Thursday, March 22, 2018

ஓய்வு வயது வரம்பு உயர்த்தப்படாது!


மத்திய அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய வயது வரம்பை 60லிருந்து 62 ஆக உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய பணியாளர் அமைச்சகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

மார்ச் 21ஆம் தேதி மாநிலங்களவையின் கேள்வி நேரத்தின்போது, ‘மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயது வரம்பு மாற்றப்படுகிறதா?’ என்று கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய பணியாளர் துறை இணையமைச்சர் ஜித்தேந்திர சிங், “அரசிடம் அது போன்ற எந்தத் திட்டமும் இல்லை” என்று பதிலளித்தார். தற்போதைய நிலையில் இந்தியாவில் சுமார் 48.41 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பணியில் உள்ளனர். இவர்களின் ஓய்வு வயது வரம்பு 60லிருந்து 62 ஆக உயர்த்தப்படலாம் என்ற கூறப்பட்ட நிலையில், மத்தியப் பணியாளர் அமைச்சகம் அதைத் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

அதேநேரம், நாட்டிலுள்ள ஓய்வூதியதாரர்கள் பயன்பெறும் வகையில் விரைவில் அறிவிப்பு ஒன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொழிலாளர் ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் குறைந்தபட்ச மாதாந்திரத் தொகையை உயர்த்தும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகள் மற்றும் ஓய்வூதியம் இரட்டிப்பாக்கப்பட்டால் ஆகும் செலவு ஆகியவற்றைக் கணக்கிட்டுக் கூறும்படி தொழிலாளர் சேமலாப நிதிய அமைப்பிடம் மத்திய தொழிலாளர் அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TO DAY 31.10.2024