளுடன் துவங்கப்பட்டது. கடந்த 2013-ம் ஆண்டு 100-ல் இருந்து 150-ஆக இருக்கைகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டது. கடந்த 18 ஆண்டுகளில் இந்தக் கல்லுாரியில் இருந்து 1,400 மருத்துவ மாணவர்கள் மருத்துவ படிப்பை முடித்து பட்டம் பெற்று வெளியேறி உள்ளனர். இதுவரையில், துாத்துக்குடி அரசு மருத்துவக்கல்லுாரியில் மேற்படிப்பு இல்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில் வரும் கல்வியாண்டு முதல் மருத்துவ மேல்படிப்புக்காக 32 புதிய இருக்கைகள் துவக்கப்பட உள்ளது.
அரசு பொதுமருத்துவத் துறையில் (General medicine) 10 பட்ட மேற்படிப்பு இருக்கைகளும், அறுவைச் சிகிச்சைத் துறையில் (General surgery) 10 பட்ட மேற்படிப்பு இருக்கைகளும், குழந்தை நலத்துறையில்(pediatrics) 6 பட்டமேற்படிப்பு இருக்கைகளும், மகப்பேறு துறையில் (Obstetrics & Gynecology) 6 பட்டமேற்படிப்பு இருக்கைகள் என மொத்தம் 32 பட்டமேற்படிப்ற்கான புதிய இருக்கைகள் துவக்கப்பட உள்ளது. இதற்கான ஒப்புதல் இந்திய மருத்துவக் குழுவால் வழங்கப்பட்டுள்ளது. வரும் கல்வியாண்டு முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும். இதன் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் மேலும் சிறந்த சிகிச்சையைப் பெற முடியும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment